திருவிடைமருதூர் வன்மீகநாதய்யர்

திருவிடைமருதூர் வன்மீகநாதய்யர். குளித்துவிட்டு ஸ்வாமி அறையினுள் நுழைந்தால் அவ்வளவுதான் அவரை அங்கிருந்து கிளப்புவது என்பது கஷ்டம். கரைந்து உருகி கண்ணீர் மல்க இறைவனை அழுது தொழுது வேண்டியபடி நின்றிருப்பார். உதடுகள் லலிதா சஹஸ்ரநாமமோ, விஷ்ணு சஹஸ்ரநாமமோ சொல்லிக் கொண்டிருக்கும். அவரை அங்கிருந்து கிளப்பவேண்டுமென்றால் விசாலம் மாமி சமைத்ததை கூடத்தில் கொண்டுவந்து நிறப்பினால் தான் ஆச்சு. கும்பகர்ண வைத்தியத்தை விட பயனளிப்பது ஒன்று உண்டா உலகத்திலே? உடனே பகவானே நீயே ஆச்சு எனக்கு பிணை என்று பொறுப்பை அவனிடம் விட்டுவிட்டு வந்து சாப்பிட ஆரம்ப்பித்துவிடுவார்.

பக்கத்தில் இருப்பவன் ஜம்புநாதன், அவரது ப்ரதான சிஷ்யன். அவருக்கு சாப்பிடும் போது ஃபேன் இருந்தாலும் விசிறி விடுவது, துணி துவைத்துப் போடுவது போன்ற சிசுருஷைகள் செய்து அவரிடம் சங்கீதம் கற்றுக்கொள்பவன். இப்படி கற்றுக்கொண்டால்தான் வித்யை கைவரும் என்று அவனுக்கும் ஒரு ஐதீகம். வித்யையை என்பது ஐயர்வாளின் குமாரத்தியின் பெயரும்கூட என்பது சிறப்பு. திருவிடைமருதூரிலே இவரை விட்டால் பாட்டுக்கு வேறு ஆள் இல்லை என்பது திண்ணம். போனமாதம் திருவிடைமருதூரிலே நடந்த

ப்ரதோஷத்தன்று கூட இவர்தான் கச்சேரி. மூவாயிரத்தி ஏழு பேர் கச்சேரி கேட்டார்கள் அன்று என்று ஐயர் சொன்னார்.அவர்கள் முறையே இவரது பார்யாள் விசாலம், சிஷ்யர்கள் ஜம்பு, அம்பி, நானா, விச்சு, மைக் செட்டுக்காரன் மற்றும் சிவனும் சுமார் மூவாயிரம் சிவகணங்களும் என்று பின்னர் தெரிய வந்தது.

நவம்பர் மாதம் பிறந்ததிலிருந்து இவருக்கு படபடப்பும் ஆயாசமும் நிற்கவில்லை. ஒவ்வொருநாளும் தபால்காரனுக்கான இவர்காத்திருக்கும்போது இவரது முகத்தில் ஒரு நம்பிக்கையும் பின் அவன் கடந்துபோனதும் விடும் பெருமூச்சில்தான் ரேழிக்கொடியில் காயப்போட்ட மடித்துணி காய்ந்துவிடும். இவரது ப்ரார்த்தனை, காத்திருப்புஎல்லாமே இந்த வருடமாவது மதராசில் ஏதாவது ஒரு வித்வத் சபையில் சங்கீதக்கச்சேரி செய்துவிடவேண்டும் என்பதுதான். இது அவருக்கு ஒரு பெரும் குறையாகவே இருந்துவருகிறது. திருவையாறு தியாகய்யர் உத்சவத்தில் இவருக்கு சற்றேறக்குறைய சமமான பெரிய பெரிய வித்வான்கள் பாடிய அதே மேடையில் பாடியிருந்தாலும், மதராசில் சபையில் பாடுவது இவரது சங்கீதமயமான வாழ்கையில் இன்னும் ஒரு கனவாகவே இருந்துவருகிறது. சென்றவருடம் கூட இவர் சீமாச்சு மதராசுக்கு போகும்போது கும்பகோணம் ரயிலடி வரை போய் இதுகுறித்து ஞாபகப்படுத்தியிருந்தாலும் இதுவரை ஒன்றும் வேலைக்காகவில்லை. சீமாச்சு மதராசில் பல சபைகளுக்கு போவானாகிலும், தன் பெருமையை எடுத்துச்சொல்லும் சாதுர்யம் இல்லை என்பது இவரது துணிபு.

எப்படியாவது இந்தமுறையேனும் ஒரு வாய்ப்பு வாங்கித்தந்துவிடும்படி சீமாச்சுவுக்கு போன வாரமே இன்லாண்ட் கடிதம் எழுதியாகிவிட்டது. இன்னும் பதில் வந்து சேரவில்லை. ரயிலில் செல்ல டிக்கட்வேறு இன்னும் முன்பதிவு செய்யவேண்டும். போதாதகுறைக்கு எதிர்த்தவீட்டு கணேசன் வேறு என்னய்யா இந்த வருஷமாவது மதராஸ் சபைல கச்சேரி உண்டா? ன்னு கேட்டு எரிச்சலை கிளப்பிட்டுப்போயிருக்கிறார்.

ஏதாவது பண்ணியாகவேண்டும் என்று யோசித்ததில் கங்காராவ் வீட்டிற்குபோய் சீமாச்சுவுக்கு ஒரு டெலிபோன் போட்டு கேட்டுவிடலாமா என்று தோன்றியது. சரி என்று கிளம்பிப்போய் போன் செய்தபோது “டேய், நீ அடுத்த திங்கக்கிழமை இங்கே இருக்காமாதிரி கிளம்பி வந்துடு” என்றான். எப்போ கச்சேரி எங்கு என்ன ஏதும் தெரியவில்லை. சரி இந்தமுறை வாய்ப்பு அடித்துவிட்டது என்று சந்தோஷத்தில் பிரயாணத்திற்கான ஏற்பாடுகள் கணஜோராக தொடங்கிவிட்டார். ஊர் முழுக்க தண்டோரா போடும் வேலையை ஜம்பு சிறமேற்கொண்டு முடித்துவிட்டான்.
அதன் விளைவாக யாராவது அப்பா இருக்காரா என்றால்கூட “சார்வாள் இன்னைக்கு மதராசுக்கு போகிறார். அங்கே வித்வத் சபைல கச்சேரி
” என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

ஊரில் இருந்து ஒரு இருபது முப்பது பேராவது இவரை வழியனுப்ப இவரது வீட்டு வாசல் வரை வந்திருந்தார்கள். அதையே இவர் கும்மோணம் ரயில்வேஸ்டேஷன் வரை வந்திருப்பதாக நினைத்துக்கொண்டார். மாமிக்கு கல்யானத்திற்கு சீதனமாக வந்த வெள்ளி கூஜா, அரகஜா, மயில்கண் பட்டு, ஒரு தம்பூரா, எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு சுருதிப்பெட்டி, தொண்டை கரகரப்புக்கு ஒரு கால் கிலோ பனைவெல்லமும், வால்மிளகும், கூடவே எப்போதோ யாரோ கொடுத்த ஒரு மயில்கழுத்து கலர் சால்வை, வழியில் ரயிலில் காற்று அடித்து ஜலதோஷம் பிடிக்காமல் இருக்க அதை ஒரு உருமா போல கட்டிக்கொண்டிருந்தார். கூடவே பிரதான சிஷ்யனும் உடன் பாடுபவனுமான ஜம்பு.

மெலிதான குரலில் அவ்வப்போது ஏதாவது ஒரு ராகத்தை முனகிக்கொண்டே இருந்தார். கச்சேரியில் என்ன பாடுவது என்று மனதுள் ஒரே குழப்பம். ஆனால் இந்த வாய்ப்பு மீண்டும் வராது. எனவே தனது சங்கீத வித்வத்தை முழுவதும் கொட்டி மதராஸ் பட்டிணத்தையே கலங்கடித்துவிடவேண்டும் என்று நிச்சயம் செய்திருந்தார். எதிரில் இருந்தவர் “அடுத்த ஸ்டேஷன் எப்போ வரும்” என்று கேட்டால் கூட மெதுவாக சிரித்துக்கொண்டே ஜம்புவைப் பார்ப்பார். அதற்குள் ஒரு தனி அர்த்தம் இருக்கும். இவரது குலம் கோத்திரம் எல்லாம் சொல்லி முக்கியமாக இவர் மிகப்பெரிய சங்கீத வித்வான் என்றும் இப்போது மதராஸ் சங்கீத வித்வத் சபையில் கச்சேரி செய்ய போய்க்கொண்டிருப்பதாகவும் ஜம்பு சொல்லி முடிக்கும்போது லேசாக கல்யாணிராகத்தை முணுமுணுப்பார். எதிரிலிருப்பவர் சற்றே மிரண்ட விழிகளுடன் ஜன்னல் வழியே வெளியே பார்க்கத் தொடங்கிவிடுவார்.

இரவு கையில் கொண்டுவந்திருந்த புளிசாதத்தையும், ஆத்மாவை குளிர்விக்கும் தயிர்சாதத்தையும் போஜனம் செய்து ஒரு ஸ்ருதி சுத்தமான ஏப்பத்தை வெளியிட்டு இப்பொது சிஷ்யனை வாஞ்சையாக பார்த்துக்கொண்டிருக்கிறார். ஜம்பு தன்னை தயார் படுத்திக்கொள்ள மெயின் பாட்டு என்ன சக்கனி ராஜவா? என்று கேட்டதற்கு அட அசடே, எத்தனைபேர் அந்தப்பாட்டை பாடியிருக்கிறார்கள். என்ன இது பழைய சாதம் மாதிரி எப்போவும் கரஹரப்ரியா, காம்போதி சங்கராபரணம்ன்னு. அதெல்லாம் பாட என்ன ஞானம் வேண்டிக்கிடக்கு. நானே போட்ட சில பாட்டை ஸ்பெஷலா இதுக்காக தயார் பண்ணி வெச்சுருக்கேன். பாரு நான் பல்லவியை தொட்டதும் பட்ணத்துல எல்லாரும் வாயடைத்துப் போகப்போறா.” என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.

ஒருவேளை சீமாச்சு இவருக்கு நிஜமாகவே எதாவது ஒரு சபையில் பாட வாய்ப்பு வாங்கித்தந்திருக்கக்கூடும். எங்காவது சபையில் பனுவலட்டி ராகமோ அல்லது கனஜகன ராகமோ கேட்டால் ஒரு நிமிடமாவது உள்ளே போய் பார்த்துவிடுங்கள். பாடுபவர் சங்கீத மஹாஸ்ரீ திருவிடைமருதூர் வன்மீகநாதய்யராகவும் இருக்கலாம்

Advertisements

தனிகல பலராம நாயுடு

“ஒரு கட்டை தர்பையை தீசி அவன் வாயிலே பெட்டி கொளுத்தனும் சார்” , பலராம் நாயுடு, அன்னமைய்யவின் தெலுங்கு பாடல் ஒன்றை தவறாக உச்சரித்த பாடகரை அர்ச்சனை செய்துகொண்டிருந்தார். பக்கத்திலிருந்த அவரது பாவா நாகம்ம நாயுடு “பரவாலேதுலே பாவமரிதிகாரு” என்று சொன்னதையும் காதில் வாங்காமல் அர்ச்சனை தொடர்ந்தது.
“அவர் தமிழ் சார், அவருக்கு தெலுங்கு தெரியாது.” என்று யாரோ சொன்னதற்கு, “தரியனும் சார்.தரிஞ்சுக்கனும், நான் இப்போ நல்லா தமில் பேசலே” என்று கர்ஜித்தார். சந்தடி சாக்கில் இவரது தமிழுக்கும் ஒரு சுய அங்கீகாரம் கொடுத்துக்கொண்டார் என்று சொல்லலாம்.

தனிகல பலராம நாயுடு. இவர் பேரைப்பார்த்தாலே தெரிந்திருக்கும். இவர் ஆந்திர மாநிலம். “தேச பாஷல்லோ தெலுகு லஸ்ஸா” தரியுமா? தெலுசுகோ. என்று மணிப்ரவாளமாய் தன் தாய்மொழியை உயர்த்திவைப்பதில் மிகவும் ஆவல். இவருக்கு தெலுங்குமொழியில் இலக்கணமோ இலக்கியமோ பெரிதாய் எதுவும் தெரியாது என்றாலும், தேசாபிமானமும் பாஷாபிமானம் அதிகம். பிறந்து வளர்ந்தது எல்லாமே ஆந்திரா என்றாலும் இப்போது வசிப்பது பிழைப்பு தேடிவந்த சென்னையில். “உங்க பாரதிகாரு சொல்லிருக்காரு தரியுமா? சுந்தர தெலுகுன்னு” என்று கேட்டு பலரை வெறுப்பேற்றியிருக்கிறார். பாடல் என்றால் அது தெலுங்கு மொழியில் தான் இருக்கவேண்டும் என்று தீர்மானமாக நம்புபவர். தெலுங்கு பாடல்கலை ஆந்திராவில் யாரும் அக்கரையாக பாடுவதில்லை , இந்தப்பாடல்கள் எல்லாம் நிலைத்திருக்க தமிழ் நாட்டிலிருப்பவர்கள் தான் காரணம் என்று யாராவது சொன்னால், பதில் பேசாமல் அவரையே பார்த்துக்கொண்டிருப்பார்.

இவர் இங்கே புகையிலை பிஸினஸில் இருக்கிறார். சென்னை வாழ் தெலுங்கு மக்களின் ஆந்திர தெலுகு சபாவிற்கு இவர் செயலாளராக இருக்கிறார். இவர் ஒரு டோல்கி வித்வான் கூட. பல உள்ளூர் கோவில் பஜனைகளில் இவர் வாசித்ததுண்டு என்றும் சில கச்சேரிகளுக்கும் இவர் ஆபத்துதவியாக மிருதங்கம் வாசித்ததுண்டு என்றும் இவரது பாவா நாகம்ம நாயுடு சொன்னார். இவர் பிஸினஸினால் வந்த வினையோ அல்லது பிரமையோ, எப்போதும் வாயில் புகையிலை அதக்கிக்கொண்டு பேசுவதுபோலவே இருக்கும். இவரது பெயரைக்கேட்காமலேகூட சொல்லிவிடலாம் இவர் ஆந்திரா என்று. இவரது வெள்ளை பேண்டும், ஜிகு ஜிகு டஸ்ஸர் சில்க் சட்டையுமே போதும், கண்டுகொள்ள. டஸ்ஸர் சில்க் சட்டையோ, கொடி போட்ட பழுப்பு நிற கைக்குட்டையுடனோ யாரையாவது பார்த்தாலே போதும் “மீரு தெலுகா?” என்று அன்யோன்யமாகிவிடுவார். அவர் ஆந்திரராய் இருக்கும் பட்சத்தில் இவரது செலவில் டீ கூட கிடைக்கும் இரண்டு மிளகாய் பஜ்ஜியுடன்.

அன்னமையாவை விடவும், ராமதாசை விடவும், தமிழகம் வந்ததால் த்யாகைய்யாவை விடவும் சிறந்த பாடல் எழுதியவர் கிடையாது என்று தீர்மானமாக நம்புகிறார். “தமிழ்நாட்டிலோ இருந்தாலும் த்யாகைய்ய தெலுகிலேதான் பாட்டு எழுதிருக்குறாரு. பார்தியா” என்று குத்திக்காட்டுவார். இவருக்கு இசையைப்பற்றி பெரிதாக ஏதும் தெரியாது. “சங்கீதத்துல ஏமிய்யா இருக்கு. எல்லாம் சாஹித்யத்துல இருக்கு. தெலுகிலே இருக்கு” என தெலுங்குமட்டும்தான் சங்கீதம் என சொல்லிக்கொண்டிருப்பார்.
இவரால் வாயைத்திறந்து ஒரு பாடலும் பாட முடியாவிட்டாலும், பாடலைத் தொடர்ந்து ஒரு இரண்டு வினாடி இடைவெளியில் ஏதோ முனகிக்கொண்டே இருப்பார். பாடுவதாக இவர் நினைத்துக்கொண்டிருக்கலாம்.

தமிழில் பேச இவர் பெருமுயற்சி எடுத்தாலும் இவருடைய உச்சரிப்பு இவரை காட்டிக்கொடுத்துவிடும். ழ கரத்தை ற கரமாகவும், தமிழ் சொற்களுக்கு தெலுங்கு உச்சரிப்பும் கொடுத்து தமிழின் உயிரை எடுத்துவிடுவார். சமத்காரமான பேச்சிருந்தாலும், இவரது சிரிப்பு சபையையே கலகலக்கச்செய்துவிடும். எந்த கச்சேரி போனாலும், பாடலின் முதல் வரி தெலுங்கில் ஆரம்பிக்கிறதா என்று பார்ப்பார். அது தெலுங்காகவே அமைந்துவிட்டால் இவரது சந்தோஷத்திற்கு பக்கத்து வரிசையில் இருப்பவர்களில் இருந்து அனைவரும் பலி என்றே சொல்லலாம். பாடகர் பாடிக்கொண்டிருக்கும்போது சில இடங்களில் இவர் கண்ணீர் விட்டு அழுதுவிடுவதும் உண்டு. கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிய அரற்றிக்கொண்டிருப்பார். பக்கத்திலிருப்பவர் என்ன நினைத்தாலும் இவருக்கு ஒருபோதும் கவலையில்லை.

தமிழ்ப்பாடல்கள் ஏதும் பாடினால் ஏதோ கேட்கத்தகாதது போல கேண்டீன் பக்கம் ஓடிப்போய் நேரத்தை வீணாக்காமல் இரண்டு ப்ளேட் மிளகாய் பஜ்ஜி, ஓரிரு தோசைகள் உள்ளே தள்ளிவிட்டு, கணத்த ஏப்பத்துடன் இருக்கைக்கு வருவதற்கும் பாட்டு முடிவதற்கும் நேரம் சரியாக இருக்கும். இவருக்கு எந்த சபையில் யாருடைய சமையல் காண்ட்ராக்ட், யார் காண்ட்ராக்டில் என்ன நன்றாக இருக்கும், எந்த காண்ட்ராக்டில் எங்கு , என்று, என்ன ஸ்பெஷல் என்று கரதலைப்பாடமாக தெரியும். சாப்பிடுவதை ஒரு கலையாகவே நினைத்து செய்பவர் இவர். சாப்பிட்டு முடித்ததும் வரும் பில்லும், மெனு கார்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இவரது குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக்கொடுத்து எப்படியாவது சங்கீத வித்வத்சபையில் பாடவைத்துவிடவேண்டும் என்று ஒவ்வொரு பாடகர் வீட்டுக்கும் படையெடுக்கிறார். யாரும் இப்போதைக்கு தயாரில்லை என்று தெரிந்ததால் சொந்த கிராமத்திலிருந்து ஒரு இசை ஆசிரியரை வருடாந்திர விடுமுறைகாலத்தில் வீட்டிலேயே தங்கி கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறார்.

வந்தவரிடம் இவர் இசை சம்பந்தமாக பல உரையாடல்களையும் விவாதங்களையும் மொட்டைமாடியில் அமர்ந்து நடத்தியிருப்பதாகவும், அது மொத்தமாக தெலுங்கிலேயே இருந்ததால் அக்கம் பக்கத்து மக்கள் தப்பித்துவிட்டதாகவும் ஒரு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இவர் இப்போது சென்னையிலேயே இருப்பதால், இவரை ஏதாவது ஒரு சபையில் பார்க்கலாம். பெரும்பாலும் இவர் காண்டீனிலேயோ அல்லது தாரை தாரையாக கண்ணீர் விட்டுக்கொண்டு உங்கள் பக்கத்திலேயோ இருக்கலாம். எங்காவது இவரே உங்களை நேரில் பார்த்து “மீரு தெலுகா?” என்று கேட்கவும் கூடும். `

உஷார்… உஷார்.. உஷார்.

வடபாதிமங்கலம் சங்கரசுப்ரமணியன்

தமிழின் மொத்த உருவமும் இவர்தான் என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம். வாழும் தமிழ், முத்தமிழின் முதல்வன் போன்ற சொற்கள் எல்லாம் இவருக்கு சாலப்பொருந்தும். இவரது தமிழ்ப்புலமைக்கு எடுத்துக்காட்டாக இவர் திருத்தி எழுதிய கம்பராமாயணம் ஒன்றே சான்று. கம்பரமாயணம் என்று அறியப்படும் ராமாயணத்தை இவர் தமிழில் மொழிபெயர்த்தமைக்கு ஞான பீடம் உட்பட பல விருதுகள் வரும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் ஏதோ சில சக புலவர்களின் சூழ்ச்சியின் காரணங்களால் வரவில்லை என்று சொன்னார். ஒருவேளை இவரது புலமையை எவரும் புரிந்துகொள்ளாமையும் காரணமாக இருக்கலாம். வாழும் காலத்தில் எவனும் சிறந்த தமிழ்ப் புலவனை கண்டுகொண்டதில்லை என்று அதற்கான காரணத்தை இவர் விளங்கிச்சொல்வார். இப்போது இவர் நாலாயிரம் திவ்யப் பிரபந்தத்தை தமிழில் மொழி பெயர்க்க பெருமுயற்சி செய்துவருகிறார்.

அடுத்த கட்டமாக பெரியபுராணத்தையும் தமிழ்ப்படுத்தப்போவதாகச் சொல்லி சக தமிழ்ப் புலவர்களுக்கு கிலி ஏற்படுத்தியிருக்கிறார். புராணம் என்றால் பொய், பெரிய புராணம் என்றால் பெரிய பொய் என்று நகைச்சுவை உணர்வோடு இவர் சொன்னதை பலர் ரசிக்கத்தெரியாமல் வீட்டுக்கு போகும் வழியில் கல்லால் அடித்துவிட்டார்களாம். இவரது தமிழ்ப்பயிற்சி குறித்து கூறும்போது பலவருடம் இவர் ஆழ்ந்து தமிழ் மொழியை திரு. திருவாலங்காடு கரிவலம்வந்த பெருமாளிடம் கவனம் செய்திருப்பதாக சொல்வார். இவரது எளிய முயற்சியாக தமிழ் அகராதி ஒன்றும் வெளிவந்திருக்கிறது. இவரது முன்னோர்கள் தமிழ்ப்புலவர்களாக இருந்ததாகவும், சோழர் பரம்பரையே இவரது தமிழ்ப்புலமைக்கு அடிமை என்று செப்புப்பட்டயம் அடித்துக்கொடுத்திருப்பதாகவும் மதுரை அலங்காநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பல்லவர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் பெருமிதம் கொள்வார். அவ்வப்போது, வள்ளுவர் தனக்கு என்ன முறை ஆகவேண்டும் என்று ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு தற்போது அதை நிறுவ ஆதாரங்கள் திரட்டிக்கொண்டிருக்கிறாராம்.

இவருக்கு தமிழ்த்தாகம் இருப்பதுபோலவே, சங்கீதப்பித்தும் மிக அதிகம். இவரது சங்கீத ஞானம் உலகப் ப்ரசித்தமாகாவிடிலும், உள்ளூரில் மிகப் ப்ரபலமாக பேசப்படுகிறது. இவர் தமிழிசை இயக்கத்தின் வேர்களில் ஒருவர் என்று சொல்லிக்கொள்வார். தமிழிசை என்பதுதான் முதல் முதலில் தோன்றியது. ஏனென்றால் கல் தோன்றி மண் தோன்றா காலத்தின் முன் தோன்றிய மூத்த குடியான தமிழ்க்குடியின் இசைதானே முதலில் தோன்றியிருக்கவேண்டும் என்பது இவரது வாதம். கல்லும் மண்ணுமே இல்லை என்னும்போது பூமி எம்மாத்திரம். உலகம் இசைமயமான ஒலியிலிருந்து தோன்றியது என்று சொல்வார்களே அது தமிழிசையைத்தான் என்று இவரால் அறுதியிட்டுச் சொல்லமுடியும். இவரது இசைப்புலமையும், தமிழ்ப்பற்றும் கண்டு பலர் மிரண்டு போய் பல இடங்களில் பாடுவதை நிறுத்திவிட்டு தமிழ்ப்பாடல்கள் நோட்டு புத்தகத்தைத் தேடிக்கொண்டுவர மிருதங்கம் வாசிப்பவரை பணித்ததும் உண்டு.

சமீபகாலமாக இவர் கச்சேரிகளுக்கு போய்வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். முதல் வரிசையில் உட்கார இடம் இல்லாவிட்டாலும் இவரது ப்ரதாபத்தை கருதி தான் எழுந்தாவது யாராவது இவருக்கு இடம் தந்துவிடுகிறார்கள். கச்சேரி முடிந்ததும் காண்டீனில் நடக்கும் சிறு கூட்டத்தில் “என்னய்யா பாட்டு பாடறான், ஊத்துக்காடு, முத்துத்தாண்டவர்ன்னு, நம்ம பாட்டு ஒன்னு கூட தெரியாதா இவனுக்கு” என்று கேட்டு இவர் சக மேசைவாசிகளை அதிர வைப்பதும் உண்டு. இவர் தன் அரிய முயற்சியில் சில பல பாடல்கள் இயற்றியிருக்கிறார். அதை ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதி எல்லா கச்சேரிகளுக்கும் எடுத்துவருவதும் உண்டு. யாரேனும் கேட்டாலும் கேட்காவிட்டாலும், கச்சேரி நடுவிலும், தனியாவர்த்தனத்தின்போதும், படித்துக்காட்டி புளகாங்கிதப்படுவார். “நல்லதாப்போச்சு இவருக்கு பாட வரவில்லை” என்று மனதுக்குள் சிலர் நினைத்திருப்பார்களோ என்னவோ.

உள்ளூரில் நடக்கும் கச்சேரிகளுக்கு தன் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் ஆஜராகிவிடும் இவர் ஒரு துண்டு சீட்டில் வடபாதிமங்கலம் சங்கரசுப்ரமணியன் அவர்கள் பாட்டு ஒன்று பாடவும் என்று எழுதி, வாங்கிய பாடகர் யார் அது என்று யோசிக்கும்போதே ஒரு பெரிய தாளில் காலையில் கவனம் செய்த பாடல் ஒன்றை நீட்டி, அது அடியேன் தான் என்று தன்னடக்கத்துடன் சொல்லி பாடகரை திகைக்கவைப்பார். இவரது இஷ்ட தெய்வமான புலிப்பாதிரியூர் புன்னை நாதரே அவருக்கு இப்பாடலை இயற்ற உத்தரவிட்டதாகவும் பின்குறிப்பு ஒன்று இருந்ததாக ஒரு பாடகர் மைக்கிலேயே சொன்னார்.

ஒருமுறை இவர் எழுதிய பாடலை தமிழில் இருந்ததால் பாடமுடியாமல் தவித்த கன்னடப்பாடகரை இவர் இழி பார்வை பார்த்து அப்பாடலை படித்துக்காட்டியும் விளக்கத்தைப் பாடகரின் மைக்கைப்பிடுங்கி இவரே சொன்னபோது வேர்த்து வடிந்திருந்தது. தமிழ் தெரியாத நீயெல்லாம் நடைபிணம் போல என்று சாபமும் அளித்தார். “காதை குத்தா தைத்த தித்த கதிமி டத்தோ” என்ற அந்த ஒருவரி பல்லவிக்கு இவர் அளித்த விளக்கம் இன்னும் யாருக்கும் புரியாமல் அலைய, தானே தமிழ் சித்தர்களைத் தேடி ஓடிக்கொண்டிருப்பதாக பொய்யறுமொழிப் புலவர் கூட சொன்னார்.

தமிழில் பாடாமல் தமிழில் இருந்து தோன்றியிருந்தாலும் அந்நிய மொழிகளான சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் பாடுவது தமிழுக்கு செய்யும் துரோகம் என்று பலமுறை துவாதசி கூட்டங்களில் இவர் உரையில் சொன்னதுண்டு. தமிழில் பாடல் இயற்றுவது ஒன்றும் கஷ்டமான வேலை இல்லை என்று இவர் பலமுறை எடுத்துக்காட்டியிருக்கிறார். இவரது முதல் பாடலான “வணங்குகிறேன் தாயே! வாழ்த்துவாய் நீயே! மனமென்னும் பேயே! அழித்திடும் நோயே!” என்ற பாடலை தன் தமிழாசிரியருக்கு அர்ப்பணித்திருக்கிறார். அந்தப்பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக ஆவதற்கு சகல தகுதிகளும் இருக்கிறது என்பது அனைவரது கருத்தும். புலவர்கள் நாட்டின் சொத்து, நாட்டுக்காக நாட்டைப்பற்றியே சிந்திப்பவர் எனனவே அனைவருக்குமான சிந்தனையையும் இவரே கஷ்டப்பட்டாவது செய்துவிடுவார். மேலும், எதுகையும் மோனையும் இருந்தால் உலகத்தரம் வாய்ந்த பாடல்கள் இயற்றலாம், கருத்து எதுவும் தேவையில்லை என்பது இவரது வாதம். காதல், பக்தி, மோகம் தவிர பெரிதாய் எதைப்பற்றி எழுதியிருக்கிறார்கள் என்று இவர் கூறுவார்.

இவர் தனது பாடல்களுக்கான மேடைகள் உள்ளூரில் வருடம் ஒருமுறை நடக்கும் கச்சேரிகளில் மட்டும் மேடையேறினால் சரிப்பட்டு வராது. இப்படியே தொடர்ந்தால் தமிழை உலக அரங்கில் நிலைநிறுத்த முடியாது என்று டிசம்பர் ஒன்றாம் தேதி மதராசுக்கு ரயிலில் டிக்கட் போட்டிருப்ப்பதாக கேள்வி. ஒருவேளை உங்கள் பக்கத்தில் அமர்ந்திருப்பவர் இவராகவும் இருக்கக்கூடும்.

ஜாக்கிரதை. ஜாக்கிரதை. ஜாக்கிரதை.

ஆனந்ததாண்டவபுரம் ருத்ரதாண்டவப் பிள்ளை

ஆனந்ததாண்டவபுரம் ருத்ரதாண்டவப் பிள்ளை. இப்படி மொட்டையாக சொன்னால் யாருக்கும் புரியாமல் போய்விடக்கூடும். ஆனந்ததாண்டவபுரம் ருத்ரதாண்டவப் பிள்ளைவாள் தனது அசாத்ய சங்கீத வித்வத்தினால் பெற்ற பற்பல பட்டங்களுள் ஒரு சிலவேனும் சொன்னால் ஒருவேளை நமக்குப்புரிகிறதோ இல்லையோ அவரது கோபத்திலிருந்து தப்பித்துவிடலாம். சங்கீத நாரதஸ்ரீ ( இந்த பட்டம் அளித்தவருக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்று நம்பமுடியவில்லை) முதற்கொண்டு சங்கீத ரத்ன, சங்கீத பால, சங்கீத லோல, சங்கீத என்னன்னமோ என்று பல பட்டங்களை இவர் தன்வசமாக்கியிருக்கிறார். யார் கொடுத்தார்கள் என்று இதுவரை யாருக்கும் தெரியாது. மஹாகணம் பொருந்திய என்று சொல்லும்போதே அவரது ஆகீருதி பலருக்கு விளங்கிவிடும். அப்படியும் புரியாதவர்கள் சங்கீத உலகத்தில் இன்னும் தெரிந்துகொள்ளவேண்டியது நிறைய உள்ளது என்றே சொல்லலாம்.

பிள்ளைவாள் ஆனந்த தாண்டவபுரத்தில் பிறந்து அங்கேயே வளர்ந்திருந்தாலும் இப்போது ஜாகை மதராஸ் பட்டிணத்தில். முன்பெல்லாம் ஜட்கா வண்டி வைத்துக்கொண்டு ப்ரயாணம் செய்தவர் இப்போதெல்லாம் தனியாக ஒரு ஆட்டோ வைத்துக்கொண்டிருக்கிறார். வாடகைக்கு அமர்த்திக்கொண்டு போவது இவருக்கு சாத்தியமில்லாமல் போய்விட்டதற்கு மதராஸ் ஆட்டோ ஓட்டுனர்கள் இவரைப் பார்த்து டபுள் ரேட் கேட்டதே காரணம். சொந்த செலவில் ட்ரைவரும் போட்டிருக்கிறார். வண்டி குடைசாயாமல் இருக்கவேண்டும் என்பதற்காக முன்பக்கம் நூற்றியெட்டு எலுமிச்சம்பழம் மாலையை கட்டியிருக்கும் ட்ரைவர் மீது அவருக்கு கொஞ்சம் அத்ருப்தி உண்டு. இந்த மதராஸில கார் எல்லாம் சரிப்பட்டுவராதுய்யா. ஆட்டோதான் சரிய்யா என்று இவர் அதற்கு பல காரணம் சொன்னாலும், அவரது நிதி நிலமை சற்றே கவலைக்கிடமாக இருப்பதாக உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவருக்கு சங்கீதத்தில் அபார தேர்ச்சியுண்டு. நீங்கள் அப்படி நினைக்கவில்லையென்றாலும், அவர் அப்படி நினைக்க அவருக்கு அத்தனை முகாந்திரமும் இருக்கிறது. எல்லாம் காவிரி தண்ணி மகிமைய்யா, காவிரி தண்ணி குடிக்காதவன் சங்கீதம் பாட லாயக்கில்லை என்று இவர் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். காவிரிக்கரையில் பிறந்ததுதான் தனக்கு பிறவியிலேயே சங்கீதம் ஞானம் கரை புரண்டு ஓட காரணம் என்று இவர் கண்டுபிடித்து வைத்திருந்தார். அதை அவ்வப்போது தனது அடிப்பொடிகளுக்கு சொல்லி சிலகித்துக்கொண்டிருப்பார். இப்பல்லாம் காவிரியில் தண்ணியே இல்லயாம் என்று யாராவது சொன்னால், அது சரிய்யா, காவிரி மண்ணு ஒன்னு போதுமேய்யா என்று மடக்கிவிடுகிறார். இவர் ஊரிலிருந்த காலம் அவருடைய நில புலங்களை பார்வையிடுவதிலும் (ஒரு மரத்தடியில் நின்றே அத்தனை காணி நிலத்தையும் பார்வையிடுவார் பைனாகுலர் ஏதும் இல்லாமலேயே) பத்து வரப்பு தள்ளி வேலைபார்ப்பவன் முனகுவதையும் கேட்டுவிடும் காது இவரது சிறப்பு.

ஊரில் மழை இல்லாததாலும், காவிரி பொய்த்ததாலும் ஏற்பட்ட பஞ்சத்தால் நிலங்களை வேறொருவருக்கு விற்றுவிட்டு மதராஸுக்கு வந்துவிட்டாலும் இவர் இவ்வளவு ஞானத்தோடு அந்த கிராமத்தில் இருப்பது என்பது சாத்தியமில்லை என்று சொல்லிக்கொள்வதுண்டு. இவரது ஆகிருதியை பார்த்து பலர் பஞ்சத்திற்கான காரணம் இவராக இருக்கலாமோ என்று எண்ணிக்கொள்வதுண்டு. அக்கணமே அதை உணர்ந்து இவர் “எல்லாம் விணைய்யா.. விணை… நல்ல மனசிருந்தா எல்லாருமே என்னை மாதிரி இருக்கலாம். மனசுல சூது உனக்கு” என்று எரிந்து விழுந்ததும் உண்டு.

பிள்ளைவாள் மதராஸ் வந்தும் இன்னும் குடுமியை விட்டபாடில்லை. குடுமி வைப்பது வீட்டு வழக்கமல்ல என்றாலும் அது இவரது கம்பீரத்தை இன்னும் ஏற்றிக்காட்டுவதாக நம்பிக்கொண்டிருக்கிறார். இரு காதிலும் புளியங்கொட்டை அளவு கடுக்கன் மின்னிக்கொண்டிருக்கிறது. மதராஸ் வித்வத் சபையிலிருந்து அத்தனை சபைகளிலும் இவர் இல்லாமல் ஒரு நிகழ்ச்சியும் நடந்துவிடாது என்று இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறார். அத்தனை சபைகளிலும் இவர் ஒரு கௌரவ மெம்பர். கௌரவம் யாருக்கு என்றெல்லாம் கேட்கக்கூடாது. அத்தனை கச்சேரிகளுக்கும் போய்விடமாட்டார் என்றாலும் சிலர் இவருக்கு டெலிபோன் செய்தோ நேரிலோ சென்று விண்ணப்பிப்பதும் உண்டு. ஒருவேளை இவர் வந்தால் சபை பாதியாவது நிறைந்திருப்பதுபோல இருக்கும் என்பதனாலும் இருக்கலாம். இவரது வாயால் ஒரு முறை பாராட்டை வாங்கிவிடவேண்டும் என்று சிலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். காரணம் அவருக்கும் தெரியாது. ஆனால் எந்த சபாவாக இருந்தாலும் இவருக்கு முதல்வரிசையில் இடமுண்டு.

சிறிய வயதிலிருந்தே பல கச்சேரிகள் கேட்டு கேட்டு நிஜமாகவே கொஞ்சம் சங்கீத ரசனையுள்ளவர்தான். இவர் சாப்பிட்டுவிட்டு வெற்றிலை பெட்டியுடன் ஊஞ்சலில் அமர்ந்து ஆலாபனையை ஆரம்பித்தால் அது ஏப்பமா அல்லது ஜாருவா என்ற சந்தேகம் எழக்கூடும். பிள்ளைவாள் வீட்டில் எப்போதும் சங்கீதம் கேட்டபடியே இருக்கும். அந்தகாலத்து சங்கீத தகடுகளை தொடர்ந்து ஓட்டிக்கொண்டிருப்பார். பலசமயம் அவை சிரட்டையை கருங்கல்லில் தேய்ப்பதுபோல சத்தம் தந்து வந்தாலும் அவைகளை மிக பத்திரமாக பாதுகாத்துவந்தார். ஆர்.பி.எம் சரியாக செட்டாகாததால் வேகமாக பாட்டு கேட்டதை இன்னும் இவர் எக்ஸ்ப்ரஸ் ப்ருகா சங்கீதம் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்.

இவரது வீட்டிற்கு வராத சங்கீத வித்வான்களே கிடையாது என்று சொல்லலாம். அத்தனை பேரும் இவரது வீட்டிற்கு ஒரு முறையாவது வந்துபோயிருப்ப்பார்கள். என்ன இருந்தாலும் இவரது விருந்தோம்பலில் மட்டும் குறை சொல்லமுடியாது. இவரது வீட்டு காபி குடித்தால் தேவாம்ருதம் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளலாம் என்பது சங்கீத உலகின் நிர்ணயம். மேலும் இவரது வீட்டில் பற்பல தேக்கு அலமாரிகளில் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் சங்கீத சாஸ்திர புத்தகங்கள் அனைத்தும் உண்மையில் ஒரு பொக்கிஷம். எங்கும் கிடைக்காத பற்பல அரிய புத்தகங்கள் இவரிடம் அடைக்கலமானதற்கு காரணம் இவரது சங்கீத பசி என்றும் சொல்லலாம். இவருக்கு ஏதாவது ஒரு பசி இருந்துகொண்டே இருக்கும். வயிற்றுக் குணவில்லாத போது சிறிது செவிக்கு. அவ்வப்போது சங்கீத உலகின் பழைய ஜாம்பவான்கள் பேரைச்சொல்லி, அவர்கள் எல்லாம் இங்கே தான் வந்து தங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்வார்கள் என்று அடித்துவிடுவார். யாருக்குத்தெரியும், அவர்கள்தான் இப்போது இல்லையே.

அந்தப்புத்தகங்களை இவர் ஒரு மணிநேரம் புரட்டியிருப்பாரோ இல்லையோ தெரியது. ஆனால் அத்தனை புத்தகங்களின் தலைப்பும் நிச்சயம் மனப்பாடமாகத் தெரியும். “சதுர்த்தண்டி ப்ரகாசிகால என்ன சொல்லியிருக்கான் போய் பாருமய்யா. அப்புறம் வந்து பேசும்” என்று சொல்லி மடக்கிவிடுவதற்கு அது மிகவும் அவசியமாக இருப்பது அவருக்கு தெரிந்திருந்தது. இவரது சொந்த கருத்தைகூட சங்கீத ரத்னாகரத்தில் இருப்பதாக சொல்லி சாதித்துவிடுவார். யாருக்கு பொறுமை இருக்கிறது இவர் சொல்வதை நினைவில் வைத்துக்கொண்டு போய் தேடி பார்த்து தெரிந்துகொள்ள என்ற தைரியம்தான்.

ருத்ரதாண்டவம் பிள்ளைவாள் கச்சேரிகளுக்கு செல்லும்போது மிக நல்ல பட்டு வேஷ்டியும், அரதப்பழசானாலும் இன்னும் நிறம் மங்காமல் இருக்கும் நேவி ப்ளூ முழுக்கை கோட்டும், பட்டு தலைப்பாகையும் கையில் மைசூரிலிருந்து வரவழைத்திருந்த வெள்ளிப்பூண் போட்ட சந்தன வாக்கிங் ஸ்டிக்குடனும், விரல்களில் ஒரு பத்து பதினைந்து மோதிரங்களுடனும், மணக்கும் ஜவ்வாதுடன் ஆட்டோவில் ஆரோகணித்துவருவது என்பது கிட்டத்தட்ட ஆருத்ரா தரிசனத்தின்போது தில்லையம்பலத்தார் தேரில் வருவதற்கு ஒப்பாக இருக்கும்.

இவரது ரசிப்புத்தன்மைக்கு அனைவரும் அடிமை என்றே சொல்லலாம். அடடே, சபாஷ், த்சௌ..த்சௌ., த்சு..த்சு.., பலே போன்ற பல ஆஹாகாரங்கள் செய்துகொண்டே கச்சேரி கேட்பதை பாடுபவர் உட்பட அனைவரும் விரும்புவார்கள். கச்சேரி முடிந்ததும் அவசரமாக யாரேனும் சம்ப்ரதாயமாய் இரண்டு வார்த்தை பேசி நிகழ்ச்சியை முடித்துவிடலாம் என்று நினைத்தாலும், வலிய சென்று நான் இரண்டு வார்த்தை சொல்லிவிடுகிறேனே என்று மைக்கை வாங்கிக்கொண்டு உரிமையோடு ஒரு இருநூறு வார்த்தைக்கு குறையாமல் இரண்டாயிரம் வார்த்தைக்கு மிகாமல் ஒரு சிற்றுரை ஆற்றிவிட்டுத்தான் ஆறுவார். இவரது பெயருக்கேற்ப இவர் சிலசமயம் பேச்சில் ருத்ரதாண்டவம் ஆடியதும் உண்டு. சங்கீதத்திலோ சமையலிலோ ஒரு கல் ஏறக்குறைய இருந்தாலும் ஒருபோதும் ஒத்துக்கொள்ளமாட்டார். அது சங்கீதத்திற்கு ஏற்பட்ட இழுக்கு என்றும். அதை சுட்டிக்காட்டவேண்டியது அவருடைய கடமை என்றும் எண்ணிக்கொண்டிருக்கிறார். இதன்காரணமாக சபைகளில் நடத்தப்படும் காண்டீன்களில் பெருத்த விவாதமே நடந்து கைகலப்பிலும் முடிந்திருக்கிறது என்று சொல்வார்கள்.

இப்போது முக்கியமான செய்தி. இவர் இந்தவருடம் நடக்கும் டிசம்பர் சீசனுக்கு கிட்டத்தட்ட அனைத்து சபைகளிலும் முதல்தர இலவச பாஸ்களுக்கு சொல்லவேண்டியவர்களிடம் சொல்லிவிட்டாராம். ஆட்டோவை நல்லமுறையில் சர்வீஸ் செய்து மழைநீர் படாமல் மூடிவைத்திருக்கிறாராம். இந்த வருடம் தனக்குக் கிடைக்கும் என்றிருந்த ஒரு சங்கீத கலா ரஸிகர் விருதை வேறு யாருக்கோ கொடுத்துவிட்டார்களாம். ஒரு கச்சேரியையும் விடுவதில்லை, எல்லோரையும் கிழித்துவிடுகிறேன் கிழித்து என்று இந்தமுறை கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறாராம். இதை அறிந்த சங்கீத உலகில் சிலர் பீதியிலும், பலர் அதிர்ச்சியிலும் உறைந்துபோயிருக்கிறார்களாம். எதற்கும் இருக்கட்டும் என்று ஆட்டோ ட்ரைவர் இப்போதே நூற்றியெட்டை ஆயிரத்தியெட்டாக உயர்த்திவிட்டால் என்ன என்ற சிந்தனையில் இருப்பதாகவும் கேள்வி.

ஜாக்கிரதை. ஜாக்கிரதை. ஜாக்கிரதை.

%d bloggers like this: