ஆனந்ததாண்டவபுரம் ருத்ரதாண்டவப் பிள்ளை

ஆனந்ததாண்டவபுரம் ருத்ரதாண்டவப் பிள்ளை. இப்படி மொட்டையாக சொன்னால் யாருக்கும் புரியாமல் போய்விடக்கூடும். ஆனந்ததாண்டவபுரம் ருத்ரதாண்டவப் பிள்ளைவாள் தனது அசாத்ய சங்கீத வித்வத்தினால் பெற்ற பற்பல பட்டங்களுள் ஒரு சிலவேனும் சொன்னால் ஒருவேளை நமக்குப்புரிகிறதோ இல்லையோ அவரது கோபத்திலிருந்து தப்பித்துவிடலாம். சங்கீத நாரதஸ்ரீ ( இந்த பட்டம் அளித்தவருக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்று நம்பமுடியவில்லை) முதற்கொண்டு சங்கீத ரத்ன, சங்கீத பால, சங்கீத லோல, சங்கீத என்னன்னமோ என்று பல பட்டங்களை இவர் தன்வசமாக்கியிருக்கிறார். யார் கொடுத்தார்கள் என்று இதுவரை யாருக்கும் தெரியாது. மஹாகணம் பொருந்திய என்று சொல்லும்போதே அவரது ஆகீருதி பலருக்கு விளங்கிவிடும். அப்படியும் புரியாதவர்கள் சங்கீத உலகத்தில் இன்னும் தெரிந்துகொள்ளவேண்டியது நிறைய உள்ளது என்றே சொல்லலாம்.

பிள்ளைவாள் ஆனந்த தாண்டவபுரத்தில் பிறந்து அங்கேயே வளர்ந்திருந்தாலும் இப்போது ஜாகை மதராஸ் பட்டிணத்தில். முன்பெல்லாம் ஜட்கா வண்டி வைத்துக்கொண்டு ப்ரயாணம் செய்தவர் இப்போதெல்லாம் தனியாக ஒரு ஆட்டோ வைத்துக்கொண்டிருக்கிறார். வாடகைக்கு அமர்த்திக்கொண்டு போவது இவருக்கு சாத்தியமில்லாமல் போய்விட்டதற்கு மதராஸ் ஆட்டோ ஓட்டுனர்கள் இவரைப் பார்த்து டபுள் ரேட் கேட்டதே காரணம். சொந்த செலவில் ட்ரைவரும் போட்டிருக்கிறார். வண்டி குடைசாயாமல் இருக்கவேண்டும் என்பதற்காக முன்பக்கம் நூற்றியெட்டு எலுமிச்சம்பழம் மாலையை கட்டியிருக்கும் ட்ரைவர் மீது அவருக்கு கொஞ்சம் அத்ருப்தி உண்டு. இந்த மதராஸில கார் எல்லாம் சரிப்பட்டுவராதுய்யா. ஆட்டோதான் சரிய்யா என்று இவர் அதற்கு பல காரணம் சொன்னாலும், அவரது நிதி நிலமை சற்றே கவலைக்கிடமாக இருப்பதாக உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவருக்கு சங்கீதத்தில் அபார தேர்ச்சியுண்டு. நீங்கள் அப்படி நினைக்கவில்லையென்றாலும், அவர் அப்படி நினைக்க அவருக்கு அத்தனை முகாந்திரமும் இருக்கிறது. எல்லாம் காவிரி தண்ணி மகிமைய்யா, காவிரி தண்ணி குடிக்காதவன் சங்கீதம் பாட லாயக்கில்லை என்று இவர் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். காவிரிக்கரையில் பிறந்ததுதான் தனக்கு பிறவியிலேயே சங்கீதம் ஞானம் கரை புரண்டு ஓட காரணம் என்று இவர் கண்டுபிடித்து வைத்திருந்தார். அதை அவ்வப்போது தனது அடிப்பொடிகளுக்கு சொல்லி சிலகித்துக்கொண்டிருப்பார். இப்பல்லாம் காவிரியில் தண்ணியே இல்லயாம் என்று யாராவது சொன்னால், அது சரிய்யா, காவிரி மண்ணு ஒன்னு போதுமேய்யா என்று மடக்கிவிடுகிறார். இவர் ஊரிலிருந்த காலம் அவருடைய நில புலங்களை பார்வையிடுவதிலும் (ஒரு மரத்தடியில் நின்றே அத்தனை காணி நிலத்தையும் பார்வையிடுவார் பைனாகுலர் ஏதும் இல்லாமலேயே) பத்து வரப்பு தள்ளி வேலைபார்ப்பவன் முனகுவதையும் கேட்டுவிடும் காது இவரது சிறப்பு.

ஊரில் மழை இல்லாததாலும், காவிரி பொய்த்ததாலும் ஏற்பட்ட பஞ்சத்தால் நிலங்களை வேறொருவருக்கு விற்றுவிட்டு மதராஸுக்கு வந்துவிட்டாலும் இவர் இவ்வளவு ஞானத்தோடு அந்த கிராமத்தில் இருப்பது என்பது சாத்தியமில்லை என்று சொல்லிக்கொள்வதுண்டு. இவரது ஆகிருதியை பார்த்து பலர் பஞ்சத்திற்கான காரணம் இவராக இருக்கலாமோ என்று எண்ணிக்கொள்வதுண்டு. அக்கணமே அதை உணர்ந்து இவர் “எல்லாம் விணைய்யா.. விணை… நல்ல மனசிருந்தா எல்லாருமே என்னை மாதிரி இருக்கலாம். மனசுல சூது உனக்கு” என்று எரிந்து விழுந்ததும் உண்டு.

பிள்ளைவாள் மதராஸ் வந்தும் இன்னும் குடுமியை விட்டபாடில்லை. குடுமி வைப்பது வீட்டு வழக்கமல்ல என்றாலும் அது இவரது கம்பீரத்தை இன்னும் ஏற்றிக்காட்டுவதாக நம்பிக்கொண்டிருக்கிறார். இரு காதிலும் புளியங்கொட்டை அளவு கடுக்கன் மின்னிக்கொண்டிருக்கிறது. மதராஸ் வித்வத் சபையிலிருந்து அத்தனை சபைகளிலும் இவர் இல்லாமல் ஒரு நிகழ்ச்சியும் நடந்துவிடாது என்று இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறார். அத்தனை சபைகளிலும் இவர் ஒரு கௌரவ மெம்பர். கௌரவம் யாருக்கு என்றெல்லாம் கேட்கக்கூடாது. அத்தனை கச்சேரிகளுக்கும் போய்விடமாட்டார் என்றாலும் சிலர் இவருக்கு டெலிபோன் செய்தோ நேரிலோ சென்று விண்ணப்பிப்பதும் உண்டு. ஒருவேளை இவர் வந்தால் சபை பாதியாவது நிறைந்திருப்பதுபோல இருக்கும் என்பதனாலும் இருக்கலாம். இவரது வாயால் ஒரு முறை பாராட்டை வாங்கிவிடவேண்டும் என்று சிலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். காரணம் அவருக்கும் தெரியாது. ஆனால் எந்த சபாவாக இருந்தாலும் இவருக்கு முதல்வரிசையில் இடமுண்டு.

சிறிய வயதிலிருந்தே பல கச்சேரிகள் கேட்டு கேட்டு நிஜமாகவே கொஞ்சம் சங்கீத ரசனையுள்ளவர்தான். இவர் சாப்பிட்டுவிட்டு வெற்றிலை பெட்டியுடன் ஊஞ்சலில் அமர்ந்து ஆலாபனையை ஆரம்பித்தால் அது ஏப்பமா அல்லது ஜாருவா என்ற சந்தேகம் எழக்கூடும். பிள்ளைவாள் வீட்டில் எப்போதும் சங்கீதம் கேட்டபடியே இருக்கும். அந்தகாலத்து சங்கீத தகடுகளை தொடர்ந்து ஓட்டிக்கொண்டிருப்பார். பலசமயம் அவை சிரட்டையை கருங்கல்லில் தேய்ப்பதுபோல சத்தம் தந்து வந்தாலும் அவைகளை மிக பத்திரமாக பாதுகாத்துவந்தார். ஆர்.பி.எம் சரியாக செட்டாகாததால் வேகமாக பாட்டு கேட்டதை இன்னும் இவர் எக்ஸ்ப்ரஸ் ப்ருகா சங்கீதம் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்.

இவரது வீட்டிற்கு வராத சங்கீத வித்வான்களே கிடையாது என்று சொல்லலாம். அத்தனை பேரும் இவரது வீட்டிற்கு ஒரு முறையாவது வந்துபோயிருப்ப்பார்கள். என்ன இருந்தாலும் இவரது விருந்தோம்பலில் மட்டும் குறை சொல்லமுடியாது. இவரது வீட்டு காபி குடித்தால் தேவாம்ருதம் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளலாம் என்பது சங்கீத உலகின் நிர்ணயம். மேலும் இவரது வீட்டில் பற்பல தேக்கு அலமாரிகளில் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் சங்கீத சாஸ்திர புத்தகங்கள் அனைத்தும் உண்மையில் ஒரு பொக்கிஷம். எங்கும் கிடைக்காத பற்பல அரிய புத்தகங்கள் இவரிடம் அடைக்கலமானதற்கு காரணம் இவரது சங்கீத பசி என்றும் சொல்லலாம். இவருக்கு ஏதாவது ஒரு பசி இருந்துகொண்டே இருக்கும். வயிற்றுக் குணவில்லாத போது சிறிது செவிக்கு. அவ்வப்போது சங்கீத உலகின் பழைய ஜாம்பவான்கள் பேரைச்சொல்லி, அவர்கள் எல்லாம் இங்கே தான் வந்து தங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்வார்கள் என்று அடித்துவிடுவார். யாருக்குத்தெரியும், அவர்கள்தான் இப்போது இல்லையே.

அந்தப்புத்தகங்களை இவர் ஒரு மணிநேரம் புரட்டியிருப்பாரோ இல்லையோ தெரியது. ஆனால் அத்தனை புத்தகங்களின் தலைப்பும் நிச்சயம் மனப்பாடமாகத் தெரியும். “சதுர்த்தண்டி ப்ரகாசிகால என்ன சொல்லியிருக்கான் போய் பாருமய்யா. அப்புறம் வந்து பேசும்” என்று சொல்லி மடக்கிவிடுவதற்கு அது மிகவும் அவசியமாக இருப்பது அவருக்கு தெரிந்திருந்தது. இவரது சொந்த கருத்தைகூட சங்கீத ரத்னாகரத்தில் இருப்பதாக சொல்லி சாதித்துவிடுவார். யாருக்கு பொறுமை இருக்கிறது இவர் சொல்வதை நினைவில் வைத்துக்கொண்டு போய் தேடி பார்த்து தெரிந்துகொள்ள என்ற தைரியம்தான்.

ருத்ரதாண்டவம் பிள்ளைவாள் கச்சேரிகளுக்கு செல்லும்போது மிக நல்ல பட்டு வேஷ்டியும், அரதப்பழசானாலும் இன்னும் நிறம் மங்காமல் இருக்கும் நேவி ப்ளூ முழுக்கை கோட்டும், பட்டு தலைப்பாகையும் கையில் மைசூரிலிருந்து வரவழைத்திருந்த வெள்ளிப்பூண் போட்ட சந்தன வாக்கிங் ஸ்டிக்குடனும், விரல்களில் ஒரு பத்து பதினைந்து மோதிரங்களுடனும், மணக்கும் ஜவ்வாதுடன் ஆட்டோவில் ஆரோகணித்துவருவது என்பது கிட்டத்தட்ட ஆருத்ரா தரிசனத்தின்போது தில்லையம்பலத்தார் தேரில் வருவதற்கு ஒப்பாக இருக்கும்.

இவரது ரசிப்புத்தன்மைக்கு அனைவரும் அடிமை என்றே சொல்லலாம். அடடே, சபாஷ், த்சௌ..த்சௌ., த்சு..த்சு.., பலே போன்ற பல ஆஹாகாரங்கள் செய்துகொண்டே கச்சேரி கேட்பதை பாடுபவர் உட்பட அனைவரும் விரும்புவார்கள். கச்சேரி முடிந்ததும் அவசரமாக யாரேனும் சம்ப்ரதாயமாய் இரண்டு வார்த்தை பேசி நிகழ்ச்சியை முடித்துவிடலாம் என்று நினைத்தாலும், வலிய சென்று நான் இரண்டு வார்த்தை சொல்லிவிடுகிறேனே என்று மைக்கை வாங்கிக்கொண்டு உரிமையோடு ஒரு இருநூறு வார்த்தைக்கு குறையாமல் இரண்டாயிரம் வார்த்தைக்கு மிகாமல் ஒரு சிற்றுரை ஆற்றிவிட்டுத்தான் ஆறுவார். இவரது பெயருக்கேற்ப இவர் சிலசமயம் பேச்சில் ருத்ரதாண்டவம் ஆடியதும் உண்டு. சங்கீதத்திலோ சமையலிலோ ஒரு கல் ஏறக்குறைய இருந்தாலும் ஒருபோதும் ஒத்துக்கொள்ளமாட்டார். அது சங்கீதத்திற்கு ஏற்பட்ட இழுக்கு என்றும். அதை சுட்டிக்காட்டவேண்டியது அவருடைய கடமை என்றும் எண்ணிக்கொண்டிருக்கிறார். இதன்காரணமாக சபைகளில் நடத்தப்படும் காண்டீன்களில் பெருத்த விவாதமே நடந்து கைகலப்பிலும் முடிந்திருக்கிறது என்று சொல்வார்கள்.

இப்போது முக்கியமான செய்தி. இவர் இந்தவருடம் நடக்கும் டிசம்பர் சீசனுக்கு கிட்டத்தட்ட அனைத்து சபைகளிலும் முதல்தர இலவச பாஸ்களுக்கு சொல்லவேண்டியவர்களிடம் சொல்லிவிட்டாராம். ஆட்டோவை நல்லமுறையில் சர்வீஸ் செய்து மழைநீர் படாமல் மூடிவைத்திருக்கிறாராம். இந்த வருடம் தனக்குக் கிடைக்கும் என்றிருந்த ஒரு சங்கீத கலா ரஸிகர் விருதை வேறு யாருக்கோ கொடுத்துவிட்டார்களாம். ஒரு கச்சேரியையும் விடுவதில்லை, எல்லோரையும் கிழித்துவிடுகிறேன் கிழித்து என்று இந்தமுறை கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறாராம். இதை அறிந்த சங்கீத உலகில் சிலர் பீதியிலும், பலர் அதிர்ச்சியிலும் உறைந்துபோயிருக்கிறார்களாம். எதற்கும் இருக்கட்டும் என்று ஆட்டோ ட்ரைவர் இப்போதே நூற்றியெட்டை ஆயிரத்தியெட்டாக உயர்த்திவிட்டால் என்ன என்ற சிந்தனையில் இருப்பதாகவும் கேள்வி.

ஜாக்கிரதை. ஜாக்கிரதை. ஜாக்கிரதை.

Advertisements

About ராமச்சந்த்ர சர்மா
A Music Buff

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: