இசை விமர்சனம்

இசை விமர்சனம் என்பது காதுகளுடைய எல்லோராலும் செய்யப்படுவது. அது இசைகுறித்து பேசவேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. அவ்வப்போது சில இசை தொடர்பான குறிப்புகள் வந்தாலே அது இசை விமர்சனம் என்ற தகுதியை அடைந்துவிடும். இதற்கு எந்த விதமான இசை அனுபவமும், இசை கேட்கும் பழக்கமும் அவசியமில்லை என்று சமூகம் உணர்ந்தே இருக்கிறது. பெரும்பாலான இசை விமர்சனங்கள் மிகப்பெரும்பாலும் மத்திய ஆசியக்காரர்களால் எழுதப்படுகிறது. இவர்கள் தான் கேட்டவற்றையும், கேட்காதவற்றையும் பற்றிக்கூட எழுதுவதற்கு உரிமம் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள். இசை விமர்சனங்களின் ஊற்றுமூலம் என்பது சென்னை மயிலாப்பூர், தி.நகர், மாம்பலம் பகுதியில் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. உலகப்ரசித்தி பெற்ற மாம்பலம் கொசுக்கள் இந்த ஊற்றுகளிலேயே உற்பத்தியாகின்றன என்ற கூற்று சற்றே மிகையாக இருக்கலாம். இந்த விமர்சனங்கள் பெரும்பாலும் சாய்வு நாற்காலியை சுவர்கமாக எண்ணும் சம வயதுக்காரர்களால் படிக்கப்படுகின்றன. இசை விமர்சனங்களில் காலப்போக்கில் பலவகைகள் ஏற்பட்டிருக்கின்றன. அவற்றை தெரிந்துகொள்வது நாம் அவைகளை படித்து உய்ய வழிகோலும்.

இசைவிமர்சனங்கள் பொதுவில் இரண்டு வகைப்படும். பேசப்படும் விமர்சனம், எழதப்படும் விமர்சனம் என்பவை அவை. பேசப்படும் விமர்சனத்தில் பேசுவதுடன் பாடியும், ஆடியும், முக பாவங்களிலும் இசை விமர்சிக்கப்படும் என்பது ஒரு சாதகமான விஷயம். உடனடி விமர்சனம் என்ற வகையை கச்சேரி நடக்கும்போதே சுடச்சுட பக்கத்திலிருப்பவருக்கு தெரிந்தவராயிருந்தாலும், தெரியாதவராய் இருந்தாலும் பரிமாரப்படும். “கொன்னுட்டான்”, “பின்னறான்” ,”வெளுக்கறான்” என்று கசாப்பு, நெசவு, வண்ணான் தொழில் சார்ந்த வார்த்தைகளும் இசைத்தொடர்பான வார்த்தைகளாகவே கருதப்படுகின்றன. “இவன் வாசிக்கறது தவுலா இல்ல ம்ருதங்கமா?” “வயலினுக்குள்ள பூனை பதுங்கியிருக்கா?” என்பதுபோன்ற நகைச்சுவைகளும் தெறிக்கும். இவ்வகை நகைச்சுவை விமர்சனங்கள் பெரும்பாலும் சபா கேண்டீன்களில் நிகழ்வதாகச் சொல்கிறார்கள். கச்சேரி முடிந்தவுடனும் வெற்றிலை போட்டுக்கொண்டு தெருவில் மூன்று பேர் துணைவர ஆகாயத்தை நோக்கி பேசிக்கொண்டே போவதும் உண்டு. இவ்வகை விமர்சனத்தினை எதிர்கொள்ளும்போது பக்கத்திலிருப்பவரின் தொடைக்கும், முதுகிற்கும் கவசங்கள் அணிந்திருக்கவேண்டும் என்பது அனுபவ அறிவு.

எழுதப்படும் விமர்சனங்கள் பெரும்பாலும் வாரந்திரிகளிலும், சிலசமயம் நாளிதழ்களிலும் காணக்கிடைக்கிறது. மிகச்சமீபகாலமாக இணையத்திலும் பெருவாரியாக எழுதப்படுகிறது. இவ்வகை விமர்சனங்கள் எழுத்தாளர்களாலும், எழுத்தாளரல்லாதோராலும் ஒரே மாதிரியாகவே எழுதப்படுகிறது. இசை தெரியாத எழுத்தாளர் எழுதுவது நல்ல விமர்சனமா அல்லது எழுதத்தெரியாத இசை அறிஞர் எழுதுவது சிறந்த விமர்சனமா என்ற விவாதம் அவ்வப்போது எழுவதுண்டு. குருட்டுக் குதிரையில் எந்தக் குதிரை நல்ல குதிரை என்று உடனடி விமர்சனக்காரர்கள் பதிலடி கொடுக்கிறார்கள்.

இந்த எழுத்து விமர்சனத்தில் முதலாவதாக வருவது தயிர்வடை விமர்சனம். முதலிடத்தை பிடிப்பதும் இதுவே. இது சபா கச்சேரிகளைக்குறித்ததாக இருந்தாலும், கேண்டீனில் தொடங்கி, கேண்டீனில் முடியும் வகையில் எழுதப்பட்டிருக்கும். ரசிகப்ரியாவும் ரவாதோசையும், ஆந்தோளிகாவும் அடை அவியலும் போன்ற கவர்ச்சிகரமான ஒப்புவமைகள் தென்படும். கவி காளமேகத்தையும் மிஞ்சும் வண்ணம் இரட்டுற மொழிதலில் திறமை காட்டுபவர்களாக, இவர்கள் எழுதுவது ஜுஜாவந்தி பற்றியா அல்லது பாசுந்தி குறித்தா என்று அறியா வண்ணம் ஒட்டி வருவது மிகவும் சிறந்த விமர்சனமாக கருதப்படுகிறது. இதில் முன்னோடியான சிலர், தயிவடையையும் தோடியையும் ஒப்பிட்டு எழுதியிருந்ததன் சிறப்பை ஒட்டி தயிர்வடை விமர்சனம் என பெயர்காரணம் கூறுவர். ஒருநாள், கரஹரப்ரியா ராகம் எத்தனை கிலோ காராபூந்திக்கு சமம் என்று நடந்த விவாதத்தில் பலத்த கருத்து வேறுபாடு ஏற்பட்டு சட்டுவக்கரண்டியால் சிலரது மண்டை உடைக்கப்பட்டுள்ளது வரலாறு.

தயிர்சாத விமர்சனம் என்பதும் தயிர்வடை விமர்சனத்தை ஒட்டியே வருவது. இது பருப்புசாத விமர்சனம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வகை விமர்சனங்கள் தங்கள் வடிவத்திலும் கருத்திலும் தயிர்வடையை ஒத்திருந்தாலும் மொழியினால் வேறுபாட்டை அடைவது. சுமார் பத்து முப்பது வருஷங்களுக்கு முன்னால் தஞ்சை, கும்மோணம் பகுதிகளில் பேசிக்கொண்டிருந்த, இப்போதும் அயோத்யா மண்டபம் அருகில் அடிக்கடி கேட்கக்கிடைக்கும் மொழியுச்சம் அது. சமஸ்க்ருதமா, தமிழா அல்லது பரிபாஷையா என்று புரியாததனால் மொழியியல் வல்லுனர்கள் கூட குழப்பிப்போயிருக்கிறார்கள். இருந்தாலும் இது இன்னமும் ஆனந்த விகடன், குமுதம் போன்ற இதழ்களால் புரவப்படுகிறது. இரு மத்திய ஆசியக்காரர்கள் பேசிக்கொள்வது போல இருப்பது இதன் சிறப்பு. உடனடி விமர்சனத்தையே எழுத்தில் பார்ப்பதுபோல இருக்கும் இது. “என்னங்கானும், பிள்ளையாண்டான் என்னமா பாடறான் பார்த்தேளோனோ?”, “ஹெ ஹெ ஹெ, எல்லாம் காவிரித் தண்ணிய்யா”, “கண்ணாடிய கழற்றிட்டு பார்த்தா சாக்ஷாத் மஹாவிஷ்ணுவே வந்து எதிர்ல நின்ன மாதிரின்னா இருக்கு” என்பன போன்ற சொற்றொடர்கள் அடிக்கடி தென்படக்கூடும். காலம் மாறிவிட்டாலும், அணா, பைசா போய் ரூபாய் வந்து, அதுவும் போய் கிரடிட் கார்டு வந்த பின்னும் இவர்கள் ஆயிரம் வராகன், பதினாயிரம் வரகன் என்றே குறிப்பிடுவார்கள். ஒரு வராகனுக்கு எத்தனை ரூபாய் என்பது இன்னமும் தெளிவாகவில்லை. இவ்வகை விமர்சகர்கள் பெரும்பாலும் ஃபார்மல் பேண்டும், ஸ்போர்ட்ஸ் ஷூவும், லீ டீஷர்ட்டும் போட்டு மழமழ வென சவரம் செய்த முகத்துடன் காணப்படுவது வழக்கம். சற்றே இவர்கள் அருகில் போனால் நெய்விட்ட பருப்பு சாத வாசனையும் வருவதாக சிலர் சொல்கிறார்கள்.

செய்தி விமர்சனம் என்ற வகையைச்சார்ந்த விமர்சனங்கள் பெரும்பாலும் நிருபர்களாலும், செய்தி சேகரிப்பவர்களாலும் குறிப்புகள் எழுதப்பட்டு ஆசிரியரின் பெயரில் வெளிவருபவை. சமீபத்தைய உதாரணமாக தினமலரில் வந்த விமர்சனங்கள் இதன் சிறந்த எடுத்துக்காட்டு என்று சொல்கிறார்கள். இதில் ஒரு ஃபார்ம் கொடுத்துவிடுவார்கள், அதில் கோடிட்ட இடத்தை நிறப்பினால் அது ஒரு விமர்சனமாகிவிடும். கிட்டத்தட்ட 5 நிமிடங்களுக்கு ஒரு விமர்சனம் என்ற வேகத்தில் இது எழுதப்படுவதால் செய்தித்தாள் அச்சு இயந்திரமே மிரண்டுபோனதாகவும் சொல்கிறார்கள். இது மிகவும் முன்னேறிய வகை விமர்சன்மாகவும், உடனடி விமர்சனத்திற்கு போட்டியாகவும் இருப்பதாக சொல்லப்படுகிறது. உதாரணமாக, —- கச்சேரிக்கு போயிருந்தேன். ——— ராகத்தில் அமைந்த ———- பாடலை அவர் தொடங்கியவுடனேயே கச்சேரி களை கட்டிவிட்டது. ———- ராகத்தில் கச்சேரியை தொடங்கினால் களை கட்டாமல் இருக்குமா என்ன? இவர் இன்று பாடிய ——– ராகத்துக்கு ——- ” என்று எழுதலாம். அந்தந்த கோடிட்ட இடத்தை மட்டும் நிறப்பினால் செய்தி விமர்சனம் ரெடி.

வள்ளல் விமர்சனம், பெரும்பாலும் இன்னமும் தம்மை ஜமீன் வாரிசாகவே நினைத்துக்கொண்டிருக்கும் சில நிலவுடமைக்காரர்களால் எழுதப்படுவது. இன் மொழி பெரும்பாலும் தயிர்வடை விமர்சனத்தை ஒத்திருந்தாலும், எந்த பாடலுக்கு எதை கொடுத்தால் தகும் என்பதே இதன் முக்கிய சாராம்சமாக இருக்கும். அவர் பாடிய தோடிக்கு கோடி கொடுக்கலாம். இவர் பாடிய கல்யாணிக்கு மாம்பலத்தையே எழுதிவைக்கலாம். இந்த வரமுக்கு ஆயிரம் வராகன். இது பத்துகாசு கூட பெறாது என்று எல்லாவற்றையும் தரம்பிரித்து ஆராய்ந்து மதிப்பளிப்பார்கள். இவர்கள் செட்டியார்களிடமிருந்தும், சேட்டுகளிடம் இருந்தும் ஞானம் பெற்று இந்தக்கலையை மேலும் நுண்மைப்படுத்தியிருக்கிறார்கள் என்று சொல்கின்றனர்.

வரலாற்று/பக்தி விமர்சனம் என்பது இசையைத்தவிர அதில் குறிப்பிடப்பட்ட பாடலில் தொடக்கம் எடுத்துக்கொண்டு அவ்வூரின் வரலாறு கோவில் என்று தலயாத்திரை போல எழுதுவதாகும். இன்று கச்சேரியில் மெயின் சாவேரியில் “கர்மமே பலவந்த மாயே தல்லி” என்ற பாடல். நாகப்பட்டினம் நீலாயதாக்ஷி அம்மனைக்குறித்தது. நாகப்பட்டினம் தமிழகத்தின் கடற்கரையோர சிறு நகரம், அட்ச ரேகை தீர்க ரேகை போன்ற புள்ளி விவரங்களையும், அங்கிருக்கும் கோவிலில் எத்தனை தூண்கள் என்பதிலிருந்து கோவில் பூசாரியின் செல்ஃபோன் நம்பர் வரை தொகுத்து எழுதப்படும். இதில் இசை ஒரு காரணமாகவே இருந்தாலும் காரணியாவதில்லை. பெரும்பாலும் சக்தி, பக்தி போன்ற இதழ்களில் இத்தகைய இசைக்கட்டுரைகள் காணப்படும். இவைகளில் அங்கங்கே இங்கே கண்ணீர் விடவும், இங்கே ஆஹா என்று சொல்லவும் போன்ற குறிப்புகளும் அடைப்புக்குள் வாசகர் நலம் கருதி கொடுக்கப்பட்டிருக்கும். ருத்ரப்பட்டினம் ப்ரதர்ஸ் பாட்டு என்று வந்தால் அதிலிருந்து லீட் எடுத்துக்கொண்டு ருத்ரப்பட்டினம் ஊரின் வரலாற்றை அலசுவது மற்றொரு பரிமானத்தை அளிக்கும்.

ஞான விமர்சனம் என்பதில் எப்போதுமே ஒருவித பாசாங்கற்ற தன்மை தெரியும். இவ்வகை விமர்சன்ங்களில், “ரிஷபத்தை இன்னும் ரெண்டு ப்ரமானச்சுத்து இறக்கி பிடிச்சுருக்கனும்”, “சதுர்தண்டிப்ரகாசிகால 43ஆம் பக்கத்துல சொல்லிருக்கான், த்ரிகாலம் பண்ணும்போது சதுஸ்ரதி ரிஷபம் நம்ம காதுக்கு அந்தர காந்தாரமாத்தான் கேக்கும்ன்னு”, “ப்ரத்யாகத கமகத்தை தாட்டு கமத்தோடு சேர்த்து பிடித்தால் தோடி விளங்குமான்னேன்”  என்பதுபோன்ற சொற்றொடர்கள் அநாயாசமாக பயன்படுத்தப்படும். இதில் எழுதுபவரும் சரி, படிப்பவரும் சரி அதில் என்ன சொல்லியிருக்கிறது என்று அனாவசியமாக குழம்புவதில்லை. விமர்சனத்தின் நோக்கம் விமர்சனம் மட்டுமே என்று மேலும் மேலும் தொழில்நுட்ப ரகசியங்களை அடுக்கிக்கொண்டே இருப்பார்கள். இதற்காகவென்றே வீட்டில் நூறு இருநூறு புத்தகங்களை பழைய புத்தகக்கடைகளிலிருந்து வாங்கிப்போட்டிருப்பார்கள் என்றும் சொல்கிறார்கள். இவர்களை போஷிப்பதற்கென்றே சங்கீத மகாசபை வருடா வருடம் மிகப்பெரிய பொருட்செலவு செய்துவருகிறது என்றும் சொல்கிறார்கள். விலங்குப் பண்ணையில் வரும் ஸ்க்வீலரோடு இவர்களை ஒப்பிட்டு கவிஞர் காத்துவாயன் சாத்துவாங்கியதாகவும் தெரிகிறது.

வாழ்க்கை விமர்சனம் என்பது இசையை விட்டுவிட்டு அந்த இசைக் கலைஞனை குறித்து பக்கம் பக்கமாக பேசுவது. பற்பல சித்தாந்தங்களையும், கோட்பாடுகளையும் அலசி ஆராய்ந்து, இசைதான் கலைஞன் கலைஞன் தான் இசை என்ற அத்வைத ஞானத்தை அடைந்தவர்கள் எழுதும் விமர்சனங்கள் இவை. இதற்கு தூய அத்வைத மார்கத்தின் ஞான தரிசனமும் கட்டாயம் தேவை என்று சொல்கிறார்கள். இவற்றை எழுதுவதற்கு கஞ்சா, குடிபோதை, பெண்கள் போன்றவை குறித்த சரியான புரிதல் தேவையாகிறது. காட்டுக்கத்தலாக இருந்தாலும் அதிலிருந்து இசையையும், இசைக்கலைஞனது வாழ்வையும் பிரித்து எடுக்கக்கூடிய விசேஷ அன்னபக்ஷிகள் இவர்கள். இவர்கள்  இலக்கியத்திற்கும், இசைக்கும் நடுவில் ஒரு ஸ்டூல் போட்டு அமர்ந்திருப்பவர்களாவார்கள். இவர்களது கட்டுரைகள் சிற்றிதழ்களிலும், தனி புத்தகங்களாகவும் வெளிவரும். கடும் விமர்சனங்களுக்கும் இவர்கள் சற்றும் சளைத்தவர்களல்லர். சிலசமயங்களில் தடாலடியாக ஞான விமர்சனத்திலும் இவர்கள் இறங்கக்கூடும். ஆனாலும் மற்றவகை விமர்சனங்களை இவர்கள் ஒருபோதும் விமர்சனமாக கொள்வதில்லை. இவர்கள் கோஸ்ட் ரைட்டர்ஸ் போல கோஸ்ட் விவாதக்காரர்களையும் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

விமர்சன விமர்சனம் என்ற வகை மிகச்சமீபமாக பிரபலமாகி வருகிறது. தயிர்வடை, ஞான, செய்தி விமர்சகர்கள் இதை முன்னின்று நடத்துகிறார்கள். விமர்சகராக ஆசையுள்ளவர்களும், விமர்சனம் எழுத முடியாதவர்களும், விமர்சனம் என்பதே புரிதலின்மையின் உளரல்தானே என்ற உயர் தத்துவ தளத்தில் நிற்பவர்களும் சேர்ந்து முன்னெடுக்கும் வகையாக இது இருக்கிறது. இது சர்ச்சைகளாலும், சச்சரவுகளாலுமே பிரபலத்தை அடைந்தது என்று வரலாறு தெரிவிக்கிறது. இதை எழுதுவதற்கு தனி ஞானம் தேவையில்லை. எதிர்தரப்பு சொல்வது அனைத்தையும் மொத்தமாக மறுத்துவிட்டு, பின்னர் அதற்கான காரணங்களையும் கண்டுபிடித்து அதை மெருகேற்றி எழுதிவிட்டாலே போதுமானதாகிறது. தற்காலத்தில் இவ்விமர்சன முறையை சிறப்பாக கையாண்ட அனைத்து தரப்புமே கிட்டத்தட்ட சமநிலையை அடைந்து சமாதியாகிவிட்டார்கள் என்றும், மீண்டும் அடுத்த இசை விழாவிலோ, அல்லது புத்தகவெளியீட்டு விழாவிலோ இந்த விமர்சனமுறை மீண்டும் புத்துயிர் பெறலாம் என்றும் செய்திக்குறிப்புகள் கூறுகின்றன. இதற்கு தூய அத்வைத மார்கத்தில் கடும் எதிர்ப்பும், கோட்பாட்டு-நவீனத்துவ-பின்நவீனத்துவ ரீதியிலான தர்க்கங்களும் தயாராக இருப்பதாக கறுப்பு ஆடுகள் தெரிவிக்கின்றன. இவ்வகை விமர்சனங்கள் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும் இதை யாராலும் அழிக்கமுடியாது, இதை தாண்டித்தான் விமர்சனங்களின் தொடக்கப்புள்ளி இருக்கிறது என்று தீவிரமாக நம்புகிறோம் என்று தூ.அ.மா வின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

Advertisements

About ராமச்சந்த்ர சர்மா
A Music Buff

12 Responses to இசை விமர்சனம்

 1. நான்காவது வகை விமர்சகர்களைக் குறித்த இன்னும் கொஞ்சம் தகவல்கள்:

  இவர்கள் விமர்சனத்தின் விமர்சகர்கள் மட்டும் இல்லை. ‘இசை’ என்ற வார்த்தையைக் கூடத் தங்களைத் தவிர வேறு யார் எழுதினாலும் இவர்களுக்குக் கோபம் வரும். ஆனால் தாங்களும் எழுதமாட்டார்கள் என்பதுதான் அதில் விசேஷம். ஒரு பக்கம் ‘நேம் ட்ராப்பிங், சுய தம்பட்டம்’ என்றெல்லாம் அறச்சீற்றம் காட்டுவார்கள். பதில் சொன்னால் எனக்குக் கோர்வையாக விளக்க வராது என்று காணாமல் போவார்கள். ஒரு பக்கம் கண்ணீர் சிந்தி அழிந்துபோன எழுத்துகளோடு பாராட்டுக்கடிதம் எழுதுவார்கள். இன்னொரு பக்கம் ‘அதெல்லாம் எப்பவாச்சும் exceptions. மற்றபடி எல்லாம் குப்பை’ என்பார்கள். ஈறைப் பேனாக்கி யாராவது இவர்கள் கையில் கொடுத்தால் அதை இவர்கள் பெருமாளாக்குவார்கள். பத்து கட்டுரைகளில் ஒரு கட்டுரையில் ஒரு விமர்சகர் பூந்தியைப் பற்றி எழுதினால், இவர்கள் அதை இருபது கட்டுரைகளில் தயிர்வடையாக மாற்றி உலகமே தயிர்வடைக் கட்டுரைகளால் ஆனது என்று புலம்புவார்கள். அதற்கு முதல்நாள்தான் இவர்கள் இந்த உலகமே அத்வைத விமர்சகர்களால் ஆனது என்று புலம்பியிருப்பார்கள். ஆங்கிலத்தில் இல்லாத கவித்துவம் தமிழில் இருப்பதைக் கண்டு வியந்த இவர்கள், அடுத்த நாளே ‘சே… கட்டுரை எழுதச் சொன்னா என்னா மாதிரி கவிதையா எழுதி இருக்கான்யா’ என்பார்கள். இசைக்கட்டுரைகளைப் பதிப்பிக்கும் எடிட்டர்களை இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். தகவல் பிழை, எழுத்துப்பிழை, வார்த்தைப்பிழை உட்பட அனைத்துப்பிழைகளுக்கும் தேடிப்பிடித்து எடிட்டரைத் திட்டுவார்கள். [‘ஒக்காளி, என்ன வார்த்தை யூஸ் பண்ணிருக்கான்? தெரிஞ்சுதான் போட்டயா?’,‘இவ்வளவு கேவலமா ஒரு கட்டுரையை அவசியம் பதிப்பிக்கனுமா?’,‘இந்தக் கட்டுரைல என்னதான்யா சொல்ல வரீங்க?’, ‘டெரர் இன் பத்திரிகை’]. இவர்களும் சிலசமயங்களில் கைமறதியாய்க் கட்டுரை எழுதுவது மட்டுமில்லாமல், அதைத் தெரியாத்தனமாய் எடிட்டர்களுக்கும் அனுப்பிவிடுவார்கள். ஏற்கனவே பலமுறை இவர்களிடம் கடிவாங்கிய எடிட்டர்கள் ‘மாட்னான்’ என்று உற்சாகமாய் அதைப் பதிப்பித்தும் விடுவார்கள். அந்தக் கட்டுரைப் பதிப்பிக்கப்பட்டவுடன், அத்தனை நாளாய்க் காத்திருந்த மற்ற மூன்று வகை விமர்சகர்களும், எழுத்தெழுத்தாய், வார்த்தை-வார்த்தையாய் இவர்களைப் பீராய்ந்து உரித்துத் தொங்கவிட்டுவிடுவார்கள். இவர்களுக்குப் பிடித்த கதை: ‘தென்னை மரத்தில் கட்டிப்போடப்பட்ட மாடு’.

  • கலக்குறே சேது பிரமாதம்..!! விரைவில் மாடு கட்டுரையையும் பதிக்கிறேன். கொஞ்சம் சரி படுத்திட்டா போதும்..!! வருது வருது.!! உங்களது பின்னூட்டத்தை நையாண்டிக்கு நையாண்டி என்ற வகையைச்சார்ந்தது என்பது இன்னும் சிறப்பு 🙂

 2. சேது , கட்டுரையில் மிஸ்ஸான பகுதியை நிறைத்துவிட்டீர்கள் , அட்டகாசம் , அந்த நாலாவதுவைகையில் ஒருவரை எனக்கு நெருக்கமாக தெரியும் 🙂

  • அரங்கா உங்களை நல்லவருன்னு நெனச்சேனே..!! கவுத்துப்புட்டீங்களே..!! அடுத்தவங்கள கலாய்க்க எழுதுனா, எனக்கே திரும்ப வருது.. இதுதான் விதின்றது போல..!! இருந்தாலும்..நண்பேன்னா…என்ன சொன்னாலும் சரிதான்..!!

 3. சமீப காலங்களில் உண்மையிலேயே படித்து ரசித்து சிரித்து மகிழ்ந்த ஒரு இசை விமர்சன கட்டுரை.

  வாழ்க நீவீர்!

 4. Jeyakumar says:

  Simply amazing article.. No one will dare to write review to Music programs henceforth.

  Sethu also rocks..

 5. Bhaskar says:

  சர்மாஜி, பின்னிட்டேள். உங்களுக்கு அருணாசலேஷ்வர் அருள் தொடர்ந்து கிடைக்க வேண்டுகிறேன்!

  • அண்ணா, அருணாசலேஷ்வர் அருள் இருக்கிறதோ இல்லையோ சேதுவின் வள்ளல் தன்மை இருக்கிறது.. !! அவர் தான் எனக்கு வாரி விட்டுருக்காரே.. பாக்கலையா? 🙂

 6. பூபதி says:

  ஓ. இதை எழுதி வெளியிட்டாச்சா ? முதல் பத்தி படிச்சமாதிரி இருக்கேன்னு மிச்சத்தைப் படிக்காம விட்டுட்டேன். இன்று விடுமுறை அல்லவா ! .முழுவதும் படித்து முடித்தேன். ஆயினும் என்றைக்காவது இசையின் அடுக்குகள் புரியவரும்போது இவற்றை நினைவு கொள்வேன்.

 7. சர்மா – அட்டகாசம். நேற்று தான் படிக்க முடிந்தது. ரசித்துப் படித்தேன். இருந்தாலும் ஓவரா இருக்கு ஓய்! :))))

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: