வாக்யேயக்காரர்களும் பாடலாசிரியர்களும்

லலிதாராம் சமீபத்தில் ஜி.என்.பி.யின் கீர்த்தனைகள் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதை பலமுறை படித்தேன். அது தொடர்பான சிந்தனைகள் இங்கே கட்டுரையாக எழுதி வைத்திருக்கிறேன்.
கர்நாடக சங்கீதத்தில் ஒரு ராகத்தை பாடலில்தான் புரிந்துகொள்ளமுடியும். ஹிந்துஸ்தானி சங்கீதம்போல ராகத்தை தனியாக வைக்கக்கூடிய விதத்தில் நமது சங்கீதம் உருவாக்கப்படவில்லை. கர்நாடக சங்கீதத்தில் பாடல் என்பது ராகத்தை மாட்டிவைக்க உதவும் ஒரு கோட் ஸ்டாண்ட் போல. அவ்வளவுதான். இதில் பாடல்களுக்கென்று சிறப்பான இடம் என்று எதுவும் கிடையாது. ஒருமுறை எனது ஆசிரியர் அடாணா ராகத்தை ஒரு முக்கால் மணி நேரம் பாடிக்காட்டினார். எப்படி ஐயா இது சாத்தியம் என்றபோது எனக்கு அடாணாவில் மட்டும் ஒரு 18 பாடல்கள் முறையாகத் தெரியும், இதுகூட பாடவில்லை என்றால்தான் தப்பு என்றார். ஏனெனில் கர்நாடக சங்கீதத்தில் பாடல்கள் வழியாக மட்டுமே ராகத்தை போதிக்கும் முறை உள்ளது.
அப்போதும், பாடல்கள் என்று நாம் தமிழ்ப்படுத்தினாலும், பதம், ஜாவளி, கீர்த்தனை என்று அதற்கென பல வடிவங்களை உண்டாக்கியிருக்கிறார்கள். சுலபமாக இருக்க இந்தக்கட்டுரையில் பாடல் என்றே நான் குறிக்கிறேன். பாடல்களை இயற்றுபவர்கள் பாடலாசிரியராக குறிக்கப்படுவார்கள். வாக்யேயக்காரர் என்னும் வடமொழிச் சொல் இங்கு பாடலாசிரியர் என்ற தொனியிலேயே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உண்மையில் ஆசுகவி போன்று பாடல்கள் புனைபவர்களே வாக்யேயக்காரர் எனும் சொல்லுக்குத் தகுதியானவர்கள். அவர்களுக்கு அபாரமான சங்கீத ஞானமும், மொழிப்புலமையும் தேவைப்படுகிறது. பாடலாசிரியர்களுக்கு மொழிப்புலமை மட்டுமே போதுமானதாக இருக்கிறது. உதாரணமாக தியாகராஜர், கோபாலக்ருஷ்ண பாரதி போன்றவர்களை வாக்யேயக்காரர்களாக குறிக்கலாம். தற்காலத்தில் அங்கங்கு பல பாடலாசிரியர்கள் கர்நாடக சங்கீத பாடல்களை கீர்த்தனைகள் என்ற பெயரில் எழுதி மனிதர்களை மிகவும் பாடாய் படுத்துகிறார்கள். அதன்மேல் ஏதாவது ஒரு ராகத்தின் பெயரையும் எழுதிவைத்திருப்பார்கள். ஆனால் அதை அந்த ராகத்தில் பாடுவது எப்படி என்று கூடத்தெரியாது. இவர்கள் ராகத்தைதேர்ந்தெடுக்கும் விதம் மிகவும் சுலபமானது. கருணை ரசம் என்றால் அதற்கு சில ராகங்கள், உதாரணமாக சஹானா, யதுகுல காம்போதி போன்றவை. தற்காலத்தில் அதற்கு ரேவதி, சிவரஞ்சனி போன்றவை. இவர்களது பாடல் நீளங்களும் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் பாடல்களின் மீட்டர்களுக்கு அமைக்கப்பெற்றவை. அப்போதுதானே ஆதி தாளத்தில் நிற்கும்? எங்கும் டெம்ப்ளேட் மயம்.
நான் இத்தகைய பாடலாசிரியர் பலரை சந்தித்திருக்கிறேன். மேடையை நோக்கிப் போகும்போதோ அதை விட்டு கீழே இறங்கி வந்ததும் கையில் ஒரு தாளோடு வந்து நிற்பார்கள். இது பெருமாளே என் கனவில் தோன்றி இதை கவனம் செய்யச்சொன்னார் என்பதுபோலவெல்லாம் பேசுவார்கள். படித்தால் சிரிப்புக்குப் பஞ்சமில்லை. ஆனாலும் அவரது மனம் கோணாமல் ஏதாவது சொல்லிவிட்டு தப்பித்துவிடலாம். சிலகாலம் கழித்து ஃபாலோ-அப் வேறு செய்வார்கள். என்ன இன்றைக்கு கச்சேரியில் அந்தப்பாடலை பாடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன் என்பார்கள். பாடலுக்கு மெட்டமைக்கும் அளவுக்கு ஞானமில்லை பார்க்கிறேன் என்று வழிந்துவிட்டு நடையை கட்டிவிடுவேன். ஒரு நண்பனுடன் பேசிக்கொண்டிருந்தேன் அப்போது அவரது பழைய ஆசிரியர் ஒருவர் கம்பரமாயணம் என்று அறியப்படும் ராமாயணத்தை இவர் தமிழில் மொழிபெயர்த்ததாகவும் அடுத்த கட்டமாக பெரியபுராணத்தையும் தமிழ்ப்படுத்தப்போவதாகச் சொல்லி கிலி ஏற்படுத்தியிருக்கிறார்.
பாடல்கள் புனைவது என்று ஒரு கோஷ்டி உண்டு. புனைதல்தான் அதன் வேலை. அதாவது, வார்த்தைகளை கோர்த்துப்போட்டு, எதுகை, மோனை, இயைபு என்றெல்லாம் இழைத்து, மிகவும் ஆபாசமாக ஒரு பாடலை உருவாக்கிக்காட்டுதல். (ஆபாசம் என்று நான் சொல்வது இக்காலத்தைய பொருளில் இல்லை) அதற்கு ராகம் போட்டு பாட ஒரு வித்வான் கிடைக்காமலா போய்விடுவார்? அல்லது இருக்கவே இருக்கிறது சொந்தம் பந்தம் என்றவகையில் பாடகர்கள். இவைகளை நான் ஒரு துளியும் பொருட்படுத்துவதில்லை. எவ்வளவுதான் உஷாராக இருந்தாலும் எப்படியாவது ஒன்றிரண்டு தவிர்க்கமுடிவதில்லை. ஏனெனில் இவைதான் எண்ணிக்கையில் அதிகம்.தமிழிசை இயக்கம் என்று ஒன்று எப்படியாவது பாடகர்களை தமிழில் பாடவைத்துவிடவேண்டும் என்று முயன்று முனைந்தது. அது ஓரளவுக்கு வெற்றி பெற்றாலும், அதன் தரம் மிகவும் குறைபட்டது. கோபாலக்ருஷ்ண பாரதி, முத்துத்தாண்டவர் போன்ற ஒரு சிலரைத்தவிர தமிழில் பாடுவதற்கு உருப்படியான பாடல்கள் கிடையாது. இதை உறுதியாகச்சொல்லலாம். பாபநாசம் சிவன், அம்புஜம் க்ருஷ்ணா போன்ற பாடலாசிரியர்களின் பாடல்கள் அதிகமாக தற்போது பாடப்படுகிறது. ஆனாலும், அவர்களின் பாடல்களில் ஒருசிலவற்றைத்தவிர மற்றதெல்லாம் தேறாது என்பது நிதர்சனமாகத் தெரிகிறது.
தமிழில் பாடல் புனைபவர்களுக்கும் புனைய நினைப்பவருக்கும்
இருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது சங்கீத ஞானமும் தமிழ் மொழி ஆளுமையும்தான். இதில் சங்கீதஞானம் அதிகமிருப்பவர்கள் பாடல் எழுத முனைவதில்லை. அப்படி முனைந்தாலும் அவை தெலுகிலோ, சம்ஸ்க்ருதத்திலேயோ இருக்கிறது. தாய் மொழி தமிழாக இருந்தாலும். காரணம் இவர்கள் தெலுகிலோ சம்ஸ்க்ருதத்திலோ பண்டிதர்கள் என்றல்ல. சில நூறு பாடல்களைப்பார்த்து அவைகளை கலந்து போட்டு ஒரு பாடலை உருவாக்கிவிடுவதே. இவர்களுக்கு மேன்மையான பாடல்களை உருவாக்கும் வாழ்கை வாய்ப்பதில்லை. தியாகராஜர் இப்படிப்பட்ட பாடல்களை உருவாக்கினார் என்றால் அவரது வாழ்க்கை அதற்கான அத்தனை சாத்தியங்களும் நிறைந்தது. அத்தனை அழுத்தமான, அர்த்தமுள்ள, ஆழமான வாழ்க்கையிலிருந்தே அத்தகைய பாடல்கள் பிறக்கமுடியும். அது வரவில்லை என்றால்தான் ஆச்சரியம். தற்காலத்தில் அதுபோன்று ஆழமான சங்கீத ஞானமும், அர்த்தமுள்ள வாழ்க்கையும் வாழும் ஒருவரும் எனக்குத்தென்படவில்லை. இவர்கள் பாடல் எழுதுவது என்பது சினிமாக்காரர்கள் பாடல் எழுதுவது போலத்தான். இல்லாத ஒரு உணர்ச்சியை கற்பனை செய்து எழுதுவது. அதற்கு மொழிமட்டுமே போதும். அவர்களுக்கு உதவ அங்கே இசையமைப்பாளர்கள் வந்துவிடுகிறார்கள். அதுவும் அவை காலத்தை கடந்து நிற்கவேண்டும், நமது கற்பனைக்கு இடமளிக்கவேண்டும் என்ற நிபந்தனையும் கிடையாது. ஆனால் இவ்விஷயத்தில் கர்நாடக சங்கீதம் இன்னும் நுண்மையானது. இதற்கு பாடல்கள் புனைவதற்கு மிகவும் நுண்மையான இசையறிவும், மொழியறிவும் தேவைப்படுகிறது. இது அத்தனைக்கும் மேலாக மிகவும் அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கை.
இத்தகைய வாக்யேயக்காரர்கள் தமிழில் தோன்றுவது என்பது இனி முடியாது, நடக்கப்போவதுமில்லை. தமிழில் பாடல்கள் பாடுவது என்பதும் இதுவரை இயற்றப்பட்ட கீர்த்தனைகள் மட்டுமே நிற்கும். இனி வருங்காலத்தில் புற்றீசல்போல் தோன்றினாலும் 20 வருடங்கள் கூட தாங்கும் கீர்த்தனைகள் வராது. என்ன இவ்வளவு உறுதியாக சொல்கிறேனே என்று பார்க்கிறீர்களா? என்ன செய்ய நிதர்சனத்தை இப்படித்தான் சொல்லத்தோன்றுகிறது.
பின்னர் ஒரு நாள் ஒவ்வொரு பாடலாசிரியர் குறித்தும் எனது கருத்தை பதித்துவைக்கிறேன்.
Advertisements

About ராமச்சந்த்ர சர்மா
A Music Buff

4 Responses to வாக்யேயக்காரர்களும் பாடலாசிரியர்களும்

 1. Lalitharam says:

  ஸ்பென்ஸர் வேணுகோபால் பாடல்கள் கேட்டதுண்டா? அவற்றைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

 2. Lalitharam says:

  அம்புஜம் கிருஷ்ணாவையும் பாபநாசம் சிவனையும் ஒரே நிறையில் வைத்துவிட்டீர்களே? கோடீஸ்வர ஐயரை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டீர்களா?

  >>>>இத்தகைய வாக்யேயக்காரர்கள் தமிழில் தோன்றுவது என்பது இனி முடியாது, நடக்கப்போவதுமில்லை.<<<<

  அப்படியெனில் இத்தகைய வாக்கேயக்காரர்கள் மற்ற மொழிகளில் தோன்ற வாய்ப்புண்டா?:-)

  இதெஇப் பற்றி ஏற்கெனவே நிறைய பேசி ஆகிவிட்டது. மீண்டும் எழுத சலிப்பாக உள்ளது.

 3. ramachandras says:

  மற்ற எந்த மொழியிலும் (தெலுகு, தமிழ், கன்னட, மலையாளம்,சம்ஸ்க்ருதம்) தரமான பாடல்கள் எழுதுவோர் இனி தோன்ற வாய்ப்பே இல்லை. இது நிச்சயம். ஸ்பென்ஸர் வேணுகோபால் பாடல்கள் இதுவரை கேட்டதில்லை. லிங்க் இருந்தால் கொடுங்களேன்?

 4. அது சரி எல்லாரையும் ஒரே கட்டுரையில் எழுதினால் என்ன ஆவது? அதுக்குத்தான் தனியா ஒரு போஸ்ட் போடனும்.. பாப்போம்… கோடீஸ்வரய்யர் என்பதால் அவர் எழுதிய பாடல்கள் அனைத்துமே டாப் க்ளாஸ் தான்.. ( ஏன் ஐய்யா வயத்தெரிச்சலை கிளப்புகிறீர்கள்? ஒரு பாடல் சும்மா ஒரு சாம்பிள்- இனி நமக்கொரு கவலையும் இல்லை எங்கும் இன்பமே, புனித த்யாகராஜ ஸ்வாமி கனவில் வந்து காட்சி தந்ததால் என்று – என்னத்த சொல்ல)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: