கோதாவரி பயணம் – விஷ்ணுபுரம் வட்டம் – 2

அதிகாலை 4:30 மணியளவில் விழித்துப் பார்த்தபோது சீரால ஸ்டேஷனில் நின்றிருந்தது. மிகச்சுலபமாக அழகி என்று சொல்லிவிடக்கூடிய அளவில் ஒரு பெண் வந்து என் இருக்கையில் உட்காரலாமா என்று கேட்டாள். சுமார் 18-20  வயது இருக்கலாம். நிச்சயமாக என்று சொல்லி அவளுக்காக எழுந்து அமர்ந்துகொண்டேன். அந்த காலை நேரத்திலும் வெளிர் மஞ்சள் நிற உடையில் மிக அழகாக இருந்தாள். வாழ்வுடா உனக்கு என்று சொல்லிக்கொண்டேன். அவள் உட்கார்ந்தபடியே தூங்கிக்கொண்டிருந்தாள். நான் அவளைப்பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு ஒன்றரை மணிநேரம் போனது தெரியவில்லை.அவள் ஒங்கோலில் இறங்கிப்போய்விட்டாள். என் சுயத்திலிருந்து ஏதோ பறிபோனதுபோல உணர்ந்தேன்.

விஜயவாடா சேரும்போதே மணி 7 ஆகியிருந்தது. ஏலூரில் நண்பன் அவனது ஹோட்டலில் இருந்து எம்.எல்.ஏ. பெரசட்டு அனுப்பியிருந்தான். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னியும் இஞ்சி சட்னியும். இந்த பயணத்தில் ஆந்திர உணவின் முதல் சுவை. ராஜமண்ட்ரி சேரும்போது மணி 10 ஆகிவிட்டது. ஆளுக்கு 10 ரூபாய் என்று பேசிக்கொண்டு 17 பேரும் மூன்று ஆட்டோக்களில் கோதாவரிக்கரையை சேர்ந்தோம்.

அதற்குள் படகின் கேப்டன் ஒரு 10 முறையாவது என்னை அழைத்திருப்பார். எல்லாம் தயாராக இருக்கிறது நீங்கள் எங்கே என்று மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தார். படகில் அனைவரும் ஏறி அமர்ந்துகொண்டோம். பெரும்பாலானவர்கள் பையை உள்ளே போட்டுவிட்டு மேல் தளத்திற்குச் சென்றுவிட்டனர். சிலர் டீ குடிக்க, சிலர் சிகரட் வாங்கி ஸ்டாக் வைக்க என்று அங்கும் இங்கும் போய்க்கொண்டிருந்தனர்.படகில் அனைவரையும் தன்னக்கட்டி ஏற்றுவதிலேயே தெரிந்துபோய்விட்டது இந்த 17 பேரையும் ஒருங்கிணைப்பது அத்தனை சுலபமான ஒன்று அல்ல என்று.

அரங்கசாமி “ஒன்னும் ப்ரச்சனையே இல்ல சர்மா” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார். அவருக்கே சொல்லிக்கொள்கிறாரோ என்று சுயமுன்னேற்ற நூல் சார்ந்த ஒரு சிந்தனை சரடும் தோன்றியது. படகிற்கு டீசல் போடப்பட்டிருந்தது. 100 லிட்டர் தான் கொள்ளளவு என்றாலும் அது போதாது என்பதால் 4 கேன்களில் மேலும் 200 லிட்டர் ஏற்றப்பட்டது. திடீரென அரங்கசாமி அரக்கபரக்க கப்பலில் இருந்து படிகளேறிவந்தார். என்ன சர்மா, நமக்கு மட்டும்தான் இந்த படகு என்று சொன்னீர்கள், ஆனால் வேறு சிலரும் இருக்கிறார்களே என்றார். அதிர்ந்துபோனேன். கேப்டனிடம் கேட்டபோது அவர்கள் பாடகர்கள் என்று சொன்னார். அரங்கசாமி ஆசுவாசமானார். பாடகர் என்றால் ஜிப்பா, வேஷ்டி, சந்தனப்பொட்டு, ஜவ்வாது என்று நினைத்திருந்திருப்பார். ஒரு சோனியான பெண்ணும், அடியாள் போன்ற ஒரு உருவத்தையும் பாடகர்களாக அவர் நினைத்துப்பார்த்திருக்க முடியாது.

கேப்டன் சீக்கரம் ஏறுங்கள், நேரமாகிறது என்று விரட்டிக்கொண்டிருந்தார். எனக்கு என்ன ப்ரச்சனை என்றே புரியவில்லை. நேரமானால் என்ன என்று கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் போலீஸ், செக்போஸ்ட் என்று ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தார். மீண்டும் ஒருமுறை 17 வரை எண்ணிப்பார்த்த பிறகு படகு மெதுவாக ரீங்கரித்தபடி கிளம்பியது. பூரியும் இட்லியும் காலை உணவாக பொட்டலம் கட்டி வைத்திருந்தார்கள் வைத்திருந்தார்கள். யாரும் இட்லியைத் தொடவே இல்லை. சூடாக ஒரு காப்பி பரிமாரப்பட்டது. இந்தப்படகு பெரும்பாலும் பட்டுசீம எனும் இடத்தில் இருந்தே தொடங்கும். எங்களுக்காக சிறப்பு அனுமதியின் பேரில் ராஜமண்ட்ரியில் இருந்து புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அனைவரும் மேலே சென்றபிறகு நானும் க்ருஷ்ணனும் கேப்டனோடு பயணத்திட்டம் குறித்து விவாதித்துக்கொண்டிருந்தோம். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு சீக்கரம் தேவிப்பட்டினத்தைக் கடந்துவிடுவது என்று முடிவு செய்தோம். நடுவில் எங்கும் நிறுத்தாமல் சென்றுவிடுவது, வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றார் கேப்டன். தேவிப்பட்டினத்தில் ஒரு போலீஸ் செக்போஸ்ட் உண்டு. அதில் அனைவரது பெயரையும் எழுதி அனுமதி பெற்ற பின்னரே செல்லமுடியும்.

கப்பலின் முன்னால் கிடந்த கயிறுகளில் நின்று சிலர் வழுக்கி விழுந்தார்கள். மேலே யுவன் அவரது அமெரிக்க உடையிலும் பாதியைக்களைந்து கவர்ச்சியாக தோற்றமளித்தார். பொதுவாகச்சென்ற உரையாடல் பாடல்களின் பக்கம்திரும்பியது. மாற்றி மாற்றி பாடல்கள் பாடத்தொடங்கினோம். இருவரும் இணைந்து பொன்னொன்று கண்டேன் பாடலை பாட முயற்சித்து முடிவில் யுவனே பாடி முடித்தார். எனக்கு பாடல் வரிகள் தெரியாது. யுவன் ஒரு அற்புதமான பாடகர். நல்ல எனர்ஜி உள்ள மனிதர். அவரைச்சுற்றி இருப்பவர்களுக்கெல்லாம் அது பரவுவது அசாதாரணமாகத்தெரியும். என்ன அவருக்கு ஒரு நாளைக்கு சுமார் 10-12 மணிநேரத் தூக்கம் அவசியம்.

ஏற்பாடுசெய்த பாடகர்கள் தேவையில்லை அவர்கள் வேறு எதற்கு என்று சிலர் ஆதங்கப்பட்டார்கள். கீழிருந்து நாங்கள் பாடுவதைக்கேட்ட அவர்களுக்கு இயல்பாகவே இசைக்கலைஞர்களுக்கு இருக்கும் ஒரு உத்வேகம் உந்தித்தள்ள மேல்தளத்திற்கு டேப்பு வாத்தியம் சகிதம் வந்துவிட்டார்கள். அவர்களோடு யுவன் பாடல்களால் ஒரு துவந்த யுத்தமே நிகழ்த்தினார். டாக்டரும் இணைந்துகொண்டார். எனக்கு டேப்பினோடு பாடும் பாடல்கள் எதுவும் தெரியாது என்று ஒதுங்கிவிட்டேன். இருந்தாலும் விடாமல் என்னையும் ஒரு பாடல் பாடவைத்தார்கள். சிரிப்பும் கும்மாளமுமாக மேல்தளம் அதிர்ந்தது. ஒரு மூன்று மணிநேரம் கோதாவரியைப் பார்த்துக்கொண்டும், இசையை கேட்டுக்கொண்டும் கழிந்தது.

மதிய உணவு மேலேயே பரிமாரப்பட்டது. மேலதிகமாக சிக்கன் ஏற்பாடாகியிருந்தது. பலர் கண்ணில் நீர். அது உணவைப்பார்த்தாலே பற்றிக்கொள்ளும் காரத்தினால் என்று புரிய மாலையானது. போலவரம் என்னும் ஊரில் ஏற்பாடு செய்திருந்த மெத்தைகளும் தலையணைகளும் போர்வையும் ஏற்றப்பட்டது. பாடகர்கள் அங்கேயே இறங்கிக்கொண்டார்கள். தேவிப்பட்டிணம் சேரும்போது மாலை 4:30 ஆகிவிட்டிருந்தது. போலீஸ் துணை ஆய்வாளர் படகை இழுத்துக்கட்டிவிடு நேரமாகிவிட்டது என்று கூறிவிட்டார். கேப்டன் அவருடன் பேசி ஒரு 300 ரூபாய் தள்ளினார். படகு தேவிப்பட்டினத்தைக் கடந்து மெதுவாக முன்னேறியது. இனி நம் இஷ்டம்தான் எங்கு வேண்டுமானாலும் படகை நிறுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

யுவன் காலையில் இருந்து குளிக்கவேண்டும் என்று அதகளம் பண்ணிக்கொண்டிருந்தார். அவருக்கும் அனைவருக்கும் கோதாவரியில் நனையவேண்டும் என்று தோன்றியது. படகை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு நீரில் இறங்கினோம். கேப்டன் மீன் இருக்கிறதா என்று கடந்துசெல்லும் ஒவ்வொரு சிறு படகாக நிறுத்தி கேட்டுக்கொண்டிருந்தார்.

குறிப்பு: கேப்டனின் இயற்பெயர் ஷேக் அகமது அலி, ஆனால் அழைப்பது சம்தானி என்ற அவரது முன்னோரின் பெயர்கொண்டு. அவர் அந்த படகின் ஒரு பங்குதாரரும் கூட. படகை அவரும் அவரது பாய்ஜானும் சேர்ந்து கட்டியதாகச்சொன்னார். போலவரம் அவரது சொந்த ஊர். கங்கராஜு, ராம்பாபு என இருவர் உதவிக்கு. சம்தானியின் மகனும், சமையற்காரரும் உண்டு. மொத்தம் எங்களது க்ரூ சம்தானி, அவரது மகன், கங்கராஜு, ராம்பாபு, சுக்கான் பிடிப்பவர், சமையற்காரர், இஞ்சின் ஆபரேட்டர் என்று 7 பேர்.

Advertisements

About ராமச்சந்த்ர சர்மா
A Music Buff

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: