செவ்வியல் இசையும்- செவ்விய காமமும்

எந்த ஒரு கலையுமே நிகழ்காலப் ப்ரக்ஞையுடன் இருக்கவேண்டும். நிகழ்காலத்தேவைகளை அது நிறைவேற்றிக்கொடுக்கவேண்டும். நிகழ்காலத்தேவைகளை கருத்தில்கொள்ளாத கலைகள் பெரும்பாலும் அழிவைத்தேடிக்கொள்ளும். இசை ஒரு நுண்கலையானபோதும் அதுவும் இந்த விதிகளில் இருந்து தப்புவதற்கில்லை. அது இறைவனை போற்றுதல் தொடங்கி சுதந்திரப்போராட்டம் வரை அனைத்திலும் ஒரு முக்கியமான கலைக்கருவியாக இருந்திருக்கிறது. மற்ற எந்த ஒரு கலையையும் விட இசை அனைத்துவிதமான தேவைகளுக்கும் நெகிழ்ந்து கொடுக்கக்கூடியது.


கர்நாடக சங்கீதம். இதை பெரும்பாலும் இறைவனைத் தொழுதலுக்காகவும் போற்றுதலுக்காகவும் என்பதாக மட்டும்தான் இப்போதைய காலகட்டத்தில் புரிந்துகொள்ளப்படுகிறது. அது மட்டும் அல்ல இது. கர்நாடக சங்கீதம் என்பதன் சாத்தியங்கள் மிக மிக விரிவானது.
அது இயங்கும் தளங்களும் விரிவானவை. இது ஒரு நுண்கலை என்பதால், அது வாழ்வின் மிக நுண்மையான உணர்ச்சிகளைக் வெளிப்படுத்தும் ஓர் ஊடகமாக இருக்கிறது. ஒரு நுண்கலையை இந்தத்தளத்தில் மட்டுமே இயங்கவேண்டும் என்று கட்டுப்படுத்தும் எந்த விதியும் கிடையாது.
கர்நாடக சங்கீதம் என்பதை உதாரணமாக வர்ணங்களின் தொகுப்பாகச் சொல்லலாம். 12 வர்ணங்களின் ஓவியஜாலம்தான் சங்கீதம். கற்பனையையும், உணர்வுகளையும் காட்டும் வர்ணக் குழம்பாக இருக்கிறது சங்கீதம். இதை வைத்துக்கொண்டு தேர்ந்த ஓவியர்கள் உருவாக்கும் ஓவியங்கள், காட்சிகள் போல இருப்பது நிறைவான சங்கீதம். அதன் சாத்தியக்கூறுகளும் மிகவும் அதிகம். நமக்கு வெகு அருகில் நம்மை கொண்டு செல்லும் சாத்தியங்கள் நிறைந்தது. ஓவியரைப்போலவே, பாடகரின் திறனைப்பொறுத்து அது.


கர்நாடக சங்கீதத்திலும் நுண்ணுனர்ச்சிகளை வெளிப்படுத்தும் தளமும் உண்டு. இது மிகவும்
செறிவான, அடர்த்தியான ஒரு பரப்பு அது. மனிதனின் இரண்டு குறை நிரப்பும் குணங்களாக பக்தியையும், காமத்தையும் சொல்லலாம். காதல் என்றும் சொல்லியிருக்கலாம் ஆனால் அது காமம் என்றிருப்பதுதான் சரியானதாக இருக்க முடியும், சங்க இலக்கியப் பொருளில். குறிஞ்சியும், மருதமும் என்னுடைய பிரியமான திணைகள்.


எத்தனை நாட்கள்தான் கருணைவடிவானவனே, பக்தர்களை காப்பவனே, பேரின்பப் பெருவாசலே என்று இறைவனை நோக்கி கரைந்து கண்ணீர் மல்குவது என்று பலரும் நினைப்பதுபோலவே தியாகராஜரும் நினைத்திருக்கிறார். விளைவாக மிகவும் அற்புதமான ஒரு காதல் கதையை நாடகமாக எழுதினார். அதை தத்துவ தளத்திற்கு நகர்த்துவதுதான் அவரது எண்ணம் என்றபோதும் வந்து விழுந்த வார்த்தைகள் அதை மிகவும் கவர்ச்சியான, காமம் ததும்பும் வார்த்தைகள், நிகழ்வுகள். அந்த நாடகத்திற்கு ‘நௌகா சரித்ரம்’ என்று பெயர். படகுக்கதை என்று தமிழில் சொல்லலாம்.


சுருக்கமாக – யமுனை ஆற்றில் படகில் இளவயது கோபியர்கள் செல்ல விழைகிறார்கள், அவர்களுடன் க்ருஷ்ணனும் அடம்பிடித்து சேர்ந்துகொள்கிறான். வழியில் பெரும்புயலில் படகு சிக்கிக்கொள்ள படகில் ஓட்டை விழுந்துவிடுகிறது. நீர் உள்ளே வரத்தொடங்குகிறது. கோபியர்கள் பயத்தோடு அல்லோலப் படுகிறார்கள். முடிவில் க்ருஷ்ணனை வேண்ட, அவன் அவர்களது ஆடைகள் அனைத்தையும் அவிழ்த்து அந்தப் படகின் ஓட்டையில் அடைக்கும்படி சொல்ல, அவர்கள் வெட்கட்த்துடன் செய்ய, துணிகள் மொத்தமும் போய்விடுகின்றன. அவர்கள் க்ருஷ்ணனை பணிய அவர் காப்பாற்றி கரைசேர்க்கிறார்.


அற்புதமான கதைக்களன். தியாகராஜர் அதுவரை எழுதாதிருந்த அனைத்தையும் இந்த ஒரு நாடகத்தில் எழுதித்தள்ளிவிட்டார் என்று சொல்லலாம். உதாரணமாக படகில் க்ருஷ்ணனை ஏற்றிக்கொண்ட பின் அவர்கள் செய்யும் குறும்புகள், அவர்களது எண்ண ஓட்டங்களாகவும், படகில் ஓட்டை விழுந்தபின் அவர்களது செயல்களையும் இவர் எழுதியிருப்பதை படித்தால் பெருமூச்சே மிகும். இது க்ருஷ்ணனைக் குறித்து எழுதப்பட்டதால் தப்பித்தார்.


நாயகி-நாயக பாவம் என்றும் தலைவி-தலைவன் பாவம் என்றும் குறிப்பிடப்படும் காமம் சார்ந்த பாடல்கள் தமிழுக்கோ, கர்நாடக சங்கீதத்திற்கோ புதிதல்ல. கர்நாடக சங்கீதத்தில் அவை இரண்டு பிரிவுகளாக இருக்கின்றன. அவை ஜாவளி என்றும் பதம் என்றும் குறிப்பிடப்படுகின்றன. இவற்றை பாடுவதற்கு மிகவும் நல்ல பயிற்சியும், திறமையும் தேவைப்படும். பாவம் – மிக முக்கியமாதலால் இவை அனுபவஸ்தர்கள் பாடும்போது கேட்பது மிகவும் சுகமாக இருக்கிறது.


ஜாவளி-பதம் இவையிரண்டும் ஒன்றுபோலத் தோன்றினாலும் இரண்டும் வேறு. சுருக்கமாக இப்படிச்சொல்லலாம். ஆணாக உருவகிக்கப்பட்ட கடவுள் மீது பெண் காமம் தலைப்பட்டு பாடப்படுவது பதம். ஒரு மானிட ஆணின் மேல் பெண் கொண்ட காமத்தைப்பாடுவது ஜாவளி.


பதங்கள் மிகவும் ஆழமான அர்த்தமுள்ள, மிகவும் உணர்ச்சிகரமான காமம் தோய்ந்த நீளமான வரிகளை உடையதாக இருக்கும். இது பாடப்படும் ராகங்களும் ரக்தி ராகங்கள் எனப்படும் வகையான செழுமையான ராகங்களாக இருக்கும். பதங்கள் சௌக காலம் என்று சொல்லப்படும் மெதுவான தாள நடை கொண்டதாக இருக்கும். ரக்தி ராகங்கள், மெதுவான தாள நடை, உணர்ச்சி ததும்பும் பாடல் என இருக்கும்போதே இதற்கான தேவை ஒரு மிகவும் அனுபவம் வாய்ந்த பாடகர் என்று புரிந்துகொள்ளலாம். இளைஞர்கள் இதை பெரும்பாலும் பாடுவதில்லை, பாடினாலும் ரசிக்கக்கூடியதாக இல்லை. எல்லா பாடகர்களும் இதை பாடினாலும் ரசிக்கும்படி இருக்காது. பாவம் பேசக் கூடிய குரலில் எந்த வித வெளி பாவனைகளும் இல்லாமல், காமம் குறித்து பாடுகிறோமே என்ற கூச்சமில்லாமல் பாடினால் மட்டுமே இது நன்றாக அமையும். பெரும்பாலான பாடல்கள் குறிஞ்சி அல்லது மருதத் திணைகளிலேயே எழுதப்பட்டிருக்கிறது. கன்னடம், தமிழ், தெலுகு, மராத்தி ஆகிய மொழிகளில் இப்பதங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் க்ஷேத்ரக்யர் பதங்கள் மிகவும் சிறந்தவையாகக் கருதப்படுகிறது. இவை மிகவும் சிக்கலான உணர்வுகளை மிகவும் மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்தும் காரணத்தால் பாடுவதும் மிகுந்த ஞானமிருப்பவர்களுக்கே கைவருகிறது.


ஜாவளிகள் மானிடக் காமத்தைப் பேசுகிறது. இது மிகவும் வெளிப்படையாக காமத்தைப் பேசும். பரத்தமை, ஊடல், பிரிதல், பசலை என்று அனைத்துவிதமான காமக்காரணிகளும் நிறைந்ததாக இது இருக்கிறது. என்னுடைய ஊகத்தின்படி இவை அரசர்களின் கேளிக்கைக்காக உருவாக்கப்பட்டவையாக இருக்கலாம். சரியாகத்தெரியவில்லை.இவை மிகவும் வேகமான நடையில், வார்த்தைகள் அதிகமாக இருக்கும் விதத்தில், சிறிய வரிகளுடன், துக்கடா ராகங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இவை கர்நாடக சங்கீதத்திற்கு – இந்தக்கால ஐட்டம் நம்பர் போல என்று சொல்லலாம். ஆனால் இதற்கும் இடமுண்டு என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.ஜாவளி பாடுவது ஓரளவு சுலபம் என்றாலும், இதற்கும் பதம் பாடுவதற்குறிய அதே திறமைகள் தேவையாக இருக்கிறது.ஆயிரத்தில் ஒருவன் படத்தில் செலி நேநெட்லு சஹிந்துனே – என்ற ஜாவளியை மிகவும் சரியான சந்தர்ப்பத்தில் பயன்படுத்தியிருக்கின்றனர்.


(சினிமாவில் சின்னச்சின்ன வார்த்தைகள் பல்லவியில் உள்ள பாடல்கள் எப்படியாவது ஹிட்டாகிவிடும், பெரிய நீளமான ஒற்றை வரிப் பல்லவிகள் ரசிக்கப்படுவதில்லை.உதாரணமாக பல பாடல்களைச் சுட்டலாம்- விரிவாக – பின்னொரு சமயம்.)


பலர் ஜாவளி-பதம் என்று பாடியிருந்தாலும், மிகச்சிலரே அதை ரசித்து-உருகி-பாவத்துடன் பாடக்கூடியவர்களாக இருக்கிறார்கள். தற்காலத்தில் சுட்டிக்காட்டக்கூடிய ஒரே மனிதர்-பாடகர்- பாலமுரளிக்ருஷ்ணா மட்டுமே.மற்ற பாடகர்கள் எல்லோரும் ஏதோ பாடிமுடித்துவிட்டு கையில் ஒரு பிடி சுண்டல் கொடுத்து, நெற்றியில் விபூதி பூசிவிடுவார்கள் போலத்தான் பாடுகிறார்கள். ஏதோ சங்கீதம் என்றால் இறைவனை பஜனை செய்யத்தான் என்பது போல. தற்போது பாடும் எந்த ஒரு கர்நாடக சங்கீத வித்வானிடமும் ஜாவளி-பதம் பாடக்கூடிய பாவ ஞானமோ-
 பாஷா ஞானமோ – உழைக்கும் பாவமோ இல்லை என்று உறுதியாகச்சொல்வேன்.


கீழே கொடுத்திருப்பது பாலமுரளிக்ருஷ்ணா பாடிய க்ஷேத்ரக்ஞரின் பதமான ‘அலிகிதே’ என்ற ஒன்று – உசேனி ராகம். பாலமுரளியின் குரல் வெளிப்படுத்தும் பாவத்தை கேளுங்களேன். இதைவிட வேறு எவரும் இந்தப்பாடலை சிறப்பாக பாடிவிட முடியாது. இது நிச்சயம்.

http://www.youtube.com/watch?v=eJPOtwCPQVE
http://www.youtube.com/watch?v=_pK5etjCOz0
நித்யஸ்ரீ பாடிய செலி நேநெட்லு – ராகம் பரஸ் (மொக்கையாக பாடியிருக்கிறார்)

http://www.youtube.com/watch?v=m5KtRJR7Gts
சிறு குறிப்பு
– இது குறித்து நிறைய எழுதவேண்டுமென்று நினைத்தாலும்- இப்போதைக்கு முடியவில்லை. நிச்சயம் எழுதுகிறேன்.
– இதை தென்னிந்திய கஜல் (கசல்) வடிவம் என்று சொல்லலாம். இதை முன்னெடுக்கத்தான் ஆட்களில்லை.

Advertisements
%d bloggers like this: