காலத்தின் கலைஞன்

இந்தியாவில் தனிமனித ஆளுமை வரலாறு என்பது ஒரு மிகை புனைவு மட்டுமாகவே இருந்துவருகிறது. தனிமனித ஆளுமை வரலாறூகள் பெரும்பாலும், நமக்குக்கிடைக்கும் தகவல்களை வைத்து கற்பனையில் அவற்றை விரித்து எழுதப்படுவதாகவே உள்ளது. இவற்றில், சுயபெருமிதங்களும், ப்ரச்சார நோக்கமும், சாதீய அணுகுமுறையில் திரிபுகளையும் முன்வைத்து, எந்தவித சான்றுகளும் இல்லாமல் எழுதப் படுபவையே மிகவும் அதிகமானவை. இவற்றில் தெளிவான தகவல் சித்திரங்களையோ, தளம் சார்ந்த அடிப்படை அனுபவமோ காணக்கிடைப்பதில்லை. மிகவும் அதிகபட்ச சான்றுகளாக நமக்குக் கிடைப்பவை, அவரைச் சார்ந்தவர்கள் எழுதிவைத்திருக்கும், அற்புதங்கள் நிறைந்த ஒரு அதிமானுட சித்திரத்தை அளிக்கும் ஒரு தொல்பிம்ப ஆராதனை குறிப்புகள் மட்டுமே.

ஒரு ஆளுமை வாழ்ந்த காலத்து பின்புலம் அறியாமல் அவரது வாழ்கையை புரிந்துகொள்ள இயலாது. ஒரு சமூகத்தில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மனிதர்களை தனி மனிதர்களாக மட்டுமே புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் வாழ்ந்த சூழலும், அவர்கள் வாழ்ந்த சமூகமும், அச்சமூகத்தை அவர் எதிர்கொண்ட விதமும் சார்ந்த அவரைக்குறித்த புரிதலே நமக்கு ஒரு உண்மையான சித்திரத்தை அளிக்கும். பல ஆளுமைகளின் சரித்திரம் அவர் வாழ்ந்த காலத்திற்கு வெகுநாள் கழித்தே எழுதப்படுகிறது அல்லது உருவாக்கப்படுகிறது. அது உள்நோக்கங்களுடன், விளைவுகளை உத்தேசித்து எழுதப்படுவது மட்டுமே. அப்போது அவற்றில் அதிமானுடத்தன்மைகளும், அமானுஷ்யங்களும், உயர்வு நவிர்ச்சிக் கதைகளும் சேர்க்கப்பட்டு, காலப்போக்கில் அதிகாரப்பூர்வமான வரலாராக ஒரு தரப்பால் முன்வைக்கப்படுகிறது. இத்தகைய பல சரித்திரங்கள் நமக்கு வாசிக்கக்கிடைக்கின்றன. ஒற்றைப்படையான புரிதலுக்கு இவை வழிவகுக்கிறது.

நமது சமூகத்தில் பெரும் ஆளுமைகள் குறித்த சித்திரம் என்பது தொன்மம் சார்ந்த ஒன்றாகவும், தத்துவப் பார்வை சார்ந்த ஒன்றாகவும் மட்டுமே நிலைநிறுத்தப்படுகிறது. இவை இரண்டிலும் ஒட்டு மொத்த மானுடம் குறித்த ஒரு பிம்பமே மேலெழுந்து வருகிறது. அனால் ஆளுமை வரலாறு என்று குறிப்பிடும்போது திட்டவட்டமாக அவ்வாளுமையை நிறுவவேண்டிய கட்டாயம் இருப்பதால், குழுவுணர்வுள்ள இந்தியாவில் இது சாத்தியமாகாமல் போனது என்று சொல்லலாம். கலாசார பெருமிதத்திற்கும், சமூக நெறிப் படுத்துதல்களுக்கும், தத்துவ-தொன்மம் சார்ந்த ஒரு சரித்திரம் அவசியமாகிறது. ஆனால், இவை நேரடியான அம்மனிதனைத் தவிர்த்து அவனது படைப்புக்களையும், அவன் ஒட்டுமொத்த வரலாற்றினை ஒட்டி ஒழுகிய அல்லது எதிர்த்து நின்ற பகுதிகளையும் மட்டுமே எடுத்து உருவாக்கப்படுகிறது. எனவே, தனி ஆளுமைகள் குறித்த இந்திய பார்வை என்பது பயனுள்ளதாக இருந்தாலும், வரலாற்றுச் சான்று அடிப்படையில் குறைபட்டதாகவே இருக்கிறது.

வரலாறு என்பது தனி நிகழ்வல்ல, அது ஒரு சமூகத்தினால் அதன் அனைத்து தரப்புகளாலும் ஒட்டுமொத்தமாக முன்னெடுக்கப்படுவது. ஒரு ஆளுமை சமூகத்தினின்று எழுந்து வருபவனேயன்றி, தனி தளத்தில் உருவாகி இயங்குபவனல்ல. எனவே அவனைக்குறித்த சரியான பார்வைக்கு பல பரிமாணங்களிலும் அணுகி, அதில் ஒரு புள்ளியிலிருந்து நாம் விரித்தெடுத்துக்கொள்வதே நம்முடைய-அவரது வரலாறு. அத்தகைய என்னுடைய தனிப்பட்ட விரிவு ஒன்றை இங்கே பதிவு செய்கிறேன்.
தென்னிந்தியா 1700 களில் பல்வேறு சிற்றரசுகளாலும், ப்ரெஞ்சு, ஆங்கிலக் காலனிகளாலும் துண்டாடப்பட்டு, அரசியல் குழப்பங்களும், சூழ்ச்சிகளும், துரோகங்களும் நிரம்பி வழிந்த காலகட்டமாகும். இந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள் அனைவருமே இந்த அரசியல் சமூக சூழல்களில் அகப்பட்டு அதிலிருந்தும் தமக்கான வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்களே. ஹைதர் அலி, திப்பு சுல்தான், கிழக்கிந்திய கம்பெனி, ப்ரெஞ்சு காலனிகள், கட்டப்பொம்மன், மருது, செவத்தையா போன்றவர்கள் அதிகாரம் செலுத்திவந்த காலம். கலகங்களும் கலவரங்களும், பெருங்கொள்ளைகளும் நிகழ்த்தி படைகள் நடத்த நிதி சேர்த்த காலம் இது. தென்னிந்தியா மாபெரும் அரசியல், சமூக புரட்சிக்குள்ளான காலகட்டம் இது.

கிழக்கிந்திய கம்பெனி, தஞ்சை மன்னன் துளஜாஜியை கைதுசெய்து, ஹைதர், திப்பு ஆகியோரை எதிர்க்க பூனாவை ஆண்ட மராத்தியர்களின் உதவி வேண்டி, அவரையே மீண்டும் மன்னனாக்கி, அவரை கப்பம் கட்டவைத்தனர். ஹைதர், திப்பு ஆகியோர் ஹிந்து மன்னனின் ராஜ்ஜியத்தை வெற்றி கொண்டது மராத்தியரை இவர்களுக்கு எதிராக தூண்டிவிட்டது. காஞ்சியையும் உள்ளடக்கி, க்ருஷ்ணா நதிவரை பரந்து கிடந்த ஹைதர்,திப்புவின் அதிகார எல்லை மேலும் விரிவடையவும், ஆங்கிலேயருக்குதவிய மாராத்தியர்கள் மீதுள்ள பகை காரணமாகவும் ஹைதர் அலி கான் பஹதுர் என்று பட்டம் சூட்டிக்கொண்ட இந்த ஹைதர் நாயக், தஞ்சாவூரின் மீது 1781ல் படையெடுத்தான். கம்பெனி படை கலோனல் ப்ரைத்வைட் முன்னிலையில் இவரை தடுக்க முயன்று தோல்வியுற்றார். தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னன் துளஜாஜியும் ஹைதரின் ஆணைக்கு கட்டுப்படுவதாக அறிவித்தபோது, ஹைதர் தஞ்சையையும் அதைச்சுற்றியுள்ளத்தனை ஊர்களிலும் மாபெரும் கொள்ளையை நிகழ்த்தினான். 1780களில் நடந்த கொள்ளைகளினால் தஞ்சை பகுதியின் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்பட்டது. அடுத்த இருபது வருடங்கள் மிகக் கடுமையான பஞ்சத்தில் தஞ்சை இருந்துவந்தது. இந்த கால கட்டத்தை ஹைதர் காலம் என்று இன்றும் தஞ்சை மாவட்ட பேச்சு வழக்கில் சகஜமாக காணமுடியும்.

இந்த காலகட்டத்தில் ஹைதராபாத் நிஜாமின் ஆட்சியும், விஜயநகரப் பேரரசின் பெரு வீழ்ச்சியும், தக்கான பீடபூமியில் நிகழ்ந்த பல்வேறு அரசியல் குளறுபடிகளின் காரணமாகவும், அதன் காரணமாக பரவலாக நிகழ்ந்த தொடர் கொள்ளைகள் காரணமாகவும், அதன் விளைவான பஞ்சத்தின் காரணமாகவும் மக்கள் பல்வேறு இடங்களுக்கு புலம்பெயர்தல் என்பது மிகவும் சாதாரணமான நிகழ்வானது. தமக்கு ஆதரவளிக்கக்கூடிய, தொல்லை நிகழாமல் பாதுகாக்கக்கூடிய, மத நம்பிக்கைகளை வெட்டியெறியச்சொல்லாத, பிழைப்பதற்கு வழியுள்ள இடங்களுக்கு மக்கள் இடம் பெயர்ந்தனர். இது சில நூற்றாண்டுகளாகவே மராட்டியம் தொடங்கி தென்னிந்தியா முழுவதும் நிகழ்ந்த ஒரு தொடர் நிகழ்வாகும். இப்படி இடம்பெயர்ந்து வந்தவர்களில் பல்வேறு சாதியினரும் அடக்கம்.  பிராமணர்கள் பெரும்பாலும், நதிக்கரை ஓரமாகவே தமது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தனர். க்ருஷ்ணா, கோதாவரி, காவேரி, பாலாறு, மற்றும் பல்வேறு கிளை நதிகளின் கரைகளில் அவர்கள் பல குழுக்களாக நத்தம் நிலங்களில் குடியமர்த்தப்பட்டனர். அவ்வாறு குடியமர்த்தப்பட்டவர்களில் பல்வேறு தமிழ், தெலுகு, கன்னட, மராத்தி, மலையாள மொழி பேசுபவர்களும் இருந்தனர்.

தெலுகை தாய்மொழியாகக் கொண்ட பிராமணர்கள், ஸ்மார்த்த பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்கள். அதாவது, ஸ்ம்ருதிகளையும், ஆதிசங்கரர் வகுத்த வழிகளையும் பின்பற்றுபவர்கள். கோதாவரி நதிக்கரையில் வாழ்ந்த ஆபஸ்தம்பரின் சூத்திரத்தையும், ரிக் அல்லது க்ருஷ்ண-யஜுர் வேதத்தையும் பின்பற்றுபவர்கள். ச்ருங்கேரி மடத்தை ஒட்டியிருப்பவர்கள். இவர்கள் சிவன், விஷ்ணு இருவரையும் வழிபடுபவர். இவர்களை வைதீகிகள், நியோகிகள் என இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். வைதீகிகள் வேத காரியங்களாற்றுபவர்களாகவும், கற்றலும் கற்பித்தலும் நியமமாக கொண்டவர்களுமாவார்கள். நியோகிகள் அரசாங்க காரியஸ்தர்களாகவும், நிர்வாக முறைகள் கற்று பயன்படுத்துபவர்களாகவும் பணிபுரிபவர்கள் ஆவார்கள். வைதீகி பிரிவில் வெலநாடு, தெலகான்யுலு, முலகநாடு, கர்ணகம்மலு, வேகிநாடு என பல உட்பிரிவுகள் உண்டு. இவர்கள் தங்கள் குடும்பப்பெயரும், கோத்திரமும் கொண்டு அடையாளப்படுத்திக் கொள்வார்கள். இவர்கள் தங்கள் இருப்பிடங்களை காவேரி நதிக்கரையை ஒட்டி அமைத்துக்கொண்டு தங்கினார்கள். இவர்கள் அரசாங்கப்பணிகளிலோ, அரசியல் காரணிகளோ இருந்தவர்கள் இல்லை, சனாதன தர்மத்தில் ஒழுகி வாழும் மக்களிடம் ஒட்டி வாழ்ந்தவர்களே.  கதாகாலட்சேபங்களும், பஜனைகளும் நடத்தி, பக்தி மார்கத்தைப் பரப்புவதிலும் இவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

காஞ்சி மடத்தின் வரலாற்றை பார்க்கும்போது பல கருத்துவேறுபாடுகள் வெளிப்படுகின்றன. ஆதிசங்கரர் நான்கு ஆசார்ய பீடங்களை ஏற்படுத்தி பின்னர் காஞ்சியில் வந்து தங்கி இம்மடத்தை ஏற்படுத்தினார் என்று சொன்னாலும் இது ஒரு கிளைப் பீடமாகவே பார்க்கப்படுகிறது. இம்மடம் இஸ்லாமிய படையெடுப்புக்களால் சிறிதுகாலம் கும்பகோணத்தில் இருந்து இயங்கியதாகவும் சொல்கிறார்கள். இம்மடத்தின் 59வது ஆச்சாரியராக வந்த பகவன்நாம போதேந்திர ஸரஸ்வதி (கிபி.1638- 1692) என்பவர், ராம நாம பாராயனம் என்ற முறையை பரப்பி பக்தி இயக்கத்தை முன்னெடுத்தார். இவருடன் ஶ்ரீதர அய்யாவாள் என்பவரும் தொடர்ந்து பல ஊர்களுக்குச் சென்று பக்தி இயக்கத்தை பரப்பிவந்தனர். இவர்களுக்குப் பின் வந்த மருதாநல்லூர் வெங்கடரமண தேசிகர் (கிபி 1777-1817) நாடு முழுவதும் பயனம் செய்து பஜனை பக்தி இயக்கத்தை முன்னெடுத்தார். பல இடங்களில் தனித்தனியாக கிடைத்த பாடல்களையும், பின்பற்றப்படும் வழிமுறைகளையும் ஆராய்ந்து இந்தியா முழுவதும் பரந்துவிரிந்து கிடந்த பக்தி இயக்கத்தின் அத்தனை மகான்களின் பாடல்களையும் கோர்த்து, பஜனை வழிமுறைக்குத் திட்டவட்டமான ஒரு வடிவம் கொடுத்தார்.

இந்த சம்பிரதாயத்தில் பல மொழிகளின் பாடல்கள் இடம்பெற்றிருக்கிறது என்பது நமக்குத்தெரிந்ததே. குறிப்பாக இது, தமிழ், தெலுகு, கன்னட, மராத்தி, குஜராத்தி,  மற்றும் அவ்தி, ப்ரிஜ்பாஷா, சம்ஸ்க்ருதம் போன்ற மொழிகளில் அமைந்த பாடல்களை சேர்த்திருக்கின்றார். இந்த பஜனை முறைமையை ஏற்படுத்திய மருதாநல்லூர் வெங்கடரமணர் அப்போது தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னருக்கு ஆன்மீக வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறார். மேலும் மன்னரது உதவியோடே போதேந்திரரது அதிஷ்டானமும் உருவாக்கப்பட்டது. அரசாங்கத்தின் அனுகூலமும் இந்த முறைமையை முன்னெடுக்க அவருக்கு இருந்திருக்கிறது என்றே முடிவு செய்யப்படவேண்டியுள்ளது.இவர் உருவாக்கி அளித்த தக்‌ஷின சம்ப்ரதாய பஜனை முறைமையையே இன்று வரை பிராமனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். மிகச்சமீபத்தில் வாழ்ந்த ஹரிதாஸ் கிரி போன்றவர்கள் இதை மீட்டுருவாக்கம் செய்து அளித்தவர்களாவார்கள். இன்றும் பிரபலாக இருக்கும் க்ருஷ்ணப்ப்ரேமி, உடையாளூர் கல்யாணராமன், விட்டல்தாஸ் மஹராஜ், கணபதி துகாராம் மஹராஜ் போன்றவர்கள் இவ்வடிவத்தையே கையாண்டு வருகிறார்கள்.

இதே காலகட்டத்தில், அருணாசல கவி (1711 – 1779), தஞ்சை மாவட்டத்து தில்லையாடியில் பிறந்து ராமநாடகப் பாடல்களைப் புனைந்தார், மாரிமுத்தாப்பிள்ளையும் (1717-1787)  இதே காலகட்டத்திலேயே வாழ்ந்து பாடல்கள் எழுதினார். பாபவிநாச முதலியாரும் (1650-1725) இந்த காலகட்டத்தில் வாழ்ந்து தமிழில் பல பாடல்கள் இயற்றி, கீர்த்தனை வடிவத்தை தமிழில் முன்னெடுத்தனர். இவர்களுடன் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முத்துத்தாண்டவரையும் இணைத்து தமிழ் நால்வர் என்று சொல்லும் வழக்கம் உண்டு. தர்மபுரம் மடம் அமைப்புகள் அருணாசல கவிக்கு தமிழ் கற்கவும், இவரது பாடல்களை பரப்பவும் ஓரளவு உதவிசெய்தது. இதுபோலவே பல ஆதீனங்களும் தங்களால் இயன்ற அளவு, தமிழ் வளர்ச்சிக்கும், பக்தி மார்க்கத்தை வளர்ப்பதற்கும், சேவை செய்தன. இவைகள் பல சமூக மக்களுக்கு ஒரு தொடர்புப்புள்ளியாக இருந்துவந்தன. அருணாசல கவி தஞ்சை படைகளுக்கு, ஆற்காடு நவாபின் படையெடுப்பின்போது வீரமூட்டும் வகையில் பாடி அவர்களை தெம்பூட்டினார் என்று ஒரு செவிவழிச் செய்தியும் உண்டு.

தென்னிந்திய சமூகம் போர்களாலும், தொடர்கொள்ளைகளாலும், பஞ்சங்களாலும், அரசியல் சூழ்ச்சிகளாலும், துரோகங்களாலும், வஞ்சகங்களாலும் அலைகிழிக்கப்பட்டு, மக்கள் பஞ்சம் காரணமாகவும், பொருள்தேடியும், வாழ வழிதேடியும் பரவலாக புலம்பெயர்ந்துகொண்டிருந்த காலத்தில், புதிய அரசுகளும், கும்பினிகளும், ப்ரெஞ்சு காலனிகளும், டச்சு காலனிகளும் காலூன்ற முயற்சிகள் செய்துகொண்டிருந்த காலத்தில் – நமது தென்னிந்திய செவ்வியல் இசையின் மிக முக்கிய ஆக்கங்கள் உருவாக்கப்பட்டன. பெரும் அழிவுகள், இக்கட்டுகள் நேரும்போது ஒரு சமூகம் கலையை உயர்த்திப்பிடிக்கிறது, அதன் ஆன்மாவின் குரலை எதிரொலிக்கிறது என்று சொல்லலாம்.

1767ஆம் வருடம் மே 4ஆம் தேதி தெலுகு மொழியை தாய்மொழியாகக் கொண்ட, வைதீகி பிரிவு-முலகநாடு உட்பிரிவைச்சார்ந்த, புலம்பெயர்ந்த காகர்ல ராமப்ரஹ்மத்திற்கும், தஞ்சை அரசவையில், கவிஞராகவும் பாடலாசிரியராகவும் இருந்த கிரிராஜ கவியின் மகளான சீதம்மா என்பவருக்கும் மூன்றாவது மகனாக காகர்ல த்யாகப்ரஹ்மம் பிறந்தார்.

குறிப்பு:  காகர்ல த்யாகராஜரைக்குறித்துத்தான் இந்த கட்டுரை. இவர் குறித்த வரலாற்று குறிப்புகள் எதுவும் திட்டவட்டமாக பதியப்படவில்லை. அவரது சீடர்களான வாலாஜாப்பேட்டை வெங்கடரமணர் எழுதிய குறிப்புக்களும், சமீபத்தில் டி. எஸ். சுந்தரேச சர்மா பக்தி நோக்கில் சம்ஸ்காரம், பக்தி, வாழ்கை நெறி என்ற குறிக்கொளை முன்னிறுத்திய குறிப்புக்கள் போன்றவையே கிடைக்கின்றன. அவரது பாடலைக்கொண்டு அவரது வாழ்க்கையை நிர்மாணிக்க முயன்ற சில கதைகளும், சில “அதிகாரப்பூர்வமான” வரலாறுகளும் கிடைக்கிறது.

(தொடரும்)

Advertisements

About ராமச்சந்த்ர சர்மா
A Music Buff

5 Responses to காலத்தின் கலைஞன்

  1. Skanda says:

    Wonderful read! When are you planning to post the next episode?

  2. Skanda Narayanan says:

    Enna aachu sir? Waiting for the next episode 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: