கோதாவரி பயணம் – விஷ்ணுபுரம் வட்டம் – 3

எனக்கு காவிரி நல்ல பழக்கமுண்டு. காவிரிக்கரையில் வாழ்ந்திருந்ததால், காவிரியில் சுமார் 18 வருடங்கள் பழக்கம் எனக்கு. எங்களூருக்கு வரும்போது காவிரி மிகவும் சுத்தமாகவே இருக்கும் அப்போது. கோதாவரியில் குளிப்பது நல்ல அனுபவமென்றாலும், காவிரியில் குளித்ததன் மனஎழுச்சியை இதில் அடையமுடியவில்லை. ஆனாலும் மனதளவிலான காரணங்களால் கோதாவரி குளியல் மிகவும் சுகமாக இருந்தது. சுமார் 6 மணிவாக்கில் அனைவரும் மேலே அமர்ந்திருந்தோம். படகு கும்மிருட்டில் விளக்கில்லாமல் சென்றுகொண்டிருந்தது. விளக்குகளை அனைத்துவிடுகிறார்கள். விளக்கி தண்ணீரில் பட்டு ஒளிர்வதால் முன்னே கண்ணுக்குத்தெரியாது என்பதால் அப்படியாம். சுக்கான்பிடித்தவர் சொன்னார். சரியாகத்தானிருக்கும்.

படகு சுலபமாக செல்வதற்கு 5 அடி நீர் இருந்தால் போதும் என்று சொன்னார். அதற்கேற்ப மணல் திட்டுக்களையும், நீருக்குள் இருக்கும் மணல்மேடுகளையும் லாவகமாகத் தவிர்த்து சுக்கான் பிடித்துக்கொண்டிருந்தார். கண்ணுக்குத்தெரிந்த ஸ்பீட் ப்ரேக்கரிலேயே வண்டியை விட்டுவிடுகிறோம் நீங்கள் எப்படி நீருக்குள் இருக்கும் மணல் திட்டுக்களை கண்டுபிடிக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு நீ நீரை படிக்கவேண்டும் என்றார். சுமாராக 25 வருடங்கள் கோதாவரியோடு தனக்குப்பழக்கம் என்றார்.
மலைத்தொடர்கள் தென்பட ஆரம்பித்திருந்தது. ஓரிடத்தில் நிறுத்தி ஏற்கனவே மீன் வாங்கியிருந்தார் கேப்டன். மேல் தளத்திற்குச் செல்லும்படியருகே செல்லும்போதே உணவின் மணம் கவர்ந்திழுத்தது. நான் சைவம்தான் ஆனாலும் மீன் வாசனையை அறிவேன், சுத்தமாகப்பிடிக்காது. பயந்துகொண்டே இருந்தேன். ஆனால் மீன் மணம் சுத்தமாக வெளியே வரவில்லை என்பதில் மகிழ்ச்சியடைந்தேன். இன்றுவரை மீன் மணமில்லாத மீனைப்பார்த்ததே இல்லை. மாலையில் மீண்டும் காப்பி. சிலர் கையில் ஸ்னாக்ஸ் எதுவும் வாங்கி வந்திருக்கலாம் என்று பின்யோசனை தெரிவித்தார்கள்.

இதில் தொடக்கத்திலிருந்தே ஒரு சிக்கல். க்ருஷ்ணன் ஒரு மினிமலிஸ்ட். வசதிகளைப்பற்றி சற்றும் கவலைப்படாத ஒரு மனிதர். எந்த இடத்திலும் அனுசரித்துக்கொள்ளுபவர். அரங்கசாமி மேக்ஸிமிஸ்ட். முடிந்த அளவு வசதிகள் இருப்பதில் தவறில்லை என்பவர். ஆனாலும் முடிவில் இருக்கும் வசதியை எந்த புலம்பலும் இன்றி ஏற்றுக்கொள்பவர். இவ்வளவு பெரிய படகு நமக்கெதற்கு என்று தொடங்கியது, பின்னர் அரங்கசாமியின் அயராத முயற்சியால் மேன்மேலும் வசதிகள் பெருகிவிட்டன. க்ருஷ்ணனுக்கு அதில் சற்றே வருத்தமும் இருக்கக்கூடும்.

இரவுக்குள் பேரண்டபள்ளி எனும் கிராமத்தை அடைவதாகத்திட்டம். ஆனாலும், நாங்கள் ஒரு நல்ல மணல்திட்டாகப்பார்த்து வண்டியை நிறுத்தச்சொல்லிவிட்டோம். இரவு அங்கேயே தங்குவது என்று தீர்மானமானது. பயணம் தந்தகளைப்பு அனைவர் முகத்திலும் தெரிந்தது. பேச்சு எங்கெங்கோ தொட்டுச்சென்று ஷாஜி இசைவிமரிசகரா என்பதில் வந்து நின்றது. அந்த உரையாடல் வீட்டோ செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.  கள் எங்கேயும் கிடைக்குமா என்று சிலர் ஆர்வமாக இருந்தார்கள். போலவரம்தான் போகவேண்டும் என்று சொல்லிவிட்டபடியால் அமைதியாக உரையாடி உறங்குவது என்று முடிவுசெய்தோம். இரவு உணவு மிகவும் நல்லமுறையில் செய்யப்பட்டிருந்தது.

ஆந்திர உணவுக்கு ஒரு பக்குவம் உண்டு, எவ்வளவு காரம்போட்டாலும், அதில் நெய்யை ஊற்றி அதை மட்டுப்படுத்திவிடுவார்கள். மிளகாய் அதிகம் சேர்ப்பதால் நம் மெடபாலிக் ரேட் அதிகமாகும் அதனால் எவ்வளவு சாப்பிட்டாலும், உடம்பு போடாது என்று சொல்வார்கள். நாக்கை ஏமாற்றலாம், ஆனால் வயிற்றை? மிளகாய் அதன் வேலையைக்காட்டிவிடும். காரம் சற்று குறைவாகவே போடுங்கள் என்று முன்னரே சமையற்காரரிடம் அறிவுறுத்தியிருந்தேன். அதுவே சற்று அதிகமாகத்தான் இருந்தது என்று சொல்லவேண்டும்.மீண்டும் அவரிடம் காலையில் சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

உணவு முடிந்து சற்றுநேரம் மேலே தளத்தில் அமர்ந்திருந்தோம். படுக்கைகள் விரிக்கப்பட்டுவிட்டன என்று செய்தி வந்தபிறகு ஒவ்வொருவராக கீழே சென்று படுத்தோம். இரவில் நான் பெரும்பாலும் தூங்குவதில்லை. விடியற்காலையில்தான் எப்போதுமே தூங்கும் வழக்கம். அதனால், விழித்திருப்பவரிடமெல்லாம் வாய் பிடுங்கிக்கொண்டிருந்தேன். யுவன் நகைச்சுவை வெடிகளாகக் கொளுத்திப்போட்டுக்கொண்டு இருந்தார். பெரும்பாலானவர்கள் அரைத்தூக்கத்திலும் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

விளக்கு அணைக்கப்பட்ட பின்னர் சற்று நேரத்தில் மீண்டும் வலுவான ரீங்காரம் கேட்டது. படகை எங்கே நகர்த்துகிறார்கள் என்று புரியாமல் எழுந்து பார்த்தேன். படகு அங்கேயே நின்றிருந்தது. ஆனால் டி.டி.எஸ் எஃபக்டில் குறட்டைகள் தொடங்கியிருந்தன. அது படகின் ரீங்காரத்தைவிடவும் வலுவாக இருந்தது. காதுகளை முழுவதும் மூடிக்கொள்ள ஒரு துண்டை தலையில் சுற்றிக்கொண்டேன். நதி படகை தாலாட்டிக்கொண்டிருந்தது. எங்களனைவரையும்தான்.

Advertisements

About ராமச்சந்த்ர சர்மா
A Music Buff

2 Responses to கோதாவரி பயணம் – விஷ்ணுபுரம் வட்டம் – 3

  1. shivakumar says:

    அருமை அருமை…பயண கட்டுரை உரை மிக அருமை…

  2. நன்றி சிவா. இன்னும் இருக்கிறது…:)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: