பாடினால் தமிழில் பாடு இல்லைன்னா தமிழ்நாட்டை விட்டு ஓடு..!!

பாடினால் தமிழில் பாடு இல்லைன்னா தமிழ்நாட்டை விட்டு ஓடு..!! – இது நான் அடிக்கடி எதிர்கொள்ளும், மிகவும் தீவிரமாக என்மீது பிரயோகிக்கப்படும் ஒரு வாசகம்.

தமிழிசைக்கான தரப்பு என்றைக்குமே இருந்துகொண்டிருக்கிறது. தமிழிசை இயக்கத்தினர், ஆய்வுகளும், கருத்தரங்கங்களும் நடத்தியும், நூல்களும், கட்டுரைகளும் எழுதியும் அதன் வாதங்களை எடுத்துவைக்கிறது. தமிழிசை குறித்து பல நூல்களும், ஆய்வுக்கட்டுரைகளும் எழுதப்பட்டிருக்கிறது. ஆனாலும், அந்த தரப்பு கேட்கப்படாமலேயே முற்றிலுமாக நிராகரிக்கப்படுவது நடந்துகொண்டிருக்கிறது. பெரும்பாலும் இக்கட்டுரைகளின் தொனி மிகவும் கடுமையானதகவும், பிரச்சாரமாகவும் இருப்பதும், தமிழிசை குறித்த ஆய்வில் ஈடுபடுபவர்கள், பெருமித உணர்ச்சியுடனும், சாதிக்காழ்ப்புடனும், தெளிவான உள்நோக்கங்களுடன், முன் தீர்மானங்கள் நிறைந்த அணுகுமுறையையே காட்டுவதாலும், முன்வைக்கும் கருத்துக்களும் கேட்கப்படாமலேயே விமரிசிக்கப்படுகிறது. பிராமணீய அணுகுமுறைக்கு சற்றும் மாறுதலற்ற அணுகுமுறையாகவே இது இருந்துவிடுகிறது. இதனால் எழுதப்படும் முக்கிய கருத்துக்களுக்கு உள்நோக்கம் கற்பிக்கப்பட்டு கட்டுரைகளை நிராகரிப்பதற்கு ஏதுவாகவும் இருக்கிறது.

பொது அரங்கில் தமிழிசையின் தரப்பு என்பது இன்னும் தெளிவாக உணரப்படாததாக இருப்பதற்கு காரணம் அதில் ஒலிக்கும் வெவ்வேறு நிலைப்பாடுகளும், கருதுகோள்களுமே. தமிழிசை இயக்கத்தின்  க்ளைம்கள் வரலாற்று ரீதியிலானதா, சமூக ரீதியிலானதா, அல்லது இசை வடிவம் சார்ந்ததா, அல்லது பாடல் வடிவம் சார்ந்ததா அல்லது இவையனைத்தும் சார்ந்ததா என்பதே பலரால் இன்னமும் சரியாக ஊகிக்கமுடியவில்லை என்பதே இன்று இதன் நிலை. இதற்கான காரணம் இவை மொத்த குரல்களையும் ஒருங்கிணைத்து ஒரு பொது நிலைப்பாட்டை தமிழிசை தரப்பு எட்டவில்லை என்பது மட்டுமே. இந்த கருத்துக்களை ஒட்டுமொத்தமாக முன்வைத்து அதுதொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு, விளக்கம்கொடுத்து தம் நிலைப்பாட்டை தர்கரீதியாக நியாயப்படுத்தும் ஒரு தலைமை தமிழிசை தரப்புக்கு இல்லை என்பது மிகவும் சோர்வு தரும் நிலை.மேலும், தர்க்கத்தில் கொள்ளத்தக்க எந்த ஒரு திட்டவட்டமான ஆதாரங்களை அளிக்கும் தரவுகள் தமிழிசை தரப்பிடமோ, மாற்றுத்தரப்பிடமோ இல்லை. தமிழிசை தரப்பு சிலம்பையும், மாற்றுத்தரப்பு வேதங்களையும் துணைக்கு அழைக்கின்றன. ஆனாலும், வேதங்களிலிருந்து தொடங்கியதாக சொல்லப்பட்டாலும், அவை சுமார் 12 நூற்றாண்டுகளுக்கான தொடர்ச்சியின்றி நேரடியாக தற்காலத்தில் வந்து நிற்கிறது. களப்பிரர் காலத்தில் தமிழிசை அழிந்துபோனது, என்று மாற்றுத்தரப்பு வாதாடுகிறது. இன்னிலையில் குழப்பங்கள் தீர தமிழிசை தரப்பை திட்டவட்டமான கட்டுரையாக கருத்தியலிலும், வரலாற்றிலும், இசையிலும் ஆளுமையுள்ள யாரவாது எழுதினால் புண்ணியம் உண்டாகும்.

For the Heck of It:

 

இதுகுறித்த என் கருத்துக்கள் சில. இவ்விஷயத்தில் கருத்துச்சொல்பவர்கள் தரத்தை கருத்தில்கொண்டும், கருத்துச்சொல்வதற்கான தகுதிகள் ஏதுமில்லை என்பதாலும் இதை மனம்போன போக்கில் எழுதுகிறேன். இவைகள் மிக முக்கியமற்றவை மட்டுமே.

கர்நாடக சங்கீதம் என்றழைக்கப்படும் தென்னிந்திய செவ்வியல் வடிவத்தின் மிக முக்கியமான வடிவமாக இருந்துவருவது கீர்த்தனை என்றழைக்கப்படும் பாடல் வடிவம்.இன்று புழக்கத்தில் இருக்கும் கீர்த்தனை வடிவம் என்பது சுமார் 400ல் இருந்து 500 வருடப்பழமை கொண்டதாக இருக்கலாம். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு பாடல் வடிவம் என்பது எப்படி இருந்தது என்பது குறித்து திட்டவட்டமான கருத்துக்கள் கூறுமளவுக்கு நம்மிடம் தரவுகள் இல்லை. இக்கீர்த்தனை வடிவத்திற்கு எழுதப்பட்ட இலக்கணம் என்று எதுவும் இல்லை. என்றாலும் வழக்கமான ஒரு வடிவத்தை பின்பற்றி கீர்த்தனைகளை எழுதி வருகிறார்கள். பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற மூன்றடுக்கு வடிவம் மிகவும் பிரபலமானது. பல சரணங்கள் கொண்ட பாடல்களும், சமஷ்டி சரணப் பாடல்களும் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. தமிழிசை தரப்பு பாணர் – நாட்டார் இசைப்பாடல் வடிவின் மறுவடிவாக்கமே இந்த கீர்த்தனைகள் என்று முன்வைக்கிறது. மாற்றுத்தரப்பு, இதை சாமவேதத்திலிருந்தும், புராண சுலோகங்களிலிருந்தும் வந்தது என்கிறது.
எதையும் எழுதிவைக்கும் வழக்கமில்லாத காலத்தில், அவற்றை எளிதாக நினைவிலிருத்துவதற்காக எதுகைகளும், மோனைகளும், சொல்லடுக்குகளும் பயன்படுத்தப்பட்டன. பின்னர் மொழி எழுத்துரு கொண்டபோதும் அவை அலங்காரங்களாக நிலைத்துவிட்டன. ஒரு இசைப்பாடலுக்கு வரிகளின் அளவு முக்கியமானது. வரிகளின் அளவுகள் கச்சிதமாக அமைக்கப்பட்ட வடிவ நேர்த்திகொண்ட பா வகைகள் பாடுவதற்கு ஏற்றதாகக் கருதப்பட்டது. இதிலும் பாடல் வரிகளுக்கு எந்த கவித்துவமும் கட்டாயமில்லை என்பதும், அவை கதைகளை நகர்த்திச்செல்லும், அதீத உணர்வுகளை கடத்தும் ஒரு கருவியாகவும் மட்டுமே பயன்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் வடிவத்திற்கு தமிழ்தான் மூலம் என்பது ஒருவகையில் பெருமைக்குரிய விஷயம் என்றபோதும், இதே வடிவம் ஜெயதேவர், கபீர், மீரா, துகாராம் போன்றவர்களால் பயன்படுத்தப்படுவதையும் பார்க்கிறோம். மேற்கத்திய இசையிலும் இத்தகைய பாடல் வடிவங்கள் நமக்குக் காணக்கிடைக்கின்றன. இவ்வகையில் இவ்வடிவம் ஒரு பொதுவான இசை அம்சமாகவே உலகெங்கும் இருக்கிறது என்று தோன்றுகிறது.

கீர்த்தனை வடிவத்தின் வரலாற்றைப் பார்த்தால், நமக்குக்கிடைக்கும் படைப்புகளில், ஜெயதேவரின் படைப்புக்களில் இது பயன்பட்டிருக்கிறது. தென்னிந்திய இசையில் அன்னமய்ய, பத்ராசல ராமதாஸ், புரந்தரதாஸ் போன்றவர்கள் இந்த வடிவத்தை தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள். அன்னமய்ய இப்போது புழக்கத்திலிருக்கும் சிறிய கீர்த்தனை வடிவை முதலில் முன்வைக்கிறார். இவருக்குப்பின் வந்த ராமதாஸரும் இதே வடிவத்தை கையாள்கிறார். கர்நாடகத்து தாஸகூடத்தைச் சார்ந்த புரந்தரதாஸரும், கனகதாசரும் இந்த வடிவத்திலேயே பாடல்கள் இயற்றுகிறார்கள். இவர்களுக்கு முன்னோடியாக, க்ஷேத்ரக்ஞரும் இந்த வடிவத்திலேயே பதங்கள் எழுதியிருக்கிறார். இவர்களுக்கு காலத்தில் பிந்தைய தமிழ் மூவரும் இந்த வடிவிலேயே பாடல்கள் இயற்றியிருக்கிறார்கள். இவர்களுக்கு பின் சங்கீத மும்மூர்த்திகள் என்றழைக்கப்படும் முத்துஸ்வாமி தீக்ஷிதர், காகர்ல த்யாகப்ரஹ்மம், ஸ்யாமா ஸாஸ்த்ரி ஆகியோர் இவ்வடிவத்தை மிகவும் கச்சிதமாக பயன்படுத்தினார்கள். தற்காலத்தில் பலரும் பாடல்கள் புனைவது இந்த வடிவத்தில் மட்டுமே. தமிழில் தமிழ் மூவர் முதல்தான் இந்த வடிவம் உறுதியாகிறது. இதற்கு முன்பே இவ்வடிவம் இந்தியாவின் பல பகுதிகளில் பரவலாக பயன்படுத்தப் பட்டிருப்பதற்கான சான்றுகள் இருப்பதால் இது தமிழிலிருந்து தோன்றிய ஒன்று என்று உறுதியாக சொல்லமுடிவதில்லை.

தெலுகு மொழியிலேயே மிக அதிகமான பாடல்கள் கிடைக்கின்றது என்பதற்கான காரணம், அப்போதைய அரசவைகளில் தெலுகு மொழியே போற்றப்பட்டது எனவே அனைவரும் அந்த மொழியிலேயே படைத்தனர் என்று கூறப்படுகிறது. தமிழ் மூவரும், சங்கீத மும்மூர்த்திகளும்,  நவாப்களும், ஆங்கிலேயரும் ஆண்டுகொண்டிருந்தபோதுதான் தமிழில் பாடல்கள் படைத்துக்கொண்டிருந்தனர். முகலாயர் காலத்தில்தான் தெலுகில் பலர் இயற்றிக்கொண்டிருந்தனர். உதாரணமாக, ராமதாஸர் நவாபுகள் காலத்தில் தெலுகில் மட்டுமே எழுதியவர். புரவலர்கள் தேவைப்பட்டவர்கள் மட்டுமோ அல்லது அரசவை வாக்யேயக்காரர்களோ மட்டுமே புரவலர்களால் ஆதரிக்கப்பட்ட மொழியில் எழுதினார்களே ஒழிய, ராமதாஸரோ, அன்னமய்யவோ, ஆதிப்பையவோ, மீராவோ, கபீரோ, துகாராமோ, ஞானதேவோ, த்யாகப்ரம்மமோ புரவலர்களைச் சார்ந்தவர் அல்லர். அவர்கள் அவர்களது இயல்பான தாய்மொழியிலேயே எழுதினார்கள். புரவலர்களைச் சார்ந்து மட்டுமே பாடல்களை இயற்றுவேன் என்று தமிழ் சமூகத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை. ஏனெனில் மற்ற அனைத்து தமிழ் கலைப்படைப்புகளும், உதாரணமாக குறுங்காப்பியங்களும், கவிதைகளும் அனைத்து காலத்திலும் செழிப்பாகவே இருந்திருக்கிறது. எனவே இந்தக் கருதுகோள் முழுவதும் சரியல்ல என்றே தோன்றுகிறது. இது தமிழில் கீர்த்தனங்கள் எழுதப்படாது போனதற்காக நாம் தேடிக்கொள்ளும் சமாதானமாகவே படுகிறது. உண்மையிலேயே தமிழிசை மரபு முன்னெடுக்கப்படாமைக்கு ஏதேனும் காரணம் இருந்திருக்கக் கூடும்.

தமிழ் சமூகம் முத்தமிழாக வகுத்து பயின்றபோது மற்ற சமூகங்கள் இந்த அளவுக்கு ஏற்றம் அடையாததாகவே இருந்திருக்கக்கூடும். ஆனாலும், நாடகத்தை வகுத்தபோது, நடிப்பும் பாட்டும் என்று வகுத்தது. இது இசையை பயன்படுத்திக்கொண்ட ஒரு கலையாக இருக்கிறது. இசைக்கென தனியாக ஒரு மரபு இருந்தபோதும், அதை நாடகம் துணைக்கலையாக பயன்படுத்திக்கொள்வதை பார்க்கிறோம். நாடகத்திலும் அதுசார்ந்த நடனத்திலும் புராணத்தையும், மன்னரின் வெற்றிக் கதைகளையும் பாடி நடித்துக்காட்டிக்கொண்டிருந்தனர். இதில் பாடல்கள் கதை சொல்லும் ஒரு உத்தியாகவே பயன்பட்டிருக்கிறது. தமிழ் சமூகம் இயற்றமிழுக்கும், நாடகத்தமிழுக்கும் கொடுத்த முக்கியத்துவத்தை இசைத்தமிழுக்கு கொடுக்கவில்லை. தெலுகு, கன்னட சமூகங்களில், தமிழ் சமூகம்போல இயற்றல், நாடக இயக்கங்கள் இருந்ததில்லை. அவர்களது தொடக்கமே, சில தத்துவ நீதி சதகங்களும்,கிராமிய நடையில் எழுதப்பட்ட சில கதைகளும் மட்டுமே. அங்கிருக்கும் நாடகங்கள் கூட பெரும்பாலும் விருத்தங்கள்-பாடல்களாலான உரையாடல் மட்டுமே. கதை சொல்லிகள் என்றொரு குழுவும் அச்சமூகங்களில் இருக்கிறது. அவை ஹரிகதை இயக்கம் போல பாடல்களும் அதற்கான விளக்கங்களும் மட்டும் சார்ந்து செல்வதை பார்க்கமுடிகிறது. இச்சமூகங்கள் இசையை வளர்த்தெடுத்த அளவுக்கு நாடகங்களையோ, கவிதை, கட்டுரைகளையோ கையாளவில்லை. இதன் தாக்கத்தை இன்று வரை காணலாம், உதாரணமாக தெலுகு மொழியில் இலக்கியம் என்று சொல்லத்தகுந்த எதுவும் இன்றுவரை இல்லை. ஆனாலும் அங்கு இசை இயல்பாகவே இருந்திருக்கிறது. தமிழ் சமூகம் இசைத்தமிழை முன்னெடுக்கவில்லை, ஊக்கப்படுத்தவில்லை. இப்போதும் தமிழிசையில் முன்வைக்கப்படும் பாடல்கள், ராமநாடக கீர்த்தனைகளும், நந்தன் சரித்திர கீர்த்தனைகளும் மிகச்சில துண்டு கீர்த்தனைகளுமே. இதற்குமேலே வேண்டுமானால் கம்பராமாயணத்தை இசைகோர்த்துப் பாடலாம்.

இசைக்கு முக்கிய காரணியாக பயன்பட்ட பாடல்களின் கருத்து பக்தி சார்ந்ததாகவே இருக்கிறது. இது முற்றிலும் தவறானது என்பது ஒருபுறமிருக்க, இதற்கான காரணங்கள் ஆராயப்படலாம். பக்தி இயக்கங்கள் தமிழில் மிகவும் பிரபலமான காலகட்டமாகும்,தேவாரமும், திருவாசகமும், நாலாயிரமும் கரைபுரண்டோடிய காலம். சைவ-வைணவத்திருமுறைகள் பயின்று மன்னர்கள் ஆலயங்கள் எழுப்புவித்த காலம். திரும்பிய பக்ககமெங்கும் பாடல்களாக ஒலித்துக்கொண்டிருந்த காலம். மன்னர்கள் கொடைகள் அளித்து ஓதுவார்களை நியமித்து, நிவந்தங்கள் அளித்து திருமுறைகளை ஓதச்செய்தனர். ஆனால் அவை இன்று மிகக்குறுகிய குழுவாலேயே உயிரோடு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு தொடர்ச்சியில்லாது போனது ஏன்? இவற்றை வைத்துக்கொண்டே ஒரு மாபெரும் இசைக்கோட்டையை எழுப்பிவிடமுடியுமே? இவற்றிற்கும் காரணமாக நான் நினைப்பது, இவற்றிலும், இசையை பின் தள்ளி, கவிதைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் மட்டுமே. இவற்றிலுள்ள கவி நயத்திற்கு கொடுக்கப்பட்ட இடம், இசைக்கு கொடுக்கப்படவில்லை. மேலும், இவை பொது மக்கள் பெருமளவில் பங்குகொள்ளும் வகையில் இல்லாது, ஓதுவார்களைக்கொண்டு ஓதுவித்ததோடு நின்று போனது.

தமிழ் சமூகத்து பக்தி இயக்கம் கவிதைகளாலானது, மாறாக கன்னட, தெலுகு பக்தி இயக்கங்கள் பாடல்களாலானது. கன்னடத்து தாஸகூடத்தைச்சார்ந்த புரந்தரதாசர், கனகதாசர் போன்றவர்களும், ஆந்திரத்து அன்னமய்ய, ராமதாஸு போன்றவர்களும், பக்தியையும், தத்துவத்தையும் பாடல்களில் பதிந்துவைத்தனர். இவ்விசைக்கான வேர் அவர்கள் வாழ்ந்த சமூகத்தின் கிராமிய இசை வடிவங்களிலேயே இருந்திருக்கிறது. மிக எளிமையான, எளிதில் பிரதிபலிக்கக்கூடிய மெட்டுக்களையே அவர்கள் கையாண்டார்கள். பாடல்களில் மிக எளிமையான, புழக்கத்திலிருக்கும் வார்த்தைகளையே பயன்படுத்தினார்கள். இதே வகைப்பாடல்களை வட இந்திய வாரகாரி சம்பிரதாயத்திலும் காணமுடியும், துகாராம் போன்றவர்கள் அத்தகைய வழிநடைப் பாடல்களை அபங்-களாக இயற்றியிருக்கின்றனர். இவைகள் பொதுமக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்கள் இதை அவர்களது யாத்திரைகளில் வழிநடையாக பாடிச்சென்றனர். பொதுமக்களின் பங்கு அதில் முக்கியமானதாகிறது. இதுபோலவே தமிழகத்தில் சித்தர் இசைப் பாடல்கள் மரபும், சிந்துகளும் காலத்தால் மிகவும் பிந்தையதானதால், தாக்கம் குறைவானதாகவும், பரவலாக பயன்படுத்தப்படாததாகவும் இருக்கிறது.

தமிழில், ஸ்ரீ சைல யாத்திரை, திருமலை யாத்திரை, சிங்களவரின் சிதம்பர யாத்திரை, பண்டரீபுர யாத்திரை போல யாத்திரை இயக்கங்கள் சுத்தமாக இருந்தது இல்லை என்றே சொல்லலாம். எனவே, வழி நடைப்பாடல்கள் வழியாக இசையை உயிரோடு வைக்கும் – முன்னெடுக்கும் உத்தியும் இங்கு பயன்படுத்தப்படவில்லை. தற்காலத்தில் இவை சற்றே காணப்படுகிறது, சபரிமலை பாடல்கள் போன்றவை இன்று பலராலும், கேட்கவும், பாடவும் முடிகிறது.புராண இதிகாசப்பாடல்களால் நாடகங்கள் நிரம்பி வழிந்தபோது, ரசிகன் தன்னோடு பேசும் பாடல்களுக்காக காத்திருந்திருக்கிறான் என்று தெரிகிறது. தன் சுயஅனுபவத்தைப் பகிரும், தனி மனிதனோடு பேசும், அவனோடு அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடிய  பாடல்களை புனையத்தொடங்கியபோது, அவைகளை நோக்கி ரசிகன் இயல்பாக ஈர்க்கப்பட்டிருக்கிறான். இதன் காரணமாகவே, தற்காலத்திலும், சினிமா பாடல்கள் மிகவும் பிரபலமாகவும், தென்னிந்திய செவ்வியல் இசை மிகவும் குறைவாகவும் ரசிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன்.

தமிழிசை என்ற ஒன்று ஆரம்ப நிலையில் இருந்திருக்கிறது, பின்னர் அது வளர்த்தெடுக்கப்படாது அழியவிடப்பட்டது, தமிழகத்தின் கோவில்கள், வரலாற்று சின்னங்கள் போலவே. ஆனால் இப்போது வளர்ந்து நிற்கும் தமிழிசைக் கூறுகள் கொண்ட செவ்வியல் இசைதான் தமிழிசை ஆனால் அதில் பார்பனீய பக்தி புகுந்துவிட்டது, அவர்கள் தமிழை அழித்துவிட்டு தெலுகையும் கன்னடத்தையும் சமஸ்க்ருதத்தையும் மட்டுமே முன்வைத்தார்கள் என்பதுபோன்ற ஆதங்க வார்த்தைகளை கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இது எப்படி இருக்கிறது என்றால், கில்லி தண்டா விளையாட்டு இந்தியா தான் கண்டுபிடித்தது, இதன் முன்னேறிய வடிவம்தான் கிரிக்கெட். ஆங்கிலேயர் சூழ்ச்சி செய்து, நமது கில்லி தண்டா ஆட்டத்தைப் பார்த்து அதை உருவாக்கிவிட்டனர். எனவே கிரிக்கெட்டின் தொடக்கம் கில்லி தண்டா தான். அவர்கள் அதை கண்டுபிடித்திருக்காவிட்டால் நாம்தான் அதை கண்டுபிடித்திருப்போம் என்பது போல. உண்மை வெகுதூரத்தில் இருப்பதாகவே படுகிறது. தமிழ் சமூகம் வெண்பாக்களிலும், நாடகங்களிலும் ஈடுபட்டு, தமிழிசையை கண்டுகொள்ளவில்லை, தொடர்ச்சி அழிந்துவிட்டது. இதுதான் எனக்குத்தோன்றுகிறது.

இனி, அரசியல் ரீதியாகவும், காழ்ப்புடனும், பாடினால் தமிழில் பாடு இல்லையென்றால் தமிழ்நாட்டை விட்டு ஓடு என்பவரிடம் நிச்சயம் சில கேள்விகள் கேட்கப்படவேண்டும், “உண்மையில் தமிழிசை என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?”, “தமிழில் பாடப்படுவதெல்லாம் தமிழிசையல்ல என்பதாவது தெரியுமா?”.

Just a historical Hangover…!!

About ராமச்சந்த்ர சர்மா
A Music Buff

20 Responses to பாடினால் தமிழில் பாடு இல்லைன்னா தமிழ்நாட்டை விட்டு ஓடு..!!

  1. கிரி says:

    // தமிழிசை குறித்த ஆய்வில் ஈடுபடுபவர்கள், பெருமித உணர்ச்சியுடனும், சாதிக்காழ்ப்புடனும், தெளிவான உள்நோக்கங்களுடன், முன் தீர்மானங்கள் நிறைந்த அணுகுமுறையையே காட்டுவதாலும், முன்வைக்கும் கருத்துக்களும் கேட்கப்படாமலேயே விமரிசிக்கப்படுகிறது. பிராமணீய அணுகுமுறைக்கு சற்றும் மாறுதலற்ற அணுகுமுறையாகவே இது இருந்துவிடுகிறது. இதனால் எழுதப்படும் முக்கிய கருத்துக்களுக்கு உள்நோக்கம் கற்பிக்கப்பட்டு கட்டுரைகளை நிராகரிப்பதற்கு ஏதுவாகவும் இருக்கிறது.//

    வெல் செட்! எதைச்சொல்கிறோம் என்பதைவிட எப்படிச் சொல்கிறோம் என்பது சொல்லும் விஷயத்திற்கு ஒரு வரவேற்பை உருவாக்கிக் கொடுக்கும். உண்மைதான்!

  2. ராமசந்த்ர சர்மா – நல்ல கட்டுரை.

    உண்மையில் இயற்றமிழுக்கு இருக்கும் வளர்ச்சி அபாரமானது. கண்ணம்மை, பாஸ்கர் தாஸ் போன்றவர்களால் நாடகத்தமிழ் கூறுகள் பாதுகாக்கப்பட்டாலும் இன்றும் பட்டரைகள் மூலமாக சிறு குழுக்கள் மட்டுமே நாடகக்கலையை அங்கீகரிக்கின்றன. இசைத்தமிழ் பற்றி சிதறுண்ட தகவல்களே நமக்குக்கிடைக்கின்றன. அருணகிரிநாதரின் தாள முறைகள், அருணாசல கவிராயரின் பண் விரிவாக்கங்கள் சரிவர தொகுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. பாடல் நயம் வழியே தெலுங்கு தொட்ட எல்லையை தமிழ் தொட்டதற்கான சரித்திர, சமூக தாக்கங்கள் சரிவர வெளிப்படவில்லை. இன்றும் ஸ்ரீவில்லிப்புதூரில் அரையர்கள் இயல்,இசை,நாடகத்தை ஒருங்கிணைக்கப் பாடுபட்டாலும் அவர்களும் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளனர். குறிபிட்ட சில காரணங்களென எவற்றையும் தனிப்பட்டு கூறமுடியாத நிலையிலேயே நாம் இருக்கிறோம்.

    நன்றி. ரா.கிரிதரன்.

  3. உண்மை ஐயா. தமிழ் சமூகம் இழந்த செவ்வியல் கலைகள் எத்தனையோ. தமிழ் சமூகத்திற்கு செவ்வியல் மீதுள்ள வெறுப்பு, தொல்லியல் மீதுள்ள அலட்சியம் பதற வைக்கிறது. ஒரு மாபெரும் இயக்கமாக இவைகளை முன்னெடுக்காவிட்டால் நமக்கு மீட்சியே இல்லை.

  4. ராம் , இன்றுதான் முழுமையாக படிக்கமுடிந்தது , உங்கள் கட்டுரை விவாதங்களுடைய அடுத்த துவக்கமாக இருந்தால் நன்றாக இருக்கும்.

  5. அரங்கா, என் தாய்மொழி தெலுகாக இருந்தாலும், என்னுடைய தமிழ் மீது எனக்கு நல்ல கர்வம் உண்டு. என்னால் ஜெயமோகனையும், நாஞ்சிலையும், மற்ற தமிழ் எழுத்தாளர்களையும் படிக்குமளவுக்கு தமிழ் தெரியும் என்றால் நிச்சயம் ஒரு சராசரி தமிழனை விட அதிகமான தமிழ் ஆர்வம் இருப்பதாகவே கருதிக்கொள்வேன்.

    இந்நிலையில், தமிழிசையின் தரப்பு குறித்து ஜெயமோகன் அவர்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் தமிழிசை குறித்து சுமார் ஒரு மணி நேரம் விளக்கமளித்தார். அதுதான் நான் கேட்டதில் உருப்படியான தர்க்க ரீதியான தமிழிசை தரப்பு. அதை கேட்டபின்புதான் தமிழிசைக்கு ஒரு உண்மையான தரப்பு இருக்கிறது என்றே புரிந்துகொள்ள முடிந்தது. ஒருவேளை ஜெயமோகன் அதை எனக்கு சிரத்தை எடுத்து விளக்காமல் போயிருந்தால் நானும் தமிழிசை ஒரு “தரப்பு” என்று மட்டுமே சொல்லிச்சென்றிருப்பேன்.

    தமிழிசை தரப்பு குறித்து சில பல புத்தகங்கள் படித்திருக்கிறேன், முற்றிலும் ஃபெனடிக்கான ஒரு அனுகுமுறையையே அவர்கள் முன்வைக்கிறார்கள். எஸ். ராமனாதனும் கூட சிலம்பு குறித்து எழுதியிருந்தாலும் அவரால் தமிழிசை குறித்த ஒரு மாபெரும் வரலாற்று சித்திரத்தை உருவாக்கிக் காட்ட முடியவில்லை. அவருக்கு வரலாறு குறித்த பெரும் ஞானம் இருப்பதாக தோன்றவில்லை. ஆப்ரஹாம் பண்டிதர், மம்மது போன்றவர்களது கட்டுரைகள் சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாகவே தோன்றுகிறது.

    இப்போது தமிழிசைக்குத் தேவையெல்லாம், கருத்தியல், வரலாறு, இசை ஞானம் மூன்றும் உடைய ஒரு தர்க்க ரீதியில் வாதங்கள் வைக்கும் ஒரு தலைமை. அது கருதுகோள்களை தொகுத்து சரியான முறையில் கருத்துக்களை முன்வைக்கவேண்டும். தமிழிசை என்றால் என்னவென்று தெரியாத ஆனால் அதை பெயரளவில் நம்பும் மக்களை உண்மையை நோக்கித்திருப்பவேண்டும். அரசு தமிழிசைக்கல்லூரிகளில் தமிழிசையின்பால் உண்மையான ஈடுபாடுடையவர்களை நியமிக்கவேண்டும்.

    இதுவழியாக தமிழிசை பாடும் ஒரு தலைமுறையை பாடுபட்டுத்தான் உருவாக்க முடியும். இதில் தமிழிசை கல்லூரிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. அது இப்போது சும்மா பெயருக்கு மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கிறது. அது உட்கொள்ளும் பணமும், வசதிகளும் மிகவும் அதிகம். ஆனால் அதிலிருந்ந்து வெளிவருவது என்றால் குப்பைகள் மட்டுமே.

    இந்நிலை மாற மிகவும் சிறப்பான ஒரு தலைமை உருவாகி வரவேண்டும். இல்லையென்றால் சில காலமாக “தமிழிசை” என்று அரசியல் ரீதியாக முழங்கிவரும் மக்களைப்போலவே, தமிழிசை வெறும் முழக்கங்களாகவே நின்றுவிடும் என்பதில் எனக்கு ஐயமில்லை.

    ஜெயமோகனிடம் இதுகுறித்து கேட்டிருக்கிறேன். உருப்படியாக தமிழிசை குறித்து எழுதத்தெரிந்த அல்லது விவாதிக்கத்தகுதியான மக்களை அடையாளம் காட்டும்படி. நாஞ்சிலாரை இசைகுறித்த கட்டுரைகள் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் காரணமும் இதுதான்.

    ஜெயமோகனும், நாஞ்சிலாரும் உண்மையிலேயே இசை ஆர்வம் மிக்கவர்களும் முயன்று முன்னெடுத்தால் தமிழிசையின் உண்மையான வரலாற்றை உருவாக்கிக்காட்ட முடியும். தொடர்ந்து அதை முன்வைத்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திக்காட்டவேண்டும். தமிழில் பாடுவதை தமிழிசை என்று நம்புபவர்களை படிப்பிக்கும் பொறுப்பும், கடமையும் நமக்குத்தான் இருக்க்கிறது.

    இக்கட்டுரை இதுசார்ந்த ஆதங்கத்தில் எழுதப்பட்டதே. இன்னும் நான் இதை சீரியஸாக முன்னெடுக்கவேண்டும் என்று நினைக்கிறேன். இசை குறித்த அறிவு சிறிது இருந்தாலும், கருத்தியலும், வரலாற்றை உருவாக்கிக்காட்டும் திறனும் எனக்கு சுத்தமாக இல்லை என்பது என்னுடைய பெரும் தடையாக நினைக்கிறேன்.

    இதை யாராவது கன்ஸ்ட்ரக்டிவாக முன் எடுத்துச்செல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். கண்ணுக்கெட்டிய தொலைவு வரை யாரையும் காணவில்லை.

  6. ezhil says:

    தமிழ் ,தமிழிசை வரலாறு குறித்து தெலுங்கர்களும் மலையாளிகளும்(ஈகோவினால் பிரிந்து சென்று தனி மொஹி என்று false claim ) கவலைப் படுவது வரலாற்றின் ஒரு துன்பியல் சம்பவமே.தமிழ் சூழலில் வேற்று மொழியினரின் ஆதிக்கம் என்ற நிலை மாறி அராஜகமாக உருக்கொள்கிறது

    • எழில், மிகவும் உண்மை. தமிழன் அதைக்கூட காழ்ப்பில்லாமல் விவாதிக்கத் தயாராகாத போடு மலையாளியின் தலைமையில் தெலுங்கன் பேசுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. இதில் கன்னடவர்களும் உண்டு தெரியுமா?

  7. Elango Kallanai says:

    Hi Ram,
    There are lot of researchers who are giving distinguished identity for Tamil music. Tamil musicology as a subject has been seriously considered. I am surprised that you come across people who are talking only about fanatic angle. I think, this is a clever diversion from the main issue. If you want to see the continuity of Keerthanai from Pann, please do have a look at Saarngadev’s grammar itself. He clearly mentions it is Devaravarthini, which is nothing but from Devaram. I am sure many people have identified this continuity and Tamil Saiva movement was undoubtedly standing on Tamil pride. In addittion, if you have time please meet Dr. Nirmal Selvamony who is a student of Vi.pa. Ka Sundaram who has composed music based on Pann which clearly brings the classical element of the Tamil tradition. One Balasubramanian of Tamil Department , Madurai American college has also done a god research on tamil music’s grammar. Of course regional fanaticism can be part of any political scene. Why not? But as a scholar, you can decide what you are loking for ignoring these voices. I think Abraham pandithar or Vi.Pa. Ka Sundaram or Nirmal’s views on the grammar will give a clue for an opening and you may take it from there. If you feel threatened by tyhese noises, I am sure you are giving too much of importance to your own pre defined political stand. I am no musician and an expert, but I have been observin ha everything related to Tamil pride is looked down. To put a culture in shame is what Hitler did or for that matter any dictator would do. I am sure we can open new things about our past and take pride in it. Are we ready?
    To talk about Telugu, the official language of Pudhukottai Samasthan was telugu. As you ma know, it was a Kallar ( Supposedly the son of the soil) Samasthan. Foreign language was always a strategy to rule the native masses. When Tamil scholars are claiming their space, why should it hurt? I am not able to understand.
    Thanks and regards,
    Elango.K

    • இளங்கோ,

      நம்மிடம் இருப்பதெல்லாம் வெறும் குறியீடுகளாக மட்டுமே மிஞ்சியிருக்கிறது. இதுதான் எனது தரப்பு. வெறும் குறியீடுகளை வைத்துக்கொண்டு கலையை அழித்துவிட்டோம் நாம் என்பதுதான் வருந்தத்தக்க நிலை. தமிழ் மக்களுக்கு தனது உண்மையான பெருமைக்குரிய கலைகளை அழிப்பதில் உள்ள திருப்தி அலாதி.

  8. ராம்,

    பல நல்ல சிந்தனைக்குரிய கருத்துக்களை முன்வைத்திருக்கிறீர்கள். நன்றி. சில விஷயங்கள் குறித்து எனது கருத்துக்கள் –

    1. களப்பிரர் காலத்தில் அழிந்த பாணர்களின் தமிழிசை அப்படியே போய்விடவில்லை. திருஞான சம்பந்தரின் வரவால் அது மீண்டது. புத்துயிரும் பேரெழுச்சியும் கொண்டது. சொல்லப் போனால் சம்பந்தரைப் பற்றி “நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞான சம்பந்தன்” என்று தான் அவருக்குப் பின்வந்த சுந்தரர் கூறுகிறார்.. இங்கு இசை தான் தமிழைப் பரப்புகிறது, not vice versa என்பதைக் கவனிக்கவும். சமண, பௌத்த சமயங்களைப் பின் தள்ளியதிலும் இசைக்குப் பெரும் பங்கு உண்டு. இது பற்றி ”சம்பந்தரின் சமூக மீட்சியும்…” என்ற எனது கட்டுரையில் விரிவாக எழுதியிருக்கிறேன் பாகம் 1, பாகம் 2. “இசை” என்ற உட்தலைப்பில் பார்க்கவும்.

    இசை வழியாக சமய மறுமலர்ச்சி என்பது இந்தியாவில் மற்றெங்கும் நிகழ்வதற்கு முன்பே தமிழகத்தில் தான் பெருமளவில் நிகழ்ந்தது என்பது வரலாற்று உண்மை. ராஜராஜ சோழன் காலம் வரை வளர்ச்சி முகம். அடுத்த 2-3 நூற்றாண்டுகளுக்குப் பின் தேய்வுக் காலம்.

    2. இது இசை மீட்சி மட்டுமல்ல, சில புதிய அம்சங்களும் தமிழிசையில் ஏற்பட்டன. திருஞான சம்பந்தரின் யாழ்மூரிப் பண் இதற்கான ஒரு குறியீடு… இத்திறக்கில் முனைவர் முத்துக்குமாரசுவாமி எழுதியிருக்கும் திருமுறை இசையில் அழகியல் மாற்றம் என்ற இந்தக் கட்டுரையைப் படிக்க வேண்டுகிறேன்.. பாசுரங்களுக்கும், கீர்த்தனங்களுக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டையும் இதில் அழகாக விளக்குகிறார்.. முனைவர் ஐயா பெரும் சைவ அறிஞர். எந்தக் காழ்ப்புணர்வும் இன்றி தமிழிசை பற்றி அவர் எழுதியிருப்பதைப் பாருங்கள்.

    3. தெலுங்கு, கன்னட. மராட்டிய தாசர்களின் பாடல்களால் அப்பகுதிகளில் இசை வளர்ந்தது என்று நீங்கள் கூறும் கருத்து எனக்கு ஏற்புடையதல்ல.. இந்தப் பாடல்களின் மொழி செவ்வியல்தன்மை கொண்டதல்ல, கிராமியத் தன்மை கொண்டது. இசையும் அப்படியே தான்.. இவற்றின் எளிமை மற்றும் அற்புதமான பக்தி உணர்ச்சி காரணமாகவே இப்பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தன. அடிப்படையில் அவை Marga வகை சார்ந்தவை அல்ல, Desi தான். *மிகவும் பிற்காலத்தில் தான்* இந்தப் பாடல்களை செவ்வியல் இசை ராகங்களில் பாடும் போக்கு உருவாயிற்று.

    உதாரணமாக புரந்தரதாசரின் பாடல்கள் கன்னட கிராமங்களில் இன்னும் நாட்டுப் புறமெட்டில் தான் பாடப் படுகின்றன. தியாகராஜ கீர்த்தனை போன்று வரையறுக்கப் பட்ட ராகங்கள் இவற்றுக்கு இல்லவே இல்லை. மராட்டி அபங்கங்களுக்கு ஒரு பொதுவான கிராமிய மெட்டு உண்டு, அவ்வளவு தான், ராக லட்சணங்கள் கிடையா. பின்னாளில் எம்.எல்.வி, எம்.எஸ் போன்ற கர்நாடக சங்கீத முன்னோடிகள் இவற்றை அழகாக சில ராகங்களில் அமைத்துப் பாடியதால் அது நமக்குப் பழகி விட்டது ! இவற்றுக்கு மரபுரீதியான செவ்வியல்தன்மை இல்லாதிருந்ததும் இசைவானர்களுக்கு ஒருவகையில் வசதியாகப் போய்விட்டது.

    ஒப்பீட்டில் திருமுறைப் பாடல்களுக்கு சம்பந்தர் காலத்திலேயே பண்முறைகள் வகுக்கப் பட்டிருந்தன. ராஜராஜ சோழன் காலத்தில் “பண்முறை வகுத்த பாடினி” என்றே ஒரு பெண்ணைப் பற்றிய குறிப்பு வருகிறது. எனவே திருமுறைப் பாடல்களின் மொழியும் சரி, இசையும் சரி, கிராமியத் தன்மை கொண்டவை அல்ல, தெளிவாக செவ்வியல் தன்மை கொண்டவை.

    .. அதுவே, பின்னாளில் கர்நாடக சங்கீத முன்னோடிகள் மேடைகளில் அவற்றைப் பெரிய அளவில் எடுத்துப் பாடாததற்கும் ஒரு காரணமாக இருக்கலாமோ என்று எனக்குத் தோன்றுகிறது..ஏனென்றால் தேவாரத்திற்கு உரிய பண் உண்டு, ஓதுவார்கள் பாடி மக்கள் அந்தப் பண்ணுக்கு condition செய்யப் பட்டுள்ளார்கள். ஆனால் அப்போது (நான் சொல்வது எம்.எல்.வி காலத்தில்) புரந்தரதாசர் பாடல்கள் பற்றி எந்த கண்டிஷனிங்கும் கிடையாது, எனவே அது நல்ல சாய்ஸ்!

    4. உண்மையில் கர்நாடக இசை செழித்து வளர்ந்த இடங்கள் எவை என்று பாருங்கள். தஞ்சை சீமை – அந்தக் காலகட்டத்தில் இங்கு தமிழ், தெலுங்கு, கன்னட, மராட்டிய மொழிகளின் சங்கமமான ஒரு cosmopolitan கலாசாரம் இருந்தது. மைசூர் மன்னரின் அரண்மனையும் அப்படிப் பட்ட ஒரு இடமே.. இங்கு வளர்ந்த இசையில் பண்டைத் தமிழிசையின் தாக்கமும் கண்டிப்பாக இருந்திருக்கும்.. உதாரணமாக, வீணை உருவாக்கும் தொழில்நுட்பம் பண்டைய யாழ்க் கருவி செய்பவர்களிடமிருந்தே வந்திருக்க வேண்டும். “குரஞ்சி” என்ற ராகப் பெயர் “குறிஞ்சி” என்ற தமிழ்ப் பண் பெயரிலிருந்து வந்திருக்கலாம்..

    ஆனால் கர்நாடக சங்கீதம் என்பதன் வீச்சும் பரிமாணமும் ஒட்டுமொத்தமாக பண்டைத் தமிழிசையை விட மிகப் பரந்து பட்டது என்ற உங்கள் கருத்தை முழுமையாக ஒப்புக் கொள்கிறேன். “திருடி விட்டார்கள்” “பார்ப்பனீயம்” போன்ற காழ்ப்புணர்வு வாதங்களை முற்றாக நிராகரிக்கிறேன்.

    • அந்தப் பாடல்களின் மொழி செவ்வியல்தன்மை கொண்டதல்ல, கிராமியத் தன்மை கொண்டது என்பதை உணர்ந்தே இருக்கிறேன். தியாகராஜரின் சில பாடல்கள் தவிர பெரும்பன்மையனவை கிராமிய சொற்களும், அன்றாடம் நாம் பயன்படுத்தும் சொற்களும் தான். ராமதசரும் நாட்டுப்புற மெட்டுக்களிலேயே அவற்றை இசைத்துவந்தர். அனால் இவ்விடத்தில் நான் குறிப்பிட விரும்புவது அப்பாடல்களின் வடிவம் குறித்து.

      மேலும், திருப்புகழ் போன்றவை இன்றும் பலரால் பாடப்பட்டே வருகிறது. எனது ஊகம் என்னவென்றால் தமிழிசை என்பது சைவக்குரவர்களை மட்டுமே முன்னிருத்தியதல்ல. இன்னும் நிறைய இருந்திருக்க வேண்டும். அவை என்ன ஆனது? பழந்தமிழ் இசைக்கருவிகள் குறித்து இப்போது குங்குமம் வார இதழில் எழுதிவருகிறார்கள். அந்த வாத்தியக்கருவிகள் வாசிப்பு எப்படி அழிந்துபோனது? ஒருவேளை இசைத்தலை நிருவனப்பட்டுத்தியதல் அப்படி ஆகிவிட்டதோ?

  9. shankar says:

    ஒரு பக்கம் Music has No Language என்கிறார்கள்!! மற்றொரு பக்கம் தமிழ் தெலுங்கு என்று கோஷம்!!

    Even today Akashvaani – அதான்ங்க ஆல் இந்தியா ரேடியோவில் வாத்ய விருந்தா loosly translated – Instrumental Ensemble என்ற Programme ஐ எல்லோரும் கேட்டு ரசித்தது எவ்வளவு பாபுலராக இருந்தது தெரியுமா?

    Instrumental Music என்றாலே No Language. நாதஸ்வரம், Saxaphone, வயலின் போன்ற வற்றில் தெலுங்கில் தியாகராஜர் இயற்றிய இசையை வாசிப்பவர்களையும் கேட்பவர்களையும் “நாடு கடத்த வேண்டாம்”. What Do You Say?

    • நிச்சயமாக நாடு கடத்தப்படத்தான் வேண்டும். நம்ம அடுத்த முறை புரட்சி செஞ்சு ஆட்சியை பிடிச்சதும் முதல் வேலை இவங்களை நாடு கடத்தரதுதான்.

  10. sibu says:

    அனேகமாக இது ஒத்துக்கொள்ளத்தக்க தர்க்கமாகத்தான் இருக்கிறது. தெலுகு , மராட்டிய மன்னர்களின் காலத்தில் தமிழ் இலக்கியங்களுக்கு நேராத அழிவு தமிழிசைக்கு நேர்ந்தது என்றவாதம் யோசிக்க வைக்கிறது.

  11. sibu says:

    இப்போது தமிழிசைக்குத் தேவையெல்லாம், கருத்தியல், வரலாறு, இசை ஞானம் மூன்றும் உடைய ஒரு தர்க்க ரீதியில் வாதங்கள் வைக்கும் ஒரு தலைமை.
    >

    அரசு தமிழிசைக்கல்லூரிகளில் தமிழிசையின்பால் உண்மையான ஈடுபாடுடையவர்களை நியமிக்கவேண்டும்.<< அவர்களையும் விட்டுவிடுங்கள். கலையை ஏதேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி என்ற ரீதியில் கற்றுக் கொள்பவர்களால் வளர்க்க முடியாது

    • அப்போது அரசு இசைபள்ளிகளின் தேவைதான் என்ன? அது விழுங்கும் பணமும் அதிகம். அதனிடமிருந்து ஒரு நன்மையையும் கிடையாது என்றால் அதை இழுத்து மூடிவிடவேண்டியது தானே? அதுதான் கோபம்.

  12. ? says:

    இதுபற்றி மக்கள் கலை இலக்கிய கழகம் ஒரு வெளியீட்டை பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னரே கொண்டு வந்துள்ளது. அத்தோழர்களிடம் கேட்டுப் பெற்று அதனை படித்து பின் விவாதிப்பது சரியாக இருக்குமே

    • Friend, I have been in touch with Ma.ka.ee.ka for sometime in my school days. I have been attending many events they conducted in and around Thanjavur. I don’t think they are right people to talk about this. Reason, they dont know music or history or inclined towards any kind of intellectual discussion without bias. Interestingly, the title of this article is a ma.ka.ee.ka slogan, if you can remember.
      My thanks to you for your suggestion. But, I don’t think I would do that ever in my life. I would better prefer to stay ignorant.

  13. பாலசுப்ரமண்யன் says:

    திரு சர்மா அவர்களே, இந்தக் கட்டுரையை நான் ஜெயமோகனின் தளம் வழியாகக் கண்டடைந்தேன். நல்ல கருத்துக்கள். தெளிவான தர்க்கத்தோடு உங்கள் வாதங்களை முன்வைக்கிறீர்கள். வாழ்த்துக்கள். ஆனால் சற்றே இலகுவான எழுத்து நடையை எடுத்தாண்டால் இன்னமும் நிறைய சாதிக்க முடியும்.

    உங்கள் தளத்தில் உள்ள மற்ற கட்டுரைகளையும் பார்த்த வரையில் ஒன்று இது போல் சலிப்பூட்டும் நடை அல்லது கல்கி/தேவன் காலகட்டத்தில் உறைந்து போன பழைய தஞ்சாவூர் அக்கிரகார நடை என்றே உங்கள் தேர்வு இருக்கிறது. நகைச்சுவையாக எழுதுவது மட்டுமல்ல காலத்துக்கு தகுந்தாற்போல புதுப்பித்துக் கொள்வதும் அவசியம் அல்லவா? முதல் பின்னூட்டத்திலேயே நிறைய அறிவுரைகள் தருகிறேன் என்று எண்ண வேண்டாம். உங்கள் எழுதுபொருள் தரும் நம்பிக்கையின் காரணமாகவே இவ்வளவும் பேசுகிறேன். அயற்சியுற வைப்பதாக இருந்தால், மன்னிக்கவும்.

    • நிச்சயம் முயற்சி செய்கிறேன் அண்ணா. தமிழ் எனக்கு அந்நிய மொழி. நான் முடிந்தவரை படித்ததை வைத்து எழுதி ஒப்பேற்றிக்கொண்டிருக்கிறேன். எழுதுவது எனது மிகச்சமீபத்தைய ஆர்வம். இன்னும் நன்றாக எழுத முயற்சிக்கிறேன்.

Leave a reply to ராமச்சந்த்ர சர்மா Cancel reply