நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகெடமி விருது

நாஞ்சிலாருக்கு இந்த விருது கிடைத்திருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.  சூடிய பூ சூடற்க என்ற தொகுப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. சரி.. இனிமேலாவது இதை வாங்கிப்படிக்கலாமல்லவா?

புத்தகம் வாங்க : http://tinyurl.com/27z8nev (உடுமலை)

கோவையில் ஆசானது தலைமையில் அவரது இல்லத்துக்கு சென்று வாழ்த்து கூறினோம். மிகப்பெரிய இசை நூலகம் வைத்திருக்கிறார். கமர்ஷியல் சிடிக்களும், கேசட்களும். ஆனாலும், இசையின் மீது அலாதியான ஆர்வம் இல்லாவிட்டால் இது சாத்தியமே இல்லை. இசை கேட்கக்கூடிய இலக்கியவாதியா என்று ஆச்சரியப்பட்டுப்போனேன்.

அவரது சொந்த நூலகத்திலிருந்து சிலபல புத்தகங்களை திருடலாமா என்று யோசித்தேன். ஆசானின் இருப்பு என்னை தடுத்தாட்கொண்டது என்றுதான் சொல்லவேண்டும்.  நாஞ்சில் இதுவரை நான் சந்தித்ததில் மிக மிக நேர்மையான மனிதர் அடுத்தமுறை வரும்போது சில புத்தகங்கள் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

ஜெயமோகன், எம்.எஸ், வேதசகாயகுமார், ஈரோடு க்ருஷ்ணன், கோவை அருண், கோவை த்யாகு, கடலூர் சீனு, கோவை சுரேஷ், மற்றும் பலரும் வந்திருந்தனர். தொடர்ந்து தொலைபேசி அழைப்புக்கள் வந்துகொண்டேயிருந்தது.  இவர் இந்த விருதை நிராகரிப்பதற்கான அத்தனை முகாந்திரங்களும் இருந்தபோதும், ரிஸ்க் எடுத்து இவருக்கு இவ்விருதை பரிந்துரைத்த குழுவினருக்கு நன்றி. 🙂

Advertisements

பாடினால் தமிழில் பாடு இல்லைன்னா தமிழ்நாட்டை விட்டு ஓடு..!!

பாடினால் தமிழில் பாடு இல்லைன்னா தமிழ்நாட்டை விட்டு ஓடு..!! – இது நான் அடிக்கடி எதிர்கொள்ளும், மிகவும் தீவிரமாக என்மீது பிரயோகிக்கப்படும் ஒரு வாசகம்.

தமிழிசைக்கான தரப்பு என்றைக்குமே இருந்துகொண்டிருக்கிறது. தமிழிசை இயக்கத்தினர், ஆய்வுகளும், கருத்தரங்கங்களும் நடத்தியும், நூல்களும், கட்டுரைகளும் எழுதியும் அதன் வாதங்களை எடுத்துவைக்கிறது. தமிழிசை குறித்து பல நூல்களும், ஆய்வுக்கட்டுரைகளும் எழுதப்பட்டிருக்கிறது. ஆனாலும், அந்த தரப்பு கேட்கப்படாமலேயே முற்றிலுமாக நிராகரிக்கப்படுவது நடந்துகொண்டிருக்கிறது. பெரும்பாலும் இக்கட்டுரைகளின் தொனி மிகவும் கடுமையானதகவும், பிரச்சாரமாகவும் இருப்பதும், தமிழிசை குறித்த ஆய்வில் ஈடுபடுபவர்கள், பெருமித உணர்ச்சியுடனும், சாதிக்காழ்ப்புடனும், தெளிவான உள்நோக்கங்களுடன், முன் தீர்மானங்கள் நிறைந்த அணுகுமுறையையே காட்டுவதாலும், முன்வைக்கும் கருத்துக்களும் கேட்கப்படாமலேயே விமரிசிக்கப்படுகிறது. பிராமணீய அணுகுமுறைக்கு சற்றும் மாறுதலற்ற அணுகுமுறையாகவே இது இருந்துவிடுகிறது. இதனால் எழுதப்படும் முக்கிய கருத்துக்களுக்கு உள்நோக்கம் கற்பிக்கப்பட்டு கட்டுரைகளை நிராகரிப்பதற்கு ஏதுவாகவும் இருக்கிறது.

பொது அரங்கில் தமிழிசையின் தரப்பு என்பது இன்னும் தெளிவாக உணரப்படாததாக இருப்பதற்கு காரணம் அதில் ஒலிக்கும் வெவ்வேறு நிலைப்பாடுகளும், கருதுகோள்களுமே. தமிழிசை இயக்கத்தின்  க்ளைம்கள் வரலாற்று ரீதியிலானதா, சமூக ரீதியிலானதா, அல்லது இசை வடிவம் சார்ந்ததா, அல்லது பாடல் வடிவம் சார்ந்ததா அல்லது இவையனைத்தும் சார்ந்ததா என்பதே பலரால் இன்னமும் சரியாக ஊகிக்கமுடியவில்லை என்பதே இன்று இதன் நிலை. இதற்கான காரணம் இவை மொத்த குரல்களையும் ஒருங்கிணைத்து ஒரு பொது நிலைப்பாட்டை தமிழிசை தரப்பு எட்டவில்லை என்பது மட்டுமே. இந்த கருத்துக்களை ஒட்டுமொத்தமாக முன்வைத்து அதுதொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு, விளக்கம்கொடுத்து தம் நிலைப்பாட்டை தர்கரீதியாக நியாயப்படுத்தும் ஒரு தலைமை தமிழிசை தரப்புக்கு இல்லை என்பது மிகவும் சோர்வு தரும் நிலை.மேலும், தர்க்கத்தில் கொள்ளத்தக்க எந்த ஒரு திட்டவட்டமான ஆதாரங்களை அளிக்கும் தரவுகள் தமிழிசை தரப்பிடமோ, மாற்றுத்தரப்பிடமோ இல்லை. தமிழிசை தரப்பு சிலம்பையும், மாற்றுத்தரப்பு வேதங்களையும் துணைக்கு அழைக்கின்றன. ஆனாலும், வேதங்களிலிருந்து தொடங்கியதாக சொல்லப்பட்டாலும், அவை சுமார் 12 நூற்றாண்டுகளுக்கான தொடர்ச்சியின்றி நேரடியாக தற்காலத்தில் வந்து நிற்கிறது. களப்பிரர் காலத்தில் தமிழிசை அழிந்துபோனது, என்று மாற்றுத்தரப்பு வாதாடுகிறது. இன்னிலையில் குழப்பங்கள் தீர தமிழிசை தரப்பை திட்டவட்டமான கட்டுரையாக கருத்தியலிலும், வரலாற்றிலும், இசையிலும் ஆளுமையுள்ள யாரவாது எழுதினால் புண்ணியம் உண்டாகும்.

For the Heck of It:

 

இதுகுறித்த என் கருத்துக்கள் சில. இவ்விஷயத்தில் கருத்துச்சொல்பவர்கள் தரத்தை கருத்தில்கொண்டும், கருத்துச்சொல்வதற்கான தகுதிகள் ஏதுமில்லை என்பதாலும் இதை மனம்போன போக்கில் எழுதுகிறேன். இவைகள் மிக முக்கியமற்றவை மட்டுமே.

கர்நாடக சங்கீதம் என்றழைக்கப்படும் தென்னிந்திய செவ்வியல் வடிவத்தின் மிக முக்கியமான வடிவமாக இருந்துவருவது கீர்த்தனை என்றழைக்கப்படும் பாடல் வடிவம்.இன்று புழக்கத்தில் இருக்கும் கீர்த்தனை வடிவம் என்பது சுமார் 400ல் இருந்து 500 வருடப்பழமை கொண்டதாக இருக்கலாம். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு பாடல் வடிவம் என்பது எப்படி இருந்தது என்பது குறித்து திட்டவட்டமான கருத்துக்கள் கூறுமளவுக்கு நம்மிடம் தரவுகள் இல்லை. இக்கீர்த்தனை வடிவத்திற்கு எழுதப்பட்ட இலக்கணம் என்று எதுவும் இல்லை. என்றாலும் வழக்கமான ஒரு வடிவத்தை பின்பற்றி கீர்த்தனைகளை எழுதி வருகிறார்கள். பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற மூன்றடுக்கு வடிவம் மிகவும் பிரபலமானது. பல சரணங்கள் கொண்ட பாடல்களும், சமஷ்டி சரணப் பாடல்களும் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. தமிழிசை தரப்பு பாணர் – நாட்டார் இசைப்பாடல் வடிவின் மறுவடிவாக்கமே இந்த கீர்த்தனைகள் என்று முன்வைக்கிறது. மாற்றுத்தரப்பு, இதை சாமவேதத்திலிருந்தும், புராண சுலோகங்களிலிருந்தும் வந்தது என்கிறது.
எதையும் எழுதிவைக்கும் வழக்கமில்லாத காலத்தில், அவற்றை எளிதாக நினைவிலிருத்துவதற்காக எதுகைகளும், மோனைகளும், சொல்லடுக்குகளும் பயன்படுத்தப்பட்டன. பின்னர் மொழி எழுத்துரு கொண்டபோதும் அவை அலங்காரங்களாக நிலைத்துவிட்டன. ஒரு இசைப்பாடலுக்கு வரிகளின் அளவு முக்கியமானது. வரிகளின் அளவுகள் கச்சிதமாக அமைக்கப்பட்ட வடிவ நேர்த்திகொண்ட பா வகைகள் பாடுவதற்கு ஏற்றதாகக் கருதப்பட்டது. இதிலும் பாடல் வரிகளுக்கு எந்த கவித்துவமும் கட்டாயமில்லை என்பதும், அவை கதைகளை நகர்த்திச்செல்லும், அதீத உணர்வுகளை கடத்தும் ஒரு கருவியாகவும் மட்டுமே பயன்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் வடிவத்திற்கு தமிழ்தான் மூலம் என்பது ஒருவகையில் பெருமைக்குரிய விஷயம் என்றபோதும், இதே வடிவம் ஜெயதேவர், கபீர், மீரா, துகாராம் போன்றவர்களால் பயன்படுத்தப்படுவதையும் பார்க்கிறோம். மேற்கத்திய இசையிலும் இத்தகைய பாடல் வடிவங்கள் நமக்குக் காணக்கிடைக்கின்றன. இவ்வகையில் இவ்வடிவம் ஒரு பொதுவான இசை அம்சமாகவே உலகெங்கும் இருக்கிறது என்று தோன்றுகிறது.

கீர்த்தனை வடிவத்தின் வரலாற்றைப் பார்த்தால், நமக்குக்கிடைக்கும் படைப்புகளில், ஜெயதேவரின் படைப்புக்களில் இது பயன்பட்டிருக்கிறது. தென்னிந்திய இசையில் அன்னமய்ய, பத்ராசல ராமதாஸ், புரந்தரதாஸ் போன்றவர்கள் இந்த வடிவத்தை தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள். அன்னமய்ய இப்போது புழக்கத்திலிருக்கும் சிறிய கீர்த்தனை வடிவை முதலில் முன்வைக்கிறார். இவருக்குப்பின் வந்த ராமதாஸரும் இதே வடிவத்தை கையாள்கிறார். கர்நாடகத்து தாஸகூடத்தைச் சார்ந்த புரந்தரதாஸரும், கனகதாசரும் இந்த வடிவத்திலேயே பாடல்கள் இயற்றுகிறார்கள். இவர்களுக்கு முன்னோடியாக, க்ஷேத்ரக்ஞரும் இந்த வடிவத்திலேயே பதங்கள் எழுதியிருக்கிறார். இவர்களுக்கு காலத்தில் பிந்தைய தமிழ் மூவரும் இந்த வடிவிலேயே பாடல்கள் இயற்றியிருக்கிறார்கள். இவர்களுக்கு பின் சங்கீத மும்மூர்த்திகள் என்றழைக்கப்படும் முத்துஸ்வாமி தீக்ஷிதர், காகர்ல த்யாகப்ரஹ்மம், ஸ்யாமா ஸாஸ்த்ரி ஆகியோர் இவ்வடிவத்தை மிகவும் கச்சிதமாக பயன்படுத்தினார்கள். தற்காலத்தில் பலரும் பாடல்கள் புனைவது இந்த வடிவத்தில் மட்டுமே. தமிழில் தமிழ் மூவர் முதல்தான் இந்த வடிவம் உறுதியாகிறது. இதற்கு முன்பே இவ்வடிவம் இந்தியாவின் பல பகுதிகளில் பரவலாக பயன்படுத்தப் பட்டிருப்பதற்கான சான்றுகள் இருப்பதால் இது தமிழிலிருந்து தோன்றிய ஒன்று என்று உறுதியாக சொல்லமுடிவதில்லை.

தெலுகு மொழியிலேயே மிக அதிகமான பாடல்கள் கிடைக்கின்றது என்பதற்கான காரணம், அப்போதைய அரசவைகளில் தெலுகு மொழியே போற்றப்பட்டது எனவே அனைவரும் அந்த மொழியிலேயே படைத்தனர் என்று கூறப்படுகிறது. தமிழ் மூவரும், சங்கீத மும்மூர்த்திகளும்,  நவாப்களும், ஆங்கிலேயரும் ஆண்டுகொண்டிருந்தபோதுதான் தமிழில் பாடல்கள் படைத்துக்கொண்டிருந்தனர். முகலாயர் காலத்தில்தான் தெலுகில் பலர் இயற்றிக்கொண்டிருந்தனர். உதாரணமாக, ராமதாஸர் நவாபுகள் காலத்தில் தெலுகில் மட்டுமே எழுதியவர். புரவலர்கள் தேவைப்பட்டவர்கள் மட்டுமோ அல்லது அரசவை வாக்யேயக்காரர்களோ மட்டுமே புரவலர்களால் ஆதரிக்கப்பட்ட மொழியில் எழுதினார்களே ஒழிய, ராமதாஸரோ, அன்னமய்யவோ, ஆதிப்பையவோ, மீராவோ, கபீரோ, துகாராமோ, ஞானதேவோ, த்யாகப்ரம்மமோ புரவலர்களைச் சார்ந்தவர் அல்லர். அவர்கள் அவர்களது இயல்பான தாய்மொழியிலேயே எழுதினார்கள். புரவலர்களைச் சார்ந்து மட்டுமே பாடல்களை இயற்றுவேன் என்று தமிழ் சமூகத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை. ஏனெனில் மற்ற அனைத்து தமிழ் கலைப்படைப்புகளும், உதாரணமாக குறுங்காப்பியங்களும், கவிதைகளும் அனைத்து காலத்திலும் செழிப்பாகவே இருந்திருக்கிறது. எனவே இந்தக் கருதுகோள் முழுவதும் சரியல்ல என்றே தோன்றுகிறது. இது தமிழில் கீர்த்தனங்கள் எழுதப்படாது போனதற்காக நாம் தேடிக்கொள்ளும் சமாதானமாகவே படுகிறது. உண்மையிலேயே தமிழிசை மரபு முன்னெடுக்கப்படாமைக்கு ஏதேனும் காரணம் இருந்திருக்கக் கூடும்.

தமிழ் சமூகம் முத்தமிழாக வகுத்து பயின்றபோது மற்ற சமூகங்கள் இந்த அளவுக்கு ஏற்றம் அடையாததாகவே இருந்திருக்கக்கூடும். ஆனாலும், நாடகத்தை வகுத்தபோது, நடிப்பும் பாட்டும் என்று வகுத்தது. இது இசையை பயன்படுத்திக்கொண்ட ஒரு கலையாக இருக்கிறது. இசைக்கென தனியாக ஒரு மரபு இருந்தபோதும், அதை நாடகம் துணைக்கலையாக பயன்படுத்திக்கொள்வதை பார்க்கிறோம். நாடகத்திலும் அதுசார்ந்த நடனத்திலும் புராணத்தையும், மன்னரின் வெற்றிக் கதைகளையும் பாடி நடித்துக்காட்டிக்கொண்டிருந்தனர். இதில் பாடல்கள் கதை சொல்லும் ஒரு உத்தியாகவே பயன்பட்டிருக்கிறது. தமிழ் சமூகம் இயற்றமிழுக்கும், நாடகத்தமிழுக்கும் கொடுத்த முக்கியத்துவத்தை இசைத்தமிழுக்கு கொடுக்கவில்லை. தெலுகு, கன்னட சமூகங்களில், தமிழ் சமூகம்போல இயற்றல், நாடக இயக்கங்கள் இருந்ததில்லை. அவர்களது தொடக்கமே, சில தத்துவ நீதி சதகங்களும்,கிராமிய நடையில் எழுதப்பட்ட சில கதைகளும் மட்டுமே. அங்கிருக்கும் நாடகங்கள் கூட பெரும்பாலும் விருத்தங்கள்-பாடல்களாலான உரையாடல் மட்டுமே. கதை சொல்லிகள் என்றொரு குழுவும் அச்சமூகங்களில் இருக்கிறது. அவை ஹரிகதை இயக்கம் போல பாடல்களும் அதற்கான விளக்கங்களும் மட்டும் சார்ந்து செல்வதை பார்க்கமுடிகிறது. இச்சமூகங்கள் இசையை வளர்த்தெடுத்த அளவுக்கு நாடகங்களையோ, கவிதை, கட்டுரைகளையோ கையாளவில்லை. இதன் தாக்கத்தை இன்று வரை காணலாம், உதாரணமாக தெலுகு மொழியில் இலக்கியம் என்று சொல்லத்தகுந்த எதுவும் இன்றுவரை இல்லை. ஆனாலும் அங்கு இசை இயல்பாகவே இருந்திருக்கிறது. தமிழ் சமூகம் இசைத்தமிழை முன்னெடுக்கவில்லை, ஊக்கப்படுத்தவில்லை. இப்போதும் தமிழிசையில் முன்வைக்கப்படும் பாடல்கள், ராமநாடக கீர்த்தனைகளும், நந்தன் சரித்திர கீர்த்தனைகளும் மிகச்சில துண்டு கீர்த்தனைகளுமே. இதற்குமேலே வேண்டுமானால் கம்பராமாயணத்தை இசைகோர்த்துப் பாடலாம்.

இசைக்கு முக்கிய காரணியாக பயன்பட்ட பாடல்களின் கருத்து பக்தி சார்ந்ததாகவே இருக்கிறது. இது முற்றிலும் தவறானது என்பது ஒருபுறமிருக்க, இதற்கான காரணங்கள் ஆராயப்படலாம். பக்தி இயக்கங்கள் தமிழில் மிகவும் பிரபலமான காலகட்டமாகும்,தேவாரமும், திருவாசகமும், நாலாயிரமும் கரைபுரண்டோடிய காலம். சைவ-வைணவத்திருமுறைகள் பயின்று மன்னர்கள் ஆலயங்கள் எழுப்புவித்த காலம். திரும்பிய பக்ககமெங்கும் பாடல்களாக ஒலித்துக்கொண்டிருந்த காலம். மன்னர்கள் கொடைகள் அளித்து ஓதுவார்களை நியமித்து, நிவந்தங்கள் அளித்து திருமுறைகளை ஓதச்செய்தனர். ஆனால் அவை இன்று மிகக்குறுகிய குழுவாலேயே உயிரோடு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு தொடர்ச்சியில்லாது போனது ஏன்? இவற்றை வைத்துக்கொண்டே ஒரு மாபெரும் இசைக்கோட்டையை எழுப்பிவிடமுடியுமே? இவற்றிற்கும் காரணமாக நான் நினைப்பது, இவற்றிலும், இசையை பின் தள்ளி, கவிதைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் மட்டுமே. இவற்றிலுள்ள கவி நயத்திற்கு கொடுக்கப்பட்ட இடம், இசைக்கு கொடுக்கப்படவில்லை. மேலும், இவை பொது மக்கள் பெருமளவில் பங்குகொள்ளும் வகையில் இல்லாது, ஓதுவார்களைக்கொண்டு ஓதுவித்ததோடு நின்று போனது.

தமிழ் சமூகத்து பக்தி இயக்கம் கவிதைகளாலானது, மாறாக கன்னட, தெலுகு பக்தி இயக்கங்கள் பாடல்களாலானது. கன்னடத்து தாஸகூடத்தைச்சார்ந்த புரந்தரதாசர், கனகதாசர் போன்றவர்களும், ஆந்திரத்து அன்னமய்ய, ராமதாஸு போன்றவர்களும், பக்தியையும், தத்துவத்தையும் பாடல்களில் பதிந்துவைத்தனர். இவ்விசைக்கான வேர் அவர்கள் வாழ்ந்த சமூகத்தின் கிராமிய இசை வடிவங்களிலேயே இருந்திருக்கிறது. மிக எளிமையான, எளிதில் பிரதிபலிக்கக்கூடிய மெட்டுக்களையே அவர்கள் கையாண்டார்கள். பாடல்களில் மிக எளிமையான, புழக்கத்திலிருக்கும் வார்த்தைகளையே பயன்படுத்தினார்கள். இதே வகைப்பாடல்களை வட இந்திய வாரகாரி சம்பிரதாயத்திலும் காணமுடியும், துகாராம் போன்றவர்கள் அத்தகைய வழிநடைப் பாடல்களை அபங்-களாக இயற்றியிருக்கின்றனர். இவைகள் பொதுமக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்கள் இதை அவர்களது யாத்திரைகளில் வழிநடையாக பாடிச்சென்றனர். பொதுமக்களின் பங்கு அதில் முக்கியமானதாகிறது. இதுபோலவே தமிழகத்தில் சித்தர் இசைப் பாடல்கள் மரபும், சிந்துகளும் காலத்தால் மிகவும் பிந்தையதானதால், தாக்கம் குறைவானதாகவும், பரவலாக பயன்படுத்தப்படாததாகவும் இருக்கிறது.

தமிழில், ஸ்ரீ சைல யாத்திரை, திருமலை யாத்திரை, சிங்களவரின் சிதம்பர யாத்திரை, பண்டரீபுர யாத்திரை போல யாத்திரை இயக்கங்கள் சுத்தமாக இருந்தது இல்லை என்றே சொல்லலாம். எனவே, வழி நடைப்பாடல்கள் வழியாக இசையை உயிரோடு வைக்கும் – முன்னெடுக்கும் உத்தியும் இங்கு பயன்படுத்தப்படவில்லை. தற்காலத்தில் இவை சற்றே காணப்படுகிறது, சபரிமலை பாடல்கள் போன்றவை இன்று பலராலும், கேட்கவும், பாடவும் முடிகிறது.புராண இதிகாசப்பாடல்களால் நாடகங்கள் நிரம்பி வழிந்தபோது, ரசிகன் தன்னோடு பேசும் பாடல்களுக்காக காத்திருந்திருக்கிறான் என்று தெரிகிறது. தன் சுயஅனுபவத்தைப் பகிரும், தனி மனிதனோடு பேசும், அவனோடு அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடிய  பாடல்களை புனையத்தொடங்கியபோது, அவைகளை நோக்கி ரசிகன் இயல்பாக ஈர்க்கப்பட்டிருக்கிறான். இதன் காரணமாகவே, தற்காலத்திலும், சினிமா பாடல்கள் மிகவும் பிரபலமாகவும், தென்னிந்திய செவ்வியல் இசை மிகவும் குறைவாகவும் ரசிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன்.

தமிழிசை என்ற ஒன்று ஆரம்ப நிலையில் இருந்திருக்கிறது, பின்னர் அது வளர்த்தெடுக்கப்படாது அழியவிடப்பட்டது, தமிழகத்தின் கோவில்கள், வரலாற்று சின்னங்கள் போலவே. ஆனால் இப்போது வளர்ந்து நிற்கும் தமிழிசைக் கூறுகள் கொண்ட செவ்வியல் இசைதான் தமிழிசை ஆனால் அதில் பார்பனீய பக்தி புகுந்துவிட்டது, அவர்கள் தமிழை அழித்துவிட்டு தெலுகையும் கன்னடத்தையும் சமஸ்க்ருதத்தையும் மட்டுமே முன்வைத்தார்கள் என்பதுபோன்ற ஆதங்க வார்த்தைகளை கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இது எப்படி இருக்கிறது என்றால், கில்லி தண்டா விளையாட்டு இந்தியா தான் கண்டுபிடித்தது, இதன் முன்னேறிய வடிவம்தான் கிரிக்கெட். ஆங்கிலேயர் சூழ்ச்சி செய்து, நமது கில்லி தண்டா ஆட்டத்தைப் பார்த்து அதை உருவாக்கிவிட்டனர். எனவே கிரிக்கெட்டின் தொடக்கம் கில்லி தண்டா தான். அவர்கள் அதை கண்டுபிடித்திருக்காவிட்டால் நாம்தான் அதை கண்டுபிடித்திருப்போம் என்பது போல. உண்மை வெகுதூரத்தில் இருப்பதாகவே படுகிறது. தமிழ் சமூகம் வெண்பாக்களிலும், நாடகங்களிலும் ஈடுபட்டு, தமிழிசையை கண்டுகொள்ளவில்லை, தொடர்ச்சி அழிந்துவிட்டது. இதுதான் எனக்குத்தோன்றுகிறது.

இனி, அரசியல் ரீதியாகவும், காழ்ப்புடனும், பாடினால் தமிழில் பாடு இல்லையென்றால் தமிழ்நாட்டை விட்டு ஓடு என்பவரிடம் நிச்சயம் சில கேள்விகள் கேட்கப்படவேண்டும், “உண்மையில் தமிழிசை என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?”, “தமிழில் பாடப்படுவதெல்லாம் தமிழிசையல்ல என்பதாவது தெரியுமா?”.

Just a historical Hangover…!!

%d bloggers like this: