வாக்யேயக்காரர்களும் பாடலாசிரியர்களும்

லலிதாராம் சமீபத்தில் ஜி.என்.பி.யின் கீர்த்தனைகள் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதை பலமுறை படித்தேன். அது தொடர்பான சிந்தனைகள் இங்கே கட்டுரையாக எழுதி வைத்திருக்கிறேன்.
கர்நாடக சங்கீதத்தில் ஒரு ராகத்தை பாடலில்தான் புரிந்துகொள்ளமுடியும். ஹிந்துஸ்தானி சங்கீதம்போல ராகத்தை தனியாக வைக்கக்கூடிய விதத்தில் நமது சங்கீதம் உருவாக்கப்படவில்லை. கர்நாடக சங்கீதத்தில் பாடல் என்பது ராகத்தை மாட்டிவைக்க உதவும் ஒரு கோட் ஸ்டாண்ட் போல. அவ்வளவுதான். இதில் பாடல்களுக்கென்று சிறப்பான இடம் என்று எதுவும் கிடையாது. ஒருமுறை எனது ஆசிரியர் அடாணா ராகத்தை ஒரு முக்கால் மணி நேரம் பாடிக்காட்டினார். எப்படி ஐயா இது சாத்தியம் என்றபோது எனக்கு அடாணாவில் மட்டும் ஒரு 18 பாடல்கள் முறையாகத் தெரியும், இதுகூட பாடவில்லை என்றால்தான் தப்பு என்றார். ஏனெனில் கர்நாடக சங்கீதத்தில் பாடல்கள் வழியாக மட்டுமே ராகத்தை போதிக்கும் முறை உள்ளது.
அப்போதும், பாடல்கள் என்று நாம் தமிழ்ப்படுத்தினாலும், பதம், ஜாவளி, கீர்த்தனை என்று அதற்கென பல வடிவங்களை உண்டாக்கியிருக்கிறார்கள். சுலபமாக இருக்க இந்தக்கட்டுரையில் பாடல் என்றே நான் குறிக்கிறேன். பாடல்களை இயற்றுபவர்கள் பாடலாசிரியராக குறிக்கப்படுவார்கள். வாக்யேயக்காரர் என்னும் வடமொழிச் சொல் இங்கு பாடலாசிரியர் என்ற தொனியிலேயே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உண்மையில் ஆசுகவி போன்று பாடல்கள் புனைபவர்களே வாக்யேயக்காரர் எனும் சொல்லுக்குத் தகுதியானவர்கள். அவர்களுக்கு அபாரமான சங்கீத ஞானமும், மொழிப்புலமையும் தேவைப்படுகிறது. பாடலாசிரியர்களுக்கு மொழிப்புலமை மட்டுமே போதுமானதாக இருக்கிறது. உதாரணமாக தியாகராஜர், கோபாலக்ருஷ்ண பாரதி போன்றவர்களை வாக்யேயக்காரர்களாக குறிக்கலாம். தற்காலத்தில் அங்கங்கு பல பாடலாசிரியர்கள் கர்நாடக சங்கீத பாடல்களை கீர்த்தனைகள் என்ற பெயரில் எழுதி மனிதர்களை மிகவும் பாடாய் படுத்துகிறார்கள். அதன்மேல் ஏதாவது ஒரு ராகத்தின் பெயரையும் எழுதிவைத்திருப்பார்கள். ஆனால் அதை அந்த ராகத்தில் பாடுவது எப்படி என்று கூடத்தெரியாது. இவர்கள் ராகத்தைதேர்ந்தெடுக்கும் விதம் மிகவும் சுலபமானது. கருணை ரசம் என்றால் அதற்கு சில ராகங்கள், உதாரணமாக சஹானா, யதுகுல காம்போதி போன்றவை. தற்காலத்தில் அதற்கு ரேவதி, சிவரஞ்சனி போன்றவை. இவர்களது பாடல் நீளங்களும் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் பாடல்களின் மீட்டர்களுக்கு அமைக்கப்பெற்றவை. அப்போதுதானே ஆதி தாளத்தில் நிற்கும்? எங்கும் டெம்ப்ளேட் மயம்.
நான் இத்தகைய பாடலாசிரியர் பலரை சந்தித்திருக்கிறேன். மேடையை நோக்கிப் போகும்போதோ அதை விட்டு கீழே இறங்கி வந்ததும் கையில் ஒரு தாளோடு வந்து நிற்பார்கள். இது பெருமாளே என் கனவில் தோன்றி இதை கவனம் செய்யச்சொன்னார் என்பதுபோலவெல்லாம் பேசுவார்கள். படித்தால் சிரிப்புக்குப் பஞ்சமில்லை. ஆனாலும் அவரது மனம் கோணாமல் ஏதாவது சொல்லிவிட்டு தப்பித்துவிடலாம். சிலகாலம் கழித்து ஃபாலோ-அப் வேறு செய்வார்கள். என்ன இன்றைக்கு கச்சேரியில் அந்தப்பாடலை பாடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன் என்பார்கள். பாடலுக்கு மெட்டமைக்கும் அளவுக்கு ஞானமில்லை பார்க்கிறேன் என்று வழிந்துவிட்டு நடையை கட்டிவிடுவேன். ஒரு நண்பனுடன் பேசிக்கொண்டிருந்தேன் அப்போது அவரது பழைய ஆசிரியர் ஒருவர் கம்பரமாயணம் என்று அறியப்படும் ராமாயணத்தை இவர் தமிழில் மொழிபெயர்த்ததாகவும் அடுத்த கட்டமாக பெரியபுராணத்தையும் தமிழ்ப்படுத்தப்போவதாகச் சொல்லி கிலி ஏற்படுத்தியிருக்கிறார்.
பாடல்கள் புனைவது என்று ஒரு கோஷ்டி உண்டு. புனைதல்தான் அதன் வேலை. அதாவது, வார்த்தைகளை கோர்த்துப்போட்டு, எதுகை, மோனை, இயைபு என்றெல்லாம் இழைத்து, மிகவும் ஆபாசமாக ஒரு பாடலை உருவாக்கிக்காட்டுதல். (ஆபாசம் என்று நான் சொல்வது இக்காலத்தைய பொருளில் இல்லை) அதற்கு ராகம் போட்டு பாட ஒரு வித்வான் கிடைக்காமலா போய்விடுவார்? அல்லது இருக்கவே இருக்கிறது சொந்தம் பந்தம் என்றவகையில் பாடகர்கள். இவைகளை நான் ஒரு துளியும் பொருட்படுத்துவதில்லை. எவ்வளவுதான் உஷாராக இருந்தாலும் எப்படியாவது ஒன்றிரண்டு தவிர்க்கமுடிவதில்லை. ஏனெனில் இவைதான் எண்ணிக்கையில் அதிகம்.தமிழிசை இயக்கம் என்று ஒன்று எப்படியாவது பாடகர்களை தமிழில் பாடவைத்துவிடவேண்டும் என்று முயன்று முனைந்தது. அது ஓரளவுக்கு வெற்றி பெற்றாலும், அதன் தரம் மிகவும் குறைபட்டது. கோபாலக்ருஷ்ண பாரதி, முத்துத்தாண்டவர் போன்ற ஒரு சிலரைத்தவிர தமிழில் பாடுவதற்கு உருப்படியான பாடல்கள் கிடையாது. இதை உறுதியாகச்சொல்லலாம். பாபநாசம் சிவன், அம்புஜம் க்ருஷ்ணா போன்ற பாடலாசிரியர்களின் பாடல்கள் அதிகமாக தற்போது பாடப்படுகிறது. ஆனாலும், அவர்களின் பாடல்களில் ஒருசிலவற்றைத்தவிர மற்றதெல்லாம் தேறாது என்பது நிதர்சனமாகத் தெரிகிறது.
தமிழில் பாடல் புனைபவர்களுக்கும் புனைய நினைப்பவருக்கும்
இருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது சங்கீத ஞானமும் தமிழ் மொழி ஆளுமையும்தான். இதில் சங்கீதஞானம் அதிகமிருப்பவர்கள் பாடல் எழுத முனைவதில்லை. அப்படி முனைந்தாலும் அவை தெலுகிலோ, சம்ஸ்க்ருதத்திலேயோ இருக்கிறது. தாய் மொழி தமிழாக இருந்தாலும். காரணம் இவர்கள் தெலுகிலோ சம்ஸ்க்ருதத்திலோ பண்டிதர்கள் என்றல்ல. சில நூறு பாடல்களைப்பார்த்து அவைகளை கலந்து போட்டு ஒரு பாடலை உருவாக்கிவிடுவதே. இவர்களுக்கு மேன்மையான பாடல்களை உருவாக்கும் வாழ்கை வாய்ப்பதில்லை. தியாகராஜர் இப்படிப்பட்ட பாடல்களை உருவாக்கினார் என்றால் அவரது வாழ்க்கை அதற்கான அத்தனை சாத்தியங்களும் நிறைந்தது. அத்தனை அழுத்தமான, அர்த்தமுள்ள, ஆழமான வாழ்க்கையிலிருந்தே அத்தகைய பாடல்கள் பிறக்கமுடியும். அது வரவில்லை என்றால்தான் ஆச்சரியம். தற்காலத்தில் அதுபோன்று ஆழமான சங்கீத ஞானமும், அர்த்தமுள்ள வாழ்க்கையும் வாழும் ஒருவரும் எனக்குத்தென்படவில்லை. இவர்கள் பாடல் எழுதுவது என்பது சினிமாக்காரர்கள் பாடல் எழுதுவது போலத்தான். இல்லாத ஒரு உணர்ச்சியை கற்பனை செய்து எழுதுவது. அதற்கு மொழிமட்டுமே போதும். அவர்களுக்கு உதவ அங்கே இசையமைப்பாளர்கள் வந்துவிடுகிறார்கள். அதுவும் அவை காலத்தை கடந்து நிற்கவேண்டும், நமது கற்பனைக்கு இடமளிக்கவேண்டும் என்ற நிபந்தனையும் கிடையாது. ஆனால் இவ்விஷயத்தில் கர்நாடக சங்கீதம் இன்னும் நுண்மையானது. இதற்கு பாடல்கள் புனைவதற்கு மிகவும் நுண்மையான இசையறிவும், மொழியறிவும் தேவைப்படுகிறது. இது அத்தனைக்கும் மேலாக மிகவும் அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கை.
இத்தகைய வாக்யேயக்காரர்கள் தமிழில் தோன்றுவது என்பது இனி முடியாது, நடக்கப்போவதுமில்லை. தமிழில் பாடல்கள் பாடுவது என்பதும் இதுவரை இயற்றப்பட்ட கீர்த்தனைகள் மட்டுமே நிற்கும். இனி வருங்காலத்தில் புற்றீசல்போல் தோன்றினாலும் 20 வருடங்கள் கூட தாங்கும் கீர்த்தனைகள் வராது. என்ன இவ்வளவு உறுதியாக சொல்கிறேனே என்று பார்க்கிறீர்களா? என்ன செய்ய நிதர்சனத்தை இப்படித்தான் சொல்லத்தோன்றுகிறது.
பின்னர் ஒரு நாள் ஒவ்வொரு பாடலாசிரியர் குறித்தும் எனது கருத்தை பதித்துவைக்கிறேன்.
Advertisements

அக்ஷரசுத்தம்

நேற்று சற்றே தொலைதூரப் பயணம் செல்லநேர்ந்தது. நானே ஓட்டிக்கொண்டிருந்தேன். பாடல்கள் கேட்டுக்கொண்டே கார் ஓட்டுவது என்பது எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. இப்போதெல்லாம் கிட்டத்தட்ட பாடல்கள் கேட்பதே காரில் மட்டும்தான் என்றாகிவிட்டது. ஏதாவது சிடி இருக்கிறதா என்று டேஷ்போர்டை துழாவினேன். என் ட்ரைவர் அவரது ரசனைக்கு பல சிடிக்களை அதற்குள் திணித்திருந்தார். அவை சமீபகாலத்தைய சினிமாப்பாடல்களின் தொகுப்புகள். அவைகளை கேட்குமளவுக்கு எனக்கு ஆர்வமோ தைரியமோ பொறுமையோ கிடையாது. எனக்கு பயணத்தின்போது செவ்வியல் அல்லது மிகவும் பழைய சினிமாப்பாடல்களே கேட்கப்பிடிக்கும். ஒருமுறை ட்ரைவரிடம் சேஷகோபாலன் சிடி ஒன்றை கொடுத்து போடச்சொன்னேன். ப்ருந்தாவன சாரங்காவில் கீர்த்தனை அழகாக வந்திருந்தது. வழியில் ஒரு 3 இடங்களிலாவது அந்த சௌந்தரராஜரிடமே நேரடியாக கொண்டுசேர்த்திருப்பார். மூன்று முறை டீ குடித்தபின்னும் கொட்டாவியாக விட்டுக்கொண்டிருந்தார். அன்றிலிருந்து அவரது ரசனையில் நான் தலையிடுவதில்லை.
சீட்டுக்கு பின்னால் பையிலும் சிலசமயம் ஏதாவது கிடக்கும் என்பதால் தேடிப்பார்த்தேன். சில சிடிக்கள் கிடைத்தது. எடுத்துப்போட்டு கேட்டுக்கொண்டே வந்தேன். ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது. இவர்கள் பாடுவது பெரும்பாலும் தவறான உச்சரிப்புக்கள் அல்லது சுக்குமி ளகுதி ப்பிலி என்ற ரீதியிலேயே இருக்கிறது. கர்நாடக சங்கீதத்தில் தெலுகு மற்றும் சம்ஸ்க்ருத பாடல்கள்தான் அதிகம். இரண்டு மொழிகளும் தெரியாமல், குறைந்தபட்சம் அந்தப்பாடலுக்காகவாவது உச்சரிப்புகளை கற்றுக்கொண்டு பாடினால் நன்றாக இருக்குமல்லவா? இசைக்கு பாடல்வரிகள் தேவையில்லை என்பதுதான் எனது நிலைப்பாடு. எப்போதுமே. பாடல்வரிகள் என்று ஒப்புக்கொண்டபின் அதை தவறாகப்பாடுவதில் எனக்கு ஒப்புதல் இல்லை. தமிழை சாதாரணமாக யாராவது தவறாக உச்சரிக்கும்போது ஆய்,ஊய் என்று கத்தும் தமிழ் ஞான பண்டிதர்கள் அதே ஞாயத்தை மற்றமொழிகளுக்கும் சற்றே எடுத்துச்சென்றால் நன்றாக இருக்கும். உதித் நாராயணன் என்றொரு பாடகர் வார்த்தைகளை தவறாக உச்சரித்ததனால் தமிழ் கலாசாரமே மாறிவிடும் அபாயம் வந்தது.
தெலுகு எனது தாய்மொழி. தமிழ் நான் விரும்பி கற்றுக்கொண்டது. எனக்கு தமிழைவிட தெலுகில் உரையாடுவது மிகவும் இயல்பானதாகவே இருக்கிறது. எனது தமிழ்/தெலுகு உச்சரிப்பு மிகப்பெரும்பாலும் சரியாகவே இருக்கும். மேடைகளில் பாடும்போது தமிழிலும் சரி தெலுகிலும் சரி உச்சரிப்புக்கு மிக அதிக கவனம் கொடுக்கப்படவேண்டும் ஏனெனில் ஒரு சிறு தவறில் பொருள் மாறிவிடும் அபாயம் அதிகம். அதுசரி பாடுவது யாருக்கு புரியப்போகிறது?
விஜய் சிவா- அக்ஷரசுத்தமான கர்நாடக இசை பாடகர்
இன்றைய தேதியில் கர்நாடக சங்கீத பாடகர்களில் விஜய்சிவா என்ற பாடகரைத்தவிர வேறு எந்த பாடகருக்கும் உச்சரிப்பு ஆளுமை கிடையாது. ஹைதராபாத் சகோதரர்களும், பாலமுரளியும் தெலுகிலும், சம்ஸ்க்ருதத்திலும், கன்னடத்திலும் நன்றாகப்பாடினாலும் தமிழில் கோட்டை விட்டுவிடுகின்றனர். சின்னக்கல்லு பெத்தலாபம், பெத்தகல்லு சின்னலாபம் போலத்தான் முடிகிறது. டி.கே.பட்டம்மாள் அவர்களுக்கு இந்தப்புகழ் சென்று சேரவேண்டும். அக்ஷரசுத்தமாக பாடவேண்டும் என்று முயன்று பாடியவர், சீடர்களுக்கும் முன்வைத்தவர். எம்.எஸ்.க்கு பெரிய புகழாக அமைந்தது அவரது உச்சரிப்புச்சுத்தமே, இதற்காக அந்தந்த மொழி விற்பன்னரிடம் அப்பாடலின் பொருள், உச்சரிப்பு முதலியவற்றை சரிசெய்தபின்னரே மேடையேற்றுவார் என்று சொல்வார்கள்.
அப்போதும் உச்சரிப்புசுத்தம் சற்றும் இல்லாது பாடிய மதுரை மணி அய்யர், ஜி.என்.பி. போன்றவர்களும் பெரும்புகழுடன் இருந்திருக்கிறார்கள். இன்று, நிலமை மிகவும் மோசமாக, அதலபாதாளத்திற்குள் விழுந்துகிடக்கிறது. தேவையற்ற முகபாவனைகளும், வாயை அஷ்டகோணலாக்கிக்கொள்வதும், ச-வை ஷ-வென்றும் ஜ-வென்றும், ந,ன,ண பேதமின்றி க்ருஷ்ணா,க்ருஷ்னா,க்ருஷ்நா என அனைத்துவகையான உச்சரிப்புகளிலும் போட்டு, ர,ற வேறுபாடு கூடப்புரியாமல் குதறி ரசிகர்களை பாடாய் படுத்துகிறார்கள்.
இப்போது தவறான உச்சரிப்புகளின் தலைவர் என்றால் யேசுதாஸ், உன்னிக்ருஷ்ணன், டி.என்.சேஷகோபாலன் போன்றவர்கள் சட்டென்று நினைவுக்கு வருகிறார்கள். இவர்களின் ரசிகர்களுக்கும் இவரது பாடல்களிலிருக்கும் தவறு புரிவதே இல்லை போலும். இந்நிலையில் விஜய்சிவா போன்ற கலைஞர்கள் மிகவும் மதிக்கப்படவேண்டியவர்கள். அவர்களது முனைப்பும், முயற்சியும் பாராட்டப்படவேண்டியது.
இவரது பாட்டைகேட்டால் வரிகளை நாம் நோட்டுப்புத்தகத்தில் தவறில்லாமல் எழுதிக்கொள்ளமுடியும். இதை உறுதியாகச்சொல்லமுடியும்.

மீண்டும்…!!

பலமுறை ப்ளாக் என்று தொடங்கி தொடர்ந்து எழுதாமல் மூட்டை கட்டி வைத்துவிட்டேன்.இருந்தாலும் சற்றும் மனம் தளராது மீண்டுமொருமுறை ப்ளாக் தொடங்கியிருக்கிறேன்.இந்தமுறையாவது தொடர்ந்து எழுதவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.இதில் எனக்குத்தெரிந்த அளவில் கர்நாடக-ஹிந்துஸ்தானி செவ்வியல் இசைகுறித்தும், திரைப்பட பாடல்கள் குறித்தும் எழுதவேண்டும் என்று முடிவு.

இசைகுறித்து எழுதுவதில் ஒரு பெரும் சிக்கல் உள்ளது.இதில் எழுதப்படுவதெல்லாமே தனிப்பட்ட கருத்தாக அமையுமே ஒழிய திட்டவட்டமான முடிவான கருத்து அல்ல.ஏனெனில் இசைகுறித்து முடிவான கருத்து கூற யாராலும் முடியாது.அது முடிவான கருத்தாக அமைந்தால் அவரது இசை குறித்த அறிதல் பிழைபட்டது என்று நாம் உடனடியாக சொல்லிவிடலாம்.எனவே எனது தரப்புக்களை என்னுடைய இன்றைய அறிவிற்கெட்டியவரை எடுத்துவைக்க முயல்கிறேன்.இதில் இந்திய இசை குறித்தே பெரும்பாலும் எனது கருத்துக்கள் இருக்கும்.ஏனெனில் நான் அறிந்தது அதுவே.எனக்கு ராக், பாப் போன்ற இசைவகைகளில் பரிச்சயம் உண்டென்றாலும் ஆர்வம் இல்லை.

மேலும் இதில் என் தனிப்பட்ட அனுபவம் சார்ந்த மானுடம் குறித்தும் எழுதுவதாக எண்ணம்.எனது கருத்துக்களை என் நண்பர்களோடு விவாதிப்பதுண்டு.என் கல்லூரிக்கால தோழன் டி.எம்.ஆர்.அவனுக்கு இசைகுறித்த அறிவும், ஆர்வமும் அதிகம்.இவனிடம் நான் பெற்றது பல.அடுத்து வேட்டைபெருமாள், இவனுக்கு நல்ல இசை ரசனை உண்டு.என்னுடன் சிலகாலம் இசையும் பயின்றிருக்கிறான்.இவனது கருத்துக்களை நான் ஆர்வமுடன் எதிர்பார்ப்பேன்.இசை ஆர்வமும் நல்ல ரசனையும் கொண்டவன்.நான் பாடியதை மிகவும் அதிகமாக கேட்டவன் இவன் என்று சுலபமாக சொல்லிவிடலாம்.இவன் எனக்கான சோதனை எலி என்று சொல்லலாம்.என்னுடைய இசை ரசனையை மேம்படுத்தியதில் டி.எம்.ஆர் (லலிதாராம்), வேட்டைபெருமாள் ஆகியோருக்கு பெரும்பங்குண்டு.இசை கட்டுரையாளர் ஷாஜி அவர்களுடன் சமீபகாலமாக சிலமுறை இசைகுறித்து பேசியிருக்கிறேன்.அவருடன் இன்னமும் அதிகமாக இசை குறித்து விவாதித்து மேற்கத்திய இசை ஆளுமையை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

ஜெயமோகன்.எனக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுக்கும் ஆசான்.இவரை கூர்ந்து கவனித்துவருகிறேன்.இவரது மொழியாளுமையும், கற்பனைகளும், மானுடம் சார்ந்த கருத்துக்களும் என் ஆளுமையை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது.

இதில் தொடர்ந்து என் கருத்துக்களை பதிந்து வைக்கவேண்டும்.என்றைக்காவது என்னுடைய ரசனையின் வரலாற்றை திரும்பிப்பார்க்க உதவும்.

%d bloggers like this: