டாக்டர் சப்தபூதம்

என் நண்பனுடைய வற்புறுத்தலை இதற்குமேல் தவிர்க முடியாது என்ற நிலை வந்ததும், வேறு வழியில்லாமல் அவனது பைக்கில் தொற்றிக்கொண்டு இங்கு வந்து சேர்ந்தேன். இப்போது டாக்டர் ஸப்தபூதத்தின் வீட்டு வாசலில் நின்றுகொண்டிருக்கிறேன். கூடவே என் நண்பனும். அவன் அதீத உணர்ச்சிகளால் ஆட்கொள்ளப்பட்டவனாய், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கப்போகும் மனநிலையில் நின்றிருந்தான். அவனது செல்போனிலிருந்து எழுந்த வயர்கள் அவன் காதுகளில் முடிந்திருந்தது. ஏதோ பாடல் ஓடிக்கொண்டிருக்கவேண்டும் என்று ஊகித்தேன். என்ன என்று சைகை காட்டினேன். ரஞ்சனி கேட்டுக்கொண்டிருக்கிறேன். உனக்குத்தெரியுமோ, பைக் ஓட்டி முடித்ததும் 3 நிமிடம் ரஞ்சனி கேட்டால், நம்ம நரம்பு மண்டலம் சமநிலை அடையுமாம் என்றான். இதுவும் சப்தபூதத்தின் கைங்கர்யம்தான் என்று தெளிவாகப் புரிந்தது. பைக் ஓட்டும்போது நாகஸ்வராவளி கேட்டுக்கொண்டே ஓட்டியிருப்பான் போலும், உடலெல்லாம் வலித்தது.
காலிங்பெல்லை அழுத்தலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தபோது பேசாமல் திரும்பப்போய்விடலாமா என்று யோசித்தேன். அதை கண்டுகொண்ட நண்பன் தடதடவென கதவைத்தட்டினான். உள்ளிருந்து கம்பீரமாக ஒரு குரல் வந்தது, திஸ்ர நடையில் கதவை தட்டும்போது அந்த மூன்றாவது தட்டில் கார்வை ஒரு மாத்திரை அதிகமாகிப்போச்சே கேட்டியோ என்றபடியே வந்து கதவைத்திறந்தார். அவர்தான் டாக்டர் ஸப்தபூதமாய் இருக்கவேண்டும். ரங்காராவ் போன்ற ஒரு தோற்றம். வேஷ்டியும் வெற்றுடம்புமாய் இருந்தார்.

வாங்கோ என்று ஸ்ருதி சுத்தமாகப் பேசினார்.

இவன் தான் சேது, நான் முன்பே சொன்னேனில்லையா என்றான்.

ம்..ம்.. ஞாபகம் இருக்கு என்ன விஷயம் என்று மந்த்ரஸ்தாயியில் கேட்டார்.

இவனுக்கு கொஞ்சநாளாக ஒற்றைத்தலைவலி அதுதான் என்றான்.

எந்தப்பக்கம் என்று தேர்ந்த மருத்துவர் போல தொட்டுப்பார்த்தார்.

தினமும் ஏதாவது பாட்டு கேட்பதுண்டா?

இல்லை எப்போதாவது, சில சினிமாப்பாட்டு அவ்வளவுதான்.

யாரோடது?

யாரோடதாவது. குறிப்பா எதுவும் இல்லை.

அதுதான் பிரச்சனையே. இப்போவெல்லாம், நாய்ஸ் பொல்லூஷன் லெவல் ரொம்ப அதிகமாயிடுச்சு. அதுவும், காது ஜவ்வு பிஞ்சு போற அளவுக்கு அடி பின்னிடறா. இந்த குத்துப்பாட்டுன்னு ஒன்னு இருக்காமே, அதை கேட்டு ரெண்டு பேருக்கு பேதியே ஆயிடுச்சு, அவங்களுக்கு 3 நாளைக்கு பந்தனப்ரியா ராகம் காலைல மத்யானம் சாயங்காலம்ன்னு மூணுவேள கொடுத்தேன் அதுக்கப்பறம், அமிர்த பெஹாக் பாடி இளக்கவேண்டியதாயிடுத்து.

நான் என்ன பேசுவது என்று புரியாமல் நின்றிருந்தேன்.உள்ளேவா, ஒரு அரைமணிக்கு பாட்டு கேக்கலாம், உன் தலைவலி எல்லாம் பறந்து போய்விடும் என்று அவரது தனி வார்டுக்குள் கூட்டிச்சென்றார். அலமாரியிலிருந்து 5 நிமிடம் தேடி ஒரு சிடியை எடுத்தூப்போட்டார்.

என்ன ராகம் தெரியரதா? ராமப்ரியா, ராமனுக்கு பிடித்தமான ராகம். பத்து தலை ராவணனையே கொன்ன ராமனுக்கே பிடிக்கும்னா உன் ஒத்தத்தலை எம்மாத்திரம் என்றார்.

பொருமையிழந்து “இந்த ராகத்துக்கெல்லாம் ஹீலிங் குணம் இருக்கா உண்மையிலேயே” என்றேன்.அடிபட்ட நாயைப்பார்ப்பதுபோலே ஒரு மாதிரியாக தலையைச் சாய்ந்து பார்த்தார்.

(தொடரும்)

Advertisements

About ராமச்சந்த்ர சர்மா
A Music Buff

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: