பாடினால் தமிழில் பாடு இல்லைன்னா தமிழ்நாட்டை விட்டு ஓடு..!!

பாடினால் தமிழில் பாடு இல்லைன்னா தமிழ்நாட்டை விட்டு ஓடு..!! – இது நான் அடிக்கடி எதிர்கொள்ளும், மிகவும் தீவிரமாக என்மீது பிரயோகிக்கப்படும் ஒரு வாசகம்.

தமிழிசைக்கான தரப்பு என்றைக்குமே இருந்துகொண்டிருக்கிறது. தமிழிசை இயக்கத்தினர், ஆய்வுகளும், கருத்தரங்கங்களும் நடத்தியும், நூல்களும், கட்டுரைகளும் எழுதியும் அதன் வாதங்களை எடுத்துவைக்கிறது. தமிழிசை குறித்து பல நூல்களும், ஆய்வுக்கட்டுரைகளும் எழுதப்பட்டிருக்கிறது. ஆனாலும், அந்த தரப்பு கேட்கப்படாமலேயே முற்றிலுமாக நிராகரிக்கப்படுவது நடந்துகொண்டிருக்கிறது. பெரும்பாலும் இக்கட்டுரைகளின் தொனி மிகவும் கடுமையானதகவும், பிரச்சாரமாகவும் இருப்பதும், தமிழிசை குறித்த ஆய்வில் ஈடுபடுபவர்கள், பெருமித உணர்ச்சியுடனும், சாதிக்காழ்ப்புடனும், தெளிவான உள்நோக்கங்களுடன், முன் தீர்மானங்கள் நிறைந்த அணுகுமுறையையே காட்டுவதாலும், முன்வைக்கும் கருத்துக்களும் கேட்கப்படாமலேயே விமரிசிக்கப்படுகிறது. பிராமணீய அணுகுமுறைக்கு சற்றும் மாறுதலற்ற அணுகுமுறையாகவே இது இருந்துவிடுகிறது. இதனால் எழுதப்படும் முக்கிய கருத்துக்களுக்கு உள்நோக்கம் கற்பிக்கப்பட்டு கட்டுரைகளை நிராகரிப்பதற்கு ஏதுவாகவும் இருக்கிறது.

பொது அரங்கில் தமிழிசையின் தரப்பு என்பது இன்னும் தெளிவாக உணரப்படாததாக இருப்பதற்கு காரணம் அதில் ஒலிக்கும் வெவ்வேறு நிலைப்பாடுகளும், கருதுகோள்களுமே. தமிழிசை இயக்கத்தின்  க்ளைம்கள் வரலாற்று ரீதியிலானதா, சமூக ரீதியிலானதா, அல்லது இசை வடிவம் சார்ந்ததா, அல்லது பாடல் வடிவம் சார்ந்ததா அல்லது இவையனைத்தும் சார்ந்ததா என்பதே பலரால் இன்னமும் சரியாக ஊகிக்கமுடியவில்லை என்பதே இன்று இதன் நிலை. இதற்கான காரணம் இவை மொத்த குரல்களையும் ஒருங்கிணைத்து ஒரு பொது நிலைப்பாட்டை தமிழிசை தரப்பு எட்டவில்லை என்பது மட்டுமே. இந்த கருத்துக்களை ஒட்டுமொத்தமாக முன்வைத்து அதுதொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு, விளக்கம்கொடுத்து தம் நிலைப்பாட்டை தர்கரீதியாக நியாயப்படுத்தும் ஒரு தலைமை தமிழிசை தரப்புக்கு இல்லை என்பது மிகவும் சோர்வு தரும் நிலை.மேலும், தர்க்கத்தில் கொள்ளத்தக்க எந்த ஒரு திட்டவட்டமான ஆதாரங்களை அளிக்கும் தரவுகள் தமிழிசை தரப்பிடமோ, மாற்றுத்தரப்பிடமோ இல்லை. தமிழிசை தரப்பு சிலம்பையும், மாற்றுத்தரப்பு வேதங்களையும் துணைக்கு அழைக்கின்றன. ஆனாலும், வேதங்களிலிருந்து தொடங்கியதாக சொல்லப்பட்டாலும், அவை சுமார் 12 நூற்றாண்டுகளுக்கான தொடர்ச்சியின்றி நேரடியாக தற்காலத்தில் வந்து நிற்கிறது. களப்பிரர் காலத்தில் தமிழிசை அழிந்துபோனது, என்று மாற்றுத்தரப்பு வாதாடுகிறது. இன்னிலையில் குழப்பங்கள் தீர தமிழிசை தரப்பை திட்டவட்டமான கட்டுரையாக கருத்தியலிலும், வரலாற்றிலும், இசையிலும் ஆளுமையுள்ள யாரவாது எழுதினால் புண்ணியம் உண்டாகும்.

For the Heck of It:

 

இதுகுறித்த என் கருத்துக்கள் சில. இவ்விஷயத்தில் கருத்துச்சொல்பவர்கள் தரத்தை கருத்தில்கொண்டும், கருத்துச்சொல்வதற்கான தகுதிகள் ஏதுமில்லை என்பதாலும் இதை மனம்போன போக்கில் எழுதுகிறேன். இவைகள் மிக முக்கியமற்றவை மட்டுமே.

கர்நாடக சங்கீதம் என்றழைக்கப்படும் தென்னிந்திய செவ்வியல் வடிவத்தின் மிக முக்கியமான வடிவமாக இருந்துவருவது கீர்த்தனை என்றழைக்கப்படும் பாடல் வடிவம்.இன்று புழக்கத்தில் இருக்கும் கீர்த்தனை வடிவம் என்பது சுமார் 400ல் இருந்து 500 வருடப்பழமை கொண்டதாக இருக்கலாம். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு பாடல் வடிவம் என்பது எப்படி இருந்தது என்பது குறித்து திட்டவட்டமான கருத்துக்கள் கூறுமளவுக்கு நம்மிடம் தரவுகள் இல்லை. இக்கீர்த்தனை வடிவத்திற்கு எழுதப்பட்ட இலக்கணம் என்று எதுவும் இல்லை. என்றாலும் வழக்கமான ஒரு வடிவத்தை பின்பற்றி கீர்த்தனைகளை எழுதி வருகிறார்கள். பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற மூன்றடுக்கு வடிவம் மிகவும் பிரபலமானது. பல சரணங்கள் கொண்ட பாடல்களும், சமஷ்டி சரணப் பாடல்களும் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. தமிழிசை தரப்பு பாணர் – நாட்டார் இசைப்பாடல் வடிவின் மறுவடிவாக்கமே இந்த கீர்த்தனைகள் என்று முன்வைக்கிறது. மாற்றுத்தரப்பு, இதை சாமவேதத்திலிருந்தும், புராண சுலோகங்களிலிருந்தும் வந்தது என்கிறது.
எதையும் எழுதிவைக்கும் வழக்கமில்லாத காலத்தில், அவற்றை எளிதாக நினைவிலிருத்துவதற்காக எதுகைகளும், மோனைகளும், சொல்லடுக்குகளும் பயன்படுத்தப்பட்டன. பின்னர் மொழி எழுத்துரு கொண்டபோதும் அவை அலங்காரங்களாக நிலைத்துவிட்டன. ஒரு இசைப்பாடலுக்கு வரிகளின் அளவு முக்கியமானது. வரிகளின் அளவுகள் கச்சிதமாக அமைக்கப்பட்ட வடிவ நேர்த்திகொண்ட பா வகைகள் பாடுவதற்கு ஏற்றதாகக் கருதப்பட்டது. இதிலும் பாடல் வரிகளுக்கு எந்த கவித்துவமும் கட்டாயமில்லை என்பதும், அவை கதைகளை நகர்த்திச்செல்லும், அதீத உணர்வுகளை கடத்தும் ஒரு கருவியாகவும் மட்டுமே பயன்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் வடிவத்திற்கு தமிழ்தான் மூலம் என்பது ஒருவகையில் பெருமைக்குரிய விஷயம் என்றபோதும், இதே வடிவம் ஜெயதேவர், கபீர், மீரா, துகாராம் போன்றவர்களால் பயன்படுத்தப்படுவதையும் பார்க்கிறோம். மேற்கத்திய இசையிலும் இத்தகைய பாடல் வடிவங்கள் நமக்குக் காணக்கிடைக்கின்றன. இவ்வகையில் இவ்வடிவம் ஒரு பொதுவான இசை அம்சமாகவே உலகெங்கும் இருக்கிறது என்று தோன்றுகிறது.

கீர்த்தனை வடிவத்தின் வரலாற்றைப் பார்த்தால், நமக்குக்கிடைக்கும் படைப்புகளில், ஜெயதேவரின் படைப்புக்களில் இது பயன்பட்டிருக்கிறது. தென்னிந்திய இசையில் அன்னமய்ய, பத்ராசல ராமதாஸ், புரந்தரதாஸ் போன்றவர்கள் இந்த வடிவத்தை தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள். அன்னமய்ய இப்போது புழக்கத்திலிருக்கும் சிறிய கீர்த்தனை வடிவை முதலில் முன்வைக்கிறார். இவருக்குப்பின் வந்த ராமதாஸரும் இதே வடிவத்தை கையாள்கிறார். கர்நாடகத்து தாஸகூடத்தைச் சார்ந்த புரந்தரதாஸரும், கனகதாசரும் இந்த வடிவத்திலேயே பாடல்கள் இயற்றுகிறார்கள். இவர்களுக்கு முன்னோடியாக, க்ஷேத்ரக்ஞரும் இந்த வடிவத்திலேயே பதங்கள் எழுதியிருக்கிறார். இவர்களுக்கு காலத்தில் பிந்தைய தமிழ் மூவரும் இந்த வடிவிலேயே பாடல்கள் இயற்றியிருக்கிறார்கள். இவர்களுக்கு பின் சங்கீத மும்மூர்த்திகள் என்றழைக்கப்படும் முத்துஸ்வாமி தீக்ஷிதர், காகர்ல த்யாகப்ரஹ்மம், ஸ்யாமா ஸாஸ்த்ரி ஆகியோர் இவ்வடிவத்தை மிகவும் கச்சிதமாக பயன்படுத்தினார்கள். தற்காலத்தில் பலரும் பாடல்கள் புனைவது இந்த வடிவத்தில் மட்டுமே. தமிழில் தமிழ் மூவர் முதல்தான் இந்த வடிவம் உறுதியாகிறது. இதற்கு முன்பே இவ்வடிவம் இந்தியாவின் பல பகுதிகளில் பரவலாக பயன்படுத்தப் பட்டிருப்பதற்கான சான்றுகள் இருப்பதால் இது தமிழிலிருந்து தோன்றிய ஒன்று என்று உறுதியாக சொல்லமுடிவதில்லை.

தெலுகு மொழியிலேயே மிக அதிகமான பாடல்கள் கிடைக்கின்றது என்பதற்கான காரணம், அப்போதைய அரசவைகளில் தெலுகு மொழியே போற்றப்பட்டது எனவே அனைவரும் அந்த மொழியிலேயே படைத்தனர் என்று கூறப்படுகிறது. தமிழ் மூவரும், சங்கீத மும்மூர்த்திகளும்,  நவாப்களும், ஆங்கிலேயரும் ஆண்டுகொண்டிருந்தபோதுதான் தமிழில் பாடல்கள் படைத்துக்கொண்டிருந்தனர். முகலாயர் காலத்தில்தான் தெலுகில் பலர் இயற்றிக்கொண்டிருந்தனர். உதாரணமாக, ராமதாஸர் நவாபுகள் காலத்தில் தெலுகில் மட்டுமே எழுதியவர். புரவலர்கள் தேவைப்பட்டவர்கள் மட்டுமோ அல்லது அரசவை வாக்யேயக்காரர்களோ மட்டுமே புரவலர்களால் ஆதரிக்கப்பட்ட மொழியில் எழுதினார்களே ஒழிய, ராமதாஸரோ, அன்னமய்யவோ, ஆதிப்பையவோ, மீராவோ, கபீரோ, துகாராமோ, ஞானதேவோ, த்யாகப்ரம்மமோ புரவலர்களைச் சார்ந்தவர் அல்லர். அவர்கள் அவர்களது இயல்பான தாய்மொழியிலேயே எழுதினார்கள். புரவலர்களைச் சார்ந்து மட்டுமே பாடல்களை இயற்றுவேன் என்று தமிழ் சமூகத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை. ஏனெனில் மற்ற அனைத்து தமிழ் கலைப்படைப்புகளும், உதாரணமாக குறுங்காப்பியங்களும், கவிதைகளும் அனைத்து காலத்திலும் செழிப்பாகவே இருந்திருக்கிறது. எனவே இந்தக் கருதுகோள் முழுவதும் சரியல்ல என்றே தோன்றுகிறது. இது தமிழில் கீர்த்தனங்கள் எழுதப்படாது போனதற்காக நாம் தேடிக்கொள்ளும் சமாதானமாகவே படுகிறது. உண்மையிலேயே தமிழிசை மரபு முன்னெடுக்கப்படாமைக்கு ஏதேனும் காரணம் இருந்திருக்கக் கூடும்.

தமிழ் சமூகம் முத்தமிழாக வகுத்து பயின்றபோது மற்ற சமூகங்கள் இந்த அளவுக்கு ஏற்றம் அடையாததாகவே இருந்திருக்கக்கூடும். ஆனாலும், நாடகத்தை வகுத்தபோது, நடிப்பும் பாட்டும் என்று வகுத்தது. இது இசையை பயன்படுத்திக்கொண்ட ஒரு கலையாக இருக்கிறது. இசைக்கென தனியாக ஒரு மரபு இருந்தபோதும், அதை நாடகம் துணைக்கலையாக பயன்படுத்திக்கொள்வதை பார்க்கிறோம். நாடகத்திலும் அதுசார்ந்த நடனத்திலும் புராணத்தையும், மன்னரின் வெற்றிக் கதைகளையும் பாடி நடித்துக்காட்டிக்கொண்டிருந்தனர். இதில் பாடல்கள் கதை சொல்லும் ஒரு உத்தியாகவே பயன்பட்டிருக்கிறது. தமிழ் சமூகம் இயற்றமிழுக்கும், நாடகத்தமிழுக்கும் கொடுத்த முக்கியத்துவத்தை இசைத்தமிழுக்கு கொடுக்கவில்லை. தெலுகு, கன்னட சமூகங்களில், தமிழ் சமூகம்போல இயற்றல், நாடக இயக்கங்கள் இருந்ததில்லை. அவர்களது தொடக்கமே, சில தத்துவ நீதி சதகங்களும்,கிராமிய நடையில் எழுதப்பட்ட சில கதைகளும் மட்டுமே. அங்கிருக்கும் நாடகங்கள் கூட பெரும்பாலும் விருத்தங்கள்-பாடல்களாலான உரையாடல் மட்டுமே. கதை சொல்லிகள் என்றொரு குழுவும் அச்சமூகங்களில் இருக்கிறது. அவை ஹரிகதை இயக்கம் போல பாடல்களும் அதற்கான விளக்கங்களும் மட்டும் சார்ந்து செல்வதை பார்க்கமுடிகிறது. இச்சமூகங்கள் இசையை வளர்த்தெடுத்த அளவுக்கு நாடகங்களையோ, கவிதை, கட்டுரைகளையோ கையாளவில்லை. இதன் தாக்கத்தை இன்று வரை காணலாம், உதாரணமாக தெலுகு மொழியில் இலக்கியம் என்று சொல்லத்தகுந்த எதுவும் இன்றுவரை இல்லை. ஆனாலும் அங்கு இசை இயல்பாகவே இருந்திருக்கிறது. தமிழ் சமூகம் இசைத்தமிழை முன்னெடுக்கவில்லை, ஊக்கப்படுத்தவில்லை. இப்போதும் தமிழிசையில் முன்வைக்கப்படும் பாடல்கள், ராமநாடக கீர்த்தனைகளும், நந்தன் சரித்திர கீர்த்தனைகளும் மிகச்சில துண்டு கீர்த்தனைகளுமே. இதற்குமேலே வேண்டுமானால் கம்பராமாயணத்தை இசைகோர்த்துப் பாடலாம்.

இசைக்கு முக்கிய காரணியாக பயன்பட்ட பாடல்களின் கருத்து பக்தி சார்ந்ததாகவே இருக்கிறது. இது முற்றிலும் தவறானது என்பது ஒருபுறமிருக்க, இதற்கான காரணங்கள் ஆராயப்படலாம். பக்தி இயக்கங்கள் தமிழில் மிகவும் பிரபலமான காலகட்டமாகும்,தேவாரமும், திருவாசகமும், நாலாயிரமும் கரைபுரண்டோடிய காலம். சைவ-வைணவத்திருமுறைகள் பயின்று மன்னர்கள் ஆலயங்கள் எழுப்புவித்த காலம். திரும்பிய பக்ககமெங்கும் பாடல்களாக ஒலித்துக்கொண்டிருந்த காலம். மன்னர்கள் கொடைகள் அளித்து ஓதுவார்களை நியமித்து, நிவந்தங்கள் அளித்து திருமுறைகளை ஓதச்செய்தனர். ஆனால் அவை இன்று மிகக்குறுகிய குழுவாலேயே உயிரோடு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு தொடர்ச்சியில்லாது போனது ஏன்? இவற்றை வைத்துக்கொண்டே ஒரு மாபெரும் இசைக்கோட்டையை எழுப்பிவிடமுடியுமே? இவற்றிற்கும் காரணமாக நான் நினைப்பது, இவற்றிலும், இசையை பின் தள்ளி, கவிதைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் மட்டுமே. இவற்றிலுள்ள கவி நயத்திற்கு கொடுக்கப்பட்ட இடம், இசைக்கு கொடுக்கப்படவில்லை. மேலும், இவை பொது மக்கள் பெருமளவில் பங்குகொள்ளும் வகையில் இல்லாது, ஓதுவார்களைக்கொண்டு ஓதுவித்ததோடு நின்று போனது.

தமிழ் சமூகத்து பக்தி இயக்கம் கவிதைகளாலானது, மாறாக கன்னட, தெலுகு பக்தி இயக்கங்கள் பாடல்களாலானது. கன்னடத்து தாஸகூடத்தைச்சார்ந்த புரந்தரதாசர், கனகதாசர் போன்றவர்களும், ஆந்திரத்து அன்னமய்ய, ராமதாஸு போன்றவர்களும், பக்தியையும், தத்துவத்தையும் பாடல்களில் பதிந்துவைத்தனர். இவ்விசைக்கான வேர் அவர்கள் வாழ்ந்த சமூகத்தின் கிராமிய இசை வடிவங்களிலேயே இருந்திருக்கிறது. மிக எளிமையான, எளிதில் பிரதிபலிக்கக்கூடிய மெட்டுக்களையே அவர்கள் கையாண்டார்கள். பாடல்களில் மிக எளிமையான, புழக்கத்திலிருக்கும் வார்த்தைகளையே பயன்படுத்தினார்கள். இதே வகைப்பாடல்களை வட இந்திய வாரகாரி சம்பிரதாயத்திலும் காணமுடியும், துகாராம் போன்றவர்கள் அத்தகைய வழிநடைப் பாடல்களை அபங்-களாக இயற்றியிருக்கின்றனர். இவைகள் பொதுமக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்கள் இதை அவர்களது யாத்திரைகளில் வழிநடையாக பாடிச்சென்றனர். பொதுமக்களின் பங்கு அதில் முக்கியமானதாகிறது. இதுபோலவே தமிழகத்தில் சித்தர் இசைப் பாடல்கள் மரபும், சிந்துகளும் காலத்தால் மிகவும் பிந்தையதானதால், தாக்கம் குறைவானதாகவும், பரவலாக பயன்படுத்தப்படாததாகவும் இருக்கிறது.

தமிழில், ஸ்ரீ சைல யாத்திரை, திருமலை யாத்திரை, சிங்களவரின் சிதம்பர யாத்திரை, பண்டரீபுர யாத்திரை போல யாத்திரை இயக்கங்கள் சுத்தமாக இருந்தது இல்லை என்றே சொல்லலாம். எனவே, வழி நடைப்பாடல்கள் வழியாக இசையை உயிரோடு வைக்கும் – முன்னெடுக்கும் உத்தியும் இங்கு பயன்படுத்தப்படவில்லை. தற்காலத்தில் இவை சற்றே காணப்படுகிறது, சபரிமலை பாடல்கள் போன்றவை இன்று பலராலும், கேட்கவும், பாடவும் முடிகிறது.புராண இதிகாசப்பாடல்களால் நாடகங்கள் நிரம்பி வழிந்தபோது, ரசிகன் தன்னோடு பேசும் பாடல்களுக்காக காத்திருந்திருக்கிறான் என்று தெரிகிறது. தன் சுயஅனுபவத்தைப் பகிரும், தனி மனிதனோடு பேசும், அவனோடு அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடிய  பாடல்களை புனையத்தொடங்கியபோது, அவைகளை நோக்கி ரசிகன் இயல்பாக ஈர்க்கப்பட்டிருக்கிறான். இதன் காரணமாகவே, தற்காலத்திலும், சினிமா பாடல்கள் மிகவும் பிரபலமாகவும், தென்னிந்திய செவ்வியல் இசை மிகவும் குறைவாகவும் ரசிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன்.

தமிழிசை என்ற ஒன்று ஆரம்ப நிலையில் இருந்திருக்கிறது, பின்னர் அது வளர்த்தெடுக்கப்படாது அழியவிடப்பட்டது, தமிழகத்தின் கோவில்கள், வரலாற்று சின்னங்கள் போலவே. ஆனால் இப்போது வளர்ந்து நிற்கும் தமிழிசைக் கூறுகள் கொண்ட செவ்வியல் இசைதான் தமிழிசை ஆனால் அதில் பார்பனீய பக்தி புகுந்துவிட்டது, அவர்கள் தமிழை அழித்துவிட்டு தெலுகையும் கன்னடத்தையும் சமஸ்க்ருதத்தையும் மட்டுமே முன்வைத்தார்கள் என்பதுபோன்ற ஆதங்க வார்த்தைகளை கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இது எப்படி இருக்கிறது என்றால், கில்லி தண்டா விளையாட்டு இந்தியா தான் கண்டுபிடித்தது, இதன் முன்னேறிய வடிவம்தான் கிரிக்கெட். ஆங்கிலேயர் சூழ்ச்சி செய்து, நமது கில்லி தண்டா ஆட்டத்தைப் பார்த்து அதை உருவாக்கிவிட்டனர். எனவே கிரிக்கெட்டின் தொடக்கம் கில்லி தண்டா தான். அவர்கள் அதை கண்டுபிடித்திருக்காவிட்டால் நாம்தான் அதை கண்டுபிடித்திருப்போம் என்பது போல. உண்மை வெகுதூரத்தில் இருப்பதாகவே படுகிறது. தமிழ் சமூகம் வெண்பாக்களிலும், நாடகங்களிலும் ஈடுபட்டு, தமிழிசையை கண்டுகொள்ளவில்லை, தொடர்ச்சி அழிந்துவிட்டது. இதுதான் எனக்குத்தோன்றுகிறது.

இனி, அரசியல் ரீதியாகவும், காழ்ப்புடனும், பாடினால் தமிழில் பாடு இல்லையென்றால் தமிழ்நாட்டை விட்டு ஓடு என்பவரிடம் நிச்சயம் சில கேள்விகள் கேட்கப்படவேண்டும், “உண்மையில் தமிழிசை என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?”, “தமிழில் பாடப்படுவதெல்லாம் தமிழிசையல்ல என்பதாவது தெரியுமா?”.

Just a historical Hangover…!!

Advertisements

குழந்தை மேதைகள்

நமது நாட்டில் இசைக்கலைஞர்கள் எல்லோருமே ஒன்று ப்ராடிஜியாக இருப்பார்கள் இல்லையென்றால் எக்ஸ்பைரி தேதியை நெருங்கிக்கொண்டிருப்பார்கள். கடின உழைப்பால் முன்னேறினேன் என்று சொல்லும் இளைஞர்கள் எவரும் கண்ணில்படவில்லை. Andre Rieu எனும் புகழ்பெற்ற இசைக்கலைஞரோடு சேர்ந்து வாசிக்கும் இந்த சிறுவனைப்பாருங்கள் Akim Camara என்று பெயர். இதை அவன் வாசிக்கும்போது அவனது வயது 3. இப்போது 8 வயது ஆகியிருக்கும். சிறு குழந்தை ஆனாலும் வயலினை கையில் எடுத்ததும் எவ்வளவு சீரியஸாகிவிட்டான் என்று இப்போதும் ஆச்சரியப்படுகிறேன்.

கோதாவரி பயணம் – விஷ்ணுபுரம் வட்டம் – 4

இரவு 3 மணிசுமாருக்கு அரவம் கேட்டு எழுந்தபோது கேப்டன் ஆணைபிறப்பித்துக்கொண்டிருந்தார். படகுதரைதட்டிவிட்டது போலும். அதை சரியான இடத்தில் தள்ளி நங்கூரமிட்டுக்கொண்டிருந்தார்கள். விஜயராகவனும், சந்திரகுமாரும் காலை 5 மணிக்கெல்லாம் எழுப்பிவிடுகிறேன் எனக்கு நம்பிக்கை தந்திருந்தார்கள். இருந்தாலும் எனக்குத்தூக்கம் பிடிக்கவில்லை. சரியாக 4:30 மணிக்கெல்லாம் எழுந்துவிட்டேன். பக்கத்தில் பார்த்தால் சந்திரகுமார் தயாராக நின்றிருந்தார். 5 மணியாகட்டும் எழுப்பலாம் என்று இருந்தேன் என்றார். கேப்டனை எழுப்பிவிட்டேன். அவர்போட்ட சத்தத்தில் படகு மொத்தம் எழுந்துவிடும் போல இருந்தது. இந்த படகோட்டிகளுக்கு மிகக் கார்வையான குரல் இருக்கும்போல.

க்ருஷ்ணனை எழுப்பிக்கூட்டிக்கொண்டு மேல்தளத்திற்கு வந்து நின்றிருந்தோம். சூரியன் இன்னும் வரவில்லை. மேகமூட்டமாக இருந்தது. சுக்கான் பிடிப்பவர் இன்னும் 3 நாட்களுக்கு மழை இருக்கும் என்றார். ஒவ்வொருவராக மேலே ஏறி வந்தார்கள். அருகில் ஏதாவது ஒரு நல்ல மணல்திட்டில் நிறுத்தி குளிக்கலாம் என்று முடிவு செய்தோம். சுமார் 30 நிமிட நேரப்பயணத்தில் ஒரு நல்ல மணல்திட்டில் நங்கூரமிட்டோம். அருகில் ஒரு சிறிய மலைக்கிராமம். அனைவரும் இறங்கி கிராமத்துக்குள் சென்றார்கள். நானும் சந்திரகுமாரும்,சிறிலும் மட்டும் சற்று மெதுவாகக்கிளம்பி கிராமத்திற்கு சென்றோம். அங்கே இளங்கோவும், வசந்தகுமார் அண்ணாச்சியும் நின்றிருந்தார்கள். அவர்களோடு பேசியபடியே நடந்துகொண்டிருந்தோம்.

மிகச்சிறிய கிராமம். அப்போதுதான் மசமசப்பாக விடிந்துகொண்டிருந்தது அவர்களுக்கு. சுமார் 50 வீடுகள் இருக்கலாம் அதிகபட்சமாக. பெரும்பாலானவர்கள் எங்களை பார்த்தவுடனேயே எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார்கள். சென்னை என்றதும், ஆரீப் ஊரில் இல்லை. அவர் சென்னைக்காரர்தான் என்று மறக்காமல் சொன்னார்கள். கிட்டத்தட்ட 20 பேராவது ஆரீபை குறித்து சொல்லியிருப்பார்கள். ஆரீப் இன்று மாலை வந்துவிடுவார். அவரது பாய்ஜான் கல்யாணத்திற்காக சென்னைதான் போயிருக்கிறார் என்று சொன்னார்கள்.

ஆரீபின் தாத்தா அந்த கிராமத்தில் வந்து கடை போட்டிருக்கிறார். இப்போது மூன்றாம் தலைமுறையாக இப்போது இவரும். ஆரீபின் குழந்தைகள் சென்னையில் அவரது மனைவி வீட்டில் இருந்து படிப்பதாகச்சொன்னார்கள். ஆரீப் எங்கள் வீட்டுப்பிள்ளைபோல இங்கே பாருங்கள் ஆரீபின் நாய் எங்கள் வீட்டில்தான் இருக்கிறது என்று ஒரு பெண்மணி சொன்னார்.

வயதான தாத்தா ஒருவர் வழியில் உட்கார்ந்திருந்தார். எனக்கு அவரைப்போன்றவரோடு பேசுவதில் மிகவும் விருப்பம் உண்டு. வயது என்ன இருக்கும் என்று கேட்டேன். இதுபோன்றவர்களோடு ஒரு பிரச்சனை, காலப்ரக்ஞை பெரும்பாலும் இருக்காது. அது இருக்கும் நிறைய என்றார். என்ன ஒரு 80 இருக்குமா என்று கேட்டேன். அதற்கு மேலேயும் இருக்கலாம் என்று அவரது குடும்பத்தார் சொன்னார்கள்.இந்திராகாந்தியை பார்த்திருப்பதாகவும், காங்கிரஸ் பிடிக்கும் என்றும் சொன்னார். சுதந்திரப்போராட்டம் எல்லாம் நியாபகம் இருக்கிறதா என்று கேட்டதற்கு இல்லை என்று சொல்லிவிட்டார். அவரோடு ஒரு போட்டோ எடுத்துக்கொண்டேன். அவரிடம் சிறில் அதை காட்டியபோது மிகவும் ஆர்வமாக பார்த்து சந்தோஷப்பட்டார். வழியில் ஏரோட்டப்போன ஒருவரை நிறுத்தி சிறில் சில போட்டோக்கள் எடுத்துக்கொண்டார்.

ஆசான் தலைமையில் மற்றொரு குழு வேறெங்கேயோ போயிருந்தது. நாங்கள் கிராமத்தைச் சுற்றி வந்துகொண்டிருந்தோம். அண்ணாச்சியும், மோகனரங்கனும் எங்கேயாவது டீ கிடைக்குமா என்று பார்க்கச்சொன்னார்கள்.

ஒரு சிறிய வீட்டின் முன்புறம் அடுப்பு போட்டு கடை போல வைத்திருந்தார்கள். சிலபல தோசைகளும், போண்டாக்களும் உள்ளே போனது. சூடான டீயுடன் 19 ரூபாய்தான் பில் வந்தது. ஆச்சரியமாக இருந்தது. இதுவே தமிழ்நாட்டில் குறைந்தது 50 ரூபாயாவது ஆகியிருக்கும் என்றார் விஜயராகவன்.

பலர் மூங்கில் கழியில் இருபுறமும் உறி போல குடங்களில் நீரெடுத்துவந்துகொண்டிருந்தார்கள். குடிப்பதற்காக கோதாவரித் தண்ணீரை அப்படித்தான் எடுத்துவருகிறார்கள். ஆண்கள் தான் அப்படி எடுத்துவருகிறார்கள். பெண்கள் குழாயடியில் நீரை நிறப்பி இடுப்பில் வைத்து வளைவுகள் தெரிய சென்றுகொண்டிருந்தார்கள்.

பேசியபடியே நடந்து மணலில் இறங்கினோம். ஓரிடத்தில் ராஜமண்ட்ரியில் இருந்து கற்கள் எடுத்துவந்து அம்மி, திருகுரோலு (தமிழில் தெரியாது) போன்றவற்றை செய்துகொண்டிருந்தார்கள்.

அப்போது மிகவேகமாக ஆசானும் மற்றவர்களும் மணலில் ஓடிவந்துகொண்டிருந்தார்கள். ஏதாவது வம்பு வளர்த்து யாராவது விரட்டுகிறார்களா என்று பார்த்தேன். அது காலை ஓட்டப்பயிற்சி என்று தெரிந்ததும் ஆசுவாசம்.அனைவரும் நீரில் அமிழ்ந்தோம். 3 நாள் பயணத்தின் உடல்வலிக்கு மிகவும் இதமாக இருந்தது. மீண்டும் கேப்டன் சத்தம்போட ஆரம்பித்துவிட்டார். சுழல்கள் அதிகம் எனவே இந்தப்பக்கம் வாருங்கள் என்று கூவல். இப்போது அது பழகிப்போய்விட்டது. அவரிடம் நான் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் கத்தாதீர்கள் என்று சொல்லிவிட்டு நீரில் அமிழ்ந்தோம். காலை உணவு தயாராகும் வாசனை மூக்கை துளைத்தது. சேமியா உப்புமாவும், போண்டாவும். அப்போது விஷ்ணுபுரத்து கறுத்த நாய் ஒன்று எங்களுக்கு காட்சியளித்தது.

கோதாவரி பயணம் – விஷ்ணுபுரம் வட்டம் – 3

எனக்கு காவிரி நல்ல பழக்கமுண்டு. காவிரிக்கரையில் வாழ்ந்திருந்ததால், காவிரியில் சுமார் 18 வருடங்கள் பழக்கம் எனக்கு. எங்களூருக்கு வரும்போது காவிரி மிகவும் சுத்தமாகவே இருக்கும் அப்போது. கோதாவரியில் குளிப்பது நல்ல அனுபவமென்றாலும், காவிரியில் குளித்ததன் மனஎழுச்சியை இதில் அடையமுடியவில்லை. ஆனாலும் மனதளவிலான காரணங்களால் கோதாவரி குளியல் மிகவும் சுகமாக இருந்தது. சுமார் 6 மணிவாக்கில் அனைவரும் மேலே அமர்ந்திருந்தோம். படகு கும்மிருட்டில் விளக்கில்லாமல் சென்றுகொண்டிருந்தது. விளக்குகளை அனைத்துவிடுகிறார்கள். விளக்கி தண்ணீரில் பட்டு ஒளிர்வதால் முன்னே கண்ணுக்குத்தெரியாது என்பதால் அப்படியாம். சுக்கான்பிடித்தவர் சொன்னார். சரியாகத்தானிருக்கும்.

படகு சுலபமாக செல்வதற்கு 5 அடி நீர் இருந்தால் போதும் என்று சொன்னார். அதற்கேற்ப மணல் திட்டுக்களையும், நீருக்குள் இருக்கும் மணல்மேடுகளையும் லாவகமாகத் தவிர்த்து சுக்கான் பிடித்துக்கொண்டிருந்தார். கண்ணுக்குத்தெரிந்த ஸ்பீட் ப்ரேக்கரிலேயே வண்டியை விட்டுவிடுகிறோம் நீங்கள் எப்படி நீருக்குள் இருக்கும் மணல் திட்டுக்களை கண்டுபிடிக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு நீ நீரை படிக்கவேண்டும் என்றார். சுமாராக 25 வருடங்கள் கோதாவரியோடு தனக்குப்பழக்கம் என்றார்.
மலைத்தொடர்கள் தென்பட ஆரம்பித்திருந்தது. ஓரிடத்தில் நிறுத்தி ஏற்கனவே மீன் வாங்கியிருந்தார் கேப்டன். மேல் தளத்திற்குச் செல்லும்படியருகே செல்லும்போதே உணவின் மணம் கவர்ந்திழுத்தது. நான் சைவம்தான் ஆனாலும் மீன் வாசனையை அறிவேன், சுத்தமாகப்பிடிக்காது. பயந்துகொண்டே இருந்தேன். ஆனால் மீன் மணம் சுத்தமாக வெளியே வரவில்லை என்பதில் மகிழ்ச்சியடைந்தேன். இன்றுவரை மீன் மணமில்லாத மீனைப்பார்த்ததே இல்லை. மாலையில் மீண்டும் காப்பி. சிலர் கையில் ஸ்னாக்ஸ் எதுவும் வாங்கி வந்திருக்கலாம் என்று பின்யோசனை தெரிவித்தார்கள்.

இதில் தொடக்கத்திலிருந்தே ஒரு சிக்கல். க்ருஷ்ணன் ஒரு மினிமலிஸ்ட். வசதிகளைப்பற்றி சற்றும் கவலைப்படாத ஒரு மனிதர். எந்த இடத்திலும் அனுசரித்துக்கொள்ளுபவர். அரங்கசாமி மேக்ஸிமிஸ்ட். முடிந்த அளவு வசதிகள் இருப்பதில் தவறில்லை என்பவர். ஆனாலும் முடிவில் இருக்கும் வசதியை எந்த புலம்பலும் இன்றி ஏற்றுக்கொள்பவர். இவ்வளவு பெரிய படகு நமக்கெதற்கு என்று தொடங்கியது, பின்னர் அரங்கசாமியின் அயராத முயற்சியால் மேன்மேலும் வசதிகள் பெருகிவிட்டன. க்ருஷ்ணனுக்கு அதில் சற்றே வருத்தமும் இருக்கக்கூடும்.

இரவுக்குள் பேரண்டபள்ளி எனும் கிராமத்தை அடைவதாகத்திட்டம். ஆனாலும், நாங்கள் ஒரு நல்ல மணல்திட்டாகப்பார்த்து வண்டியை நிறுத்தச்சொல்லிவிட்டோம். இரவு அங்கேயே தங்குவது என்று தீர்மானமானது. பயணம் தந்தகளைப்பு அனைவர் முகத்திலும் தெரிந்தது. பேச்சு எங்கெங்கோ தொட்டுச்சென்று ஷாஜி இசைவிமரிசகரா என்பதில் வந்து நின்றது. அந்த உரையாடல் வீட்டோ செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.  கள் எங்கேயும் கிடைக்குமா என்று சிலர் ஆர்வமாக இருந்தார்கள். போலவரம்தான் போகவேண்டும் என்று சொல்லிவிட்டபடியால் அமைதியாக உரையாடி உறங்குவது என்று முடிவுசெய்தோம். இரவு உணவு மிகவும் நல்லமுறையில் செய்யப்பட்டிருந்தது.

ஆந்திர உணவுக்கு ஒரு பக்குவம் உண்டு, எவ்வளவு காரம்போட்டாலும், அதில் நெய்யை ஊற்றி அதை மட்டுப்படுத்திவிடுவார்கள். மிளகாய் அதிகம் சேர்ப்பதால் நம் மெடபாலிக் ரேட் அதிகமாகும் அதனால் எவ்வளவு சாப்பிட்டாலும், உடம்பு போடாது என்று சொல்வார்கள். நாக்கை ஏமாற்றலாம், ஆனால் வயிற்றை? மிளகாய் அதன் வேலையைக்காட்டிவிடும். காரம் சற்று குறைவாகவே போடுங்கள் என்று முன்னரே சமையற்காரரிடம் அறிவுறுத்தியிருந்தேன். அதுவே சற்று அதிகமாகத்தான் இருந்தது என்று சொல்லவேண்டும்.மீண்டும் அவரிடம் காலையில் சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

உணவு முடிந்து சற்றுநேரம் மேலே தளத்தில் அமர்ந்திருந்தோம். படுக்கைகள் விரிக்கப்பட்டுவிட்டன என்று செய்தி வந்தபிறகு ஒவ்வொருவராக கீழே சென்று படுத்தோம். இரவில் நான் பெரும்பாலும் தூங்குவதில்லை. விடியற்காலையில்தான் எப்போதுமே தூங்கும் வழக்கம். அதனால், விழித்திருப்பவரிடமெல்லாம் வாய் பிடுங்கிக்கொண்டிருந்தேன். யுவன் நகைச்சுவை வெடிகளாகக் கொளுத்திப்போட்டுக்கொண்டு இருந்தார். பெரும்பாலானவர்கள் அரைத்தூக்கத்திலும் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

விளக்கு அணைக்கப்பட்ட பின்னர் சற்று நேரத்தில் மீண்டும் வலுவான ரீங்காரம் கேட்டது. படகை எங்கே நகர்த்துகிறார்கள் என்று புரியாமல் எழுந்து பார்த்தேன். படகு அங்கேயே நின்றிருந்தது. ஆனால் டி.டி.எஸ் எஃபக்டில் குறட்டைகள் தொடங்கியிருந்தன. அது படகின் ரீங்காரத்தைவிடவும் வலுவாக இருந்தது. காதுகளை முழுவதும் மூடிக்கொள்ள ஒரு துண்டை தலையில் சுற்றிக்கொண்டேன். நதி படகை தாலாட்டிக்கொண்டிருந்தது. எங்களனைவரையும்தான்.

கோதாவரி பயணம் – விஷ்ணுபுரம் வட்டம் – 2

அதிகாலை 4:30 மணியளவில் விழித்துப் பார்த்தபோது சீரால ஸ்டேஷனில் நின்றிருந்தது. மிகச்சுலபமாக அழகி என்று சொல்லிவிடக்கூடிய அளவில் ஒரு பெண் வந்து என் இருக்கையில் உட்காரலாமா என்று கேட்டாள். சுமார் 18-20  வயது இருக்கலாம். நிச்சயமாக என்று சொல்லி அவளுக்காக எழுந்து அமர்ந்துகொண்டேன். அந்த காலை நேரத்திலும் வெளிர் மஞ்சள் நிற உடையில் மிக அழகாக இருந்தாள். வாழ்வுடா உனக்கு என்று சொல்லிக்கொண்டேன். அவள் உட்கார்ந்தபடியே தூங்கிக்கொண்டிருந்தாள். நான் அவளைப்பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு ஒன்றரை மணிநேரம் போனது தெரியவில்லை.அவள் ஒங்கோலில் இறங்கிப்போய்விட்டாள். என் சுயத்திலிருந்து ஏதோ பறிபோனதுபோல உணர்ந்தேன்.

விஜயவாடா சேரும்போதே மணி 7 ஆகியிருந்தது. ஏலூரில் நண்பன் அவனது ஹோட்டலில் இருந்து எம்.எல்.ஏ. பெரசட்டு அனுப்பியிருந்தான். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னியும் இஞ்சி சட்னியும். இந்த பயணத்தில் ஆந்திர உணவின் முதல் சுவை. ராஜமண்ட்ரி சேரும்போது மணி 10 ஆகிவிட்டது. ஆளுக்கு 10 ரூபாய் என்று பேசிக்கொண்டு 17 பேரும் மூன்று ஆட்டோக்களில் கோதாவரிக்கரையை சேர்ந்தோம்.

அதற்குள் படகின் கேப்டன் ஒரு 10 முறையாவது என்னை அழைத்திருப்பார். எல்லாம் தயாராக இருக்கிறது நீங்கள் எங்கே என்று மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தார். படகில் அனைவரும் ஏறி அமர்ந்துகொண்டோம். பெரும்பாலானவர்கள் பையை உள்ளே போட்டுவிட்டு மேல் தளத்திற்குச் சென்றுவிட்டனர். சிலர் டீ குடிக்க, சிலர் சிகரட் வாங்கி ஸ்டாக் வைக்க என்று அங்கும் இங்கும் போய்க்கொண்டிருந்தனர்.படகில் அனைவரையும் தன்னக்கட்டி ஏற்றுவதிலேயே தெரிந்துபோய்விட்டது இந்த 17 பேரையும் ஒருங்கிணைப்பது அத்தனை சுலபமான ஒன்று அல்ல என்று.

அரங்கசாமி “ஒன்னும் ப்ரச்சனையே இல்ல சர்மா” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார். அவருக்கே சொல்லிக்கொள்கிறாரோ என்று சுயமுன்னேற்ற நூல் சார்ந்த ஒரு சிந்தனை சரடும் தோன்றியது. படகிற்கு டீசல் போடப்பட்டிருந்தது. 100 லிட்டர் தான் கொள்ளளவு என்றாலும் அது போதாது என்பதால் 4 கேன்களில் மேலும் 200 லிட்டர் ஏற்றப்பட்டது. திடீரென அரங்கசாமி அரக்கபரக்க கப்பலில் இருந்து படிகளேறிவந்தார். என்ன சர்மா, நமக்கு மட்டும்தான் இந்த படகு என்று சொன்னீர்கள், ஆனால் வேறு சிலரும் இருக்கிறார்களே என்றார். அதிர்ந்துபோனேன். கேப்டனிடம் கேட்டபோது அவர்கள் பாடகர்கள் என்று சொன்னார். அரங்கசாமி ஆசுவாசமானார். பாடகர் என்றால் ஜிப்பா, வேஷ்டி, சந்தனப்பொட்டு, ஜவ்வாது என்று நினைத்திருந்திருப்பார். ஒரு சோனியான பெண்ணும், அடியாள் போன்ற ஒரு உருவத்தையும் பாடகர்களாக அவர் நினைத்துப்பார்த்திருக்க முடியாது.

கேப்டன் சீக்கரம் ஏறுங்கள், நேரமாகிறது என்று விரட்டிக்கொண்டிருந்தார். எனக்கு என்ன ப்ரச்சனை என்றே புரியவில்லை. நேரமானால் என்ன என்று கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் போலீஸ், செக்போஸ்ட் என்று ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தார். மீண்டும் ஒருமுறை 17 வரை எண்ணிப்பார்த்த பிறகு படகு மெதுவாக ரீங்கரித்தபடி கிளம்பியது. பூரியும் இட்லியும் காலை உணவாக பொட்டலம் கட்டி வைத்திருந்தார்கள் வைத்திருந்தார்கள். யாரும் இட்லியைத் தொடவே இல்லை. சூடாக ஒரு காப்பி பரிமாரப்பட்டது. இந்தப்படகு பெரும்பாலும் பட்டுசீம எனும் இடத்தில் இருந்தே தொடங்கும். எங்களுக்காக சிறப்பு அனுமதியின் பேரில் ராஜமண்ட்ரியில் இருந்து புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அனைவரும் மேலே சென்றபிறகு நானும் க்ருஷ்ணனும் கேப்டனோடு பயணத்திட்டம் குறித்து விவாதித்துக்கொண்டிருந்தோம். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு சீக்கரம் தேவிப்பட்டினத்தைக் கடந்துவிடுவது என்று முடிவு செய்தோம். நடுவில் எங்கும் நிறுத்தாமல் சென்றுவிடுவது, வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றார் கேப்டன். தேவிப்பட்டினத்தில் ஒரு போலீஸ் செக்போஸ்ட் உண்டு. அதில் அனைவரது பெயரையும் எழுதி அனுமதி பெற்ற பின்னரே செல்லமுடியும்.

கப்பலின் முன்னால் கிடந்த கயிறுகளில் நின்று சிலர் வழுக்கி விழுந்தார்கள். மேலே யுவன் அவரது அமெரிக்க உடையிலும் பாதியைக்களைந்து கவர்ச்சியாக தோற்றமளித்தார். பொதுவாகச்சென்ற உரையாடல் பாடல்களின் பக்கம்திரும்பியது. மாற்றி மாற்றி பாடல்கள் பாடத்தொடங்கினோம். இருவரும் இணைந்து பொன்னொன்று கண்டேன் பாடலை பாட முயற்சித்து முடிவில் யுவனே பாடி முடித்தார். எனக்கு பாடல் வரிகள் தெரியாது. யுவன் ஒரு அற்புதமான பாடகர். நல்ல எனர்ஜி உள்ள மனிதர். அவரைச்சுற்றி இருப்பவர்களுக்கெல்லாம் அது பரவுவது அசாதாரணமாகத்தெரியும். என்ன அவருக்கு ஒரு நாளைக்கு சுமார் 10-12 மணிநேரத் தூக்கம் அவசியம்.

ஏற்பாடுசெய்த பாடகர்கள் தேவையில்லை அவர்கள் வேறு எதற்கு என்று சிலர் ஆதங்கப்பட்டார்கள். கீழிருந்து நாங்கள் பாடுவதைக்கேட்ட அவர்களுக்கு இயல்பாகவே இசைக்கலைஞர்களுக்கு இருக்கும் ஒரு உத்வேகம் உந்தித்தள்ள மேல்தளத்திற்கு டேப்பு வாத்தியம் சகிதம் வந்துவிட்டார்கள். அவர்களோடு யுவன் பாடல்களால் ஒரு துவந்த யுத்தமே நிகழ்த்தினார். டாக்டரும் இணைந்துகொண்டார். எனக்கு டேப்பினோடு பாடும் பாடல்கள் எதுவும் தெரியாது என்று ஒதுங்கிவிட்டேன். இருந்தாலும் விடாமல் என்னையும் ஒரு பாடல் பாடவைத்தார்கள். சிரிப்பும் கும்மாளமுமாக மேல்தளம் அதிர்ந்தது. ஒரு மூன்று மணிநேரம் கோதாவரியைப் பார்த்துக்கொண்டும், இசையை கேட்டுக்கொண்டும் கழிந்தது.

மதிய உணவு மேலேயே பரிமாரப்பட்டது. மேலதிகமாக சிக்கன் ஏற்பாடாகியிருந்தது. பலர் கண்ணில் நீர். அது உணவைப்பார்த்தாலே பற்றிக்கொள்ளும் காரத்தினால் என்று புரிய மாலையானது. போலவரம் என்னும் ஊரில் ஏற்பாடு செய்திருந்த மெத்தைகளும் தலையணைகளும் போர்வையும் ஏற்றப்பட்டது. பாடகர்கள் அங்கேயே இறங்கிக்கொண்டார்கள். தேவிப்பட்டிணம் சேரும்போது மாலை 4:30 ஆகிவிட்டிருந்தது. போலீஸ் துணை ஆய்வாளர் படகை இழுத்துக்கட்டிவிடு நேரமாகிவிட்டது என்று கூறிவிட்டார். கேப்டன் அவருடன் பேசி ஒரு 300 ரூபாய் தள்ளினார். படகு தேவிப்பட்டினத்தைக் கடந்து மெதுவாக முன்னேறியது. இனி நம் இஷ்டம்தான் எங்கு வேண்டுமானாலும் படகை நிறுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

யுவன் காலையில் இருந்து குளிக்கவேண்டும் என்று அதகளம் பண்ணிக்கொண்டிருந்தார். அவருக்கும் அனைவருக்கும் கோதாவரியில் நனையவேண்டும் என்று தோன்றியது. படகை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு நீரில் இறங்கினோம். கேப்டன் மீன் இருக்கிறதா என்று கடந்துசெல்லும் ஒவ்வொரு சிறு படகாக நிறுத்தி கேட்டுக்கொண்டிருந்தார்.

குறிப்பு: கேப்டனின் இயற்பெயர் ஷேக் அகமது அலி, ஆனால் அழைப்பது சம்தானி என்ற அவரது முன்னோரின் பெயர்கொண்டு. அவர் அந்த படகின் ஒரு பங்குதாரரும் கூட. படகை அவரும் அவரது பாய்ஜானும் சேர்ந்து கட்டியதாகச்சொன்னார். போலவரம் அவரது சொந்த ஊர். கங்கராஜு, ராம்பாபு என இருவர் உதவிக்கு. சம்தானியின் மகனும், சமையற்காரரும் உண்டு. மொத்தம் எங்களது க்ரூ சம்தானி, அவரது மகன், கங்கராஜு, ராம்பாபு, சுக்கான் பிடிப்பவர், சமையற்காரர், இஞ்சின் ஆபரேட்டர் என்று 7 பேர்.

கோதாவரி பயணம் – விஷ்ணுபுரம் வட்டம் – 1

ஈரோட்டில் நண்பர்கள், க்ருஷ்ணன், விஜயராகவன், மோகனரங்கன், சிதம்பரம், தங்கமணி ஆகியோர் கூடி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது பல வருடங்களுக்கு முன் நான் சென்ற ஒரு கோதாவரி பயணம் குறித்து பெருமையடித்துக்கொண்டிருந்தேன். க்ருஷ்ணனும் விஜயராகவனும் இதுபோன்ற ஒரு பயணத்தை நாம் ஏன் மேற்கொள்ளக்கூடாது என்று கேட்டார்கள். அத்தோடு நில்லாமல், ஆசானையும், அரங்கசாமியையும் அழைத்து அதை உறுதிப்படுத்திவிட்டார்கள். நான் திருதிருவென விழிக்கத்தொடங்கினேன். நான் ஆந்திரத்தில் வாழ்ந்திருந்த காலத்தில் என்னால் இதை மிகச்சுலபமாக ஏற்பாடு செய்திருக்க முடியும். ஆனால் இப்போது நான் ஒரு நாடோடியைப்போல திரிந்துகொண்டிருப்பது என்னால் இதுமுடியாது என்ற ஆயாசத்தையே தந்தது.

கோதாவரி எனக்கு எப்போதுமே மிக நெருக்கமாக உணரக்கூடிய நதி. என் வாழ்க்கையில் மிகவும் நெருக்கடியான காலகட்டங்களில் தாயைப்போல என்னை அரவணைத்துக்கொண்டது கோதாவரி. மன உளைச்சல்களில் சோர்ந்திருந்தபோது மடிகொடுத்தது கோதாவரி. மீண்டும் கோதாவரியில், அதுவும் நான் மிகவும் மதிக்கும் என் ஆசானுடன், எனக்கு மிகவும் நெருக்கமாக உணரும் நண்பர்களுடன் என்றபோது, கட்டாயம் போயாகவேண்டும் என்று முடிவுசெய்துகொண்டேன்.

இருக்கும் வாய்ப்புக்களையும், இடங்களையும் க்ருஷ்ணனுக்கு தொலைபேசியில் சொன்னேன். அரங்கசாமிக்கும், விஜயராகவனுக்கும் மெயிலில். பல முடிவுகள் எடுக்கப்படவேண்டியிருந்தது, அனைத்தையும் க்ருஷ்ணன், அரங்கசாமி ஆகியவர்கள் விவாதித்து முடிவு செய்தார்கள். நான் எனது ஆந்திர நண்பனிடம் உதவி கேட்டேன். அவன் “ஒரு தவறான பேச்சும் வராது” என்று நம்பிக்கை கொடுத்தான். பயணத்திற்கான அத்தனை ஏற்பாடுகளும் செய்து முடித்துவிட்டதாக தொலைபேசியில் தெரிவித்தான்.

திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு ரயிலில் வந்து இறங்கினேன். முன்பணம் செலுத்திய ஆட்டோவில் நேராக எனது சகோதரி வீட்டிற்குச்சென்று தங்கினேன். குழந்தைகளோடு பொழுதுபோனது. அவளது பெண் சில பாடல்கள் பாடிக்காட்டினாள். மாலை மழை தொடங்கியது. பதினோரு மணிக்குத்தான் ரயில் என்றாலும் ஒரு ஆட்டோ பிடித்து செண்டரல் டவர்ஸ் ஹோட்டலை அடைந்தேன். அப்போதே அங்கே ஜமா களைகட்டியிருந்தது. மொத்தத்தில் க்ருஷ்ணன், அரங்கசாமிக்கு மட்டுமே முழு பயணத்திட்டம் தெரியும். விஜயராகவன் மோகனரங்கனுக்கு ஓரளவு தெரியும். மற்றவர்களுக்கு “செண்ட்ரல் ஸ்டேஷனுக்கு வந்து சேருங்கள் 11 மணிக்கு ரயில்” என்ற கட்டளை மட்டுமே அனுப்பப்பட்டிருந்தது. எனக்கு திக்கென்று இருந்தது. 17 பேர், விதவிதமான எதிர்பார்ப்புக்கள், பயணத்தில் திட்டவட்டமான திட்டம் என்று எதுவும் இல்லை.

ஒவ்வொருவராக வந்து சேர்ந்துகொண்டிருந்தார்கள். ஒரு 8 பேர் ஹோட்டலுக்கு வந்திருந்தோம் மற்றவர்கள் நேராக ஸ்டேஷனுக்கு வருவதாக ஏற்பாடு. சிறில் தொலைபேசியில் அழைத்திருந்தார், “சர்மா, எனக்கு படகு பயணம் ஒத்துக்கொள்ளாதய்யா, வாந்தி வரும்” என்று சொன்னார் அதனால் கப்பல் டாக்டர் வேணுவிடம் அனைத்து மருந்தும் வாங்கி ஸ்டாக் வைக்கச்சொல்லி க்ருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார்.

இரவு சாப்பிடுவது என்று அனைவரும் கீழே இறங்கினோம். நான் திருவல்லிக்கேணியில் உள்ள காசிவிநாயகா மெஸ்ஸில் சாப்பிடுவோம் என்று ஒவ்வொருவரையும் ஏற்றுக்கொள்ளச்சொல்லி மன்றாடினேன். கடைசியில் பக்கத்திலிருந்த வசந்த பவனில் உணவு என்று முடிவானது. ஆசானும் க்ருஷ்ணனும் பழ உணவு தேடி வெளியே கிளம்பினார்கள், மழை வலுத்ததால் அவர்களும் வசந்த பவனிலேயே அடைக்கலமானார்கள். இரவு உணவு முடித்து மீண்டும் அறையில் பேச்சு ஆரம்பித்தது.

அரங்கசாமி ரயில் நிலையத்திலிருந்து அழைத்தார்.சந்திரகுமாரும் அவரும் அங்கே இருப்பதாகவும், ரயில் 11 மணிக்கு அல்ல, 10 மணிக்கு என்று சொன்னார்கள். அடித்துப்பிடித்து கிளம்பிப்போனபோது, ரயில் 11 மணிக்குத்தான் என்று தெரிந்தது, வருகையைப்பார்த்து அதை புறப்பாடு என்று புரிந்துகொண்டதால் வந்த குழப்பம் என்று சந்திரகுமார் பின்னர் தெரிவித்தார். மழை அடித்துத்துவைக்கத்தொடங்கியது. ரயில் ப்ளாட்பாரங்களில் தற்காலிக அருவிகள் உற்பத்தியாயின.

அனைவருக்கும் போன்போட்டு ஒன்றாக கூட்டினார்கள். 17 பேரும் அவரவர் பெயரை பெட்டிகளில் முன்பதிவு அட்டையில் தேடும் செயற்திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு கலைந்து திரிந்துகொண்டிருந்தோம். வினோத் இன்னும் வந்துசேரவில்லை அவரிடம் தான் டிக்கட் இருக்கிறது என்று சொன்னார்கள். அப்போது எப்படி 17 பேரும் இருப்பதாக நம்பினோம் என்று தெரியவில்லை. அப்போது முடிவு செய்துகொண்டேன், கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் 17 பேரும் இருப்பதை எண்ணிக்கொண்டே இருந்தேன், அடுத்த 4 நாட்களும்.

ரயில் பெட்டிகள் கும்மிருட்டாக இருந்தது. அத்தனை மழையிலும் வியர்த்து வழிந்தது. ரயில் புறப்படுவதாகத்தெரியவில்லை. அனைவரும் பெட்டியில் ஏறி அமர்ந்திருந்தோம். ரயில் 12 மணிக்கு கிளம்பலாம் என்று தீர்மானித்து மெதுவாக உருண்டது.

ஜெயதீர்த் மேவுந்தி & அபிஷேக் ரகுராம்

நண்பர் லலிதாராம் சிலநாட்களுக்கு முன் பேசும்போது சென்னையில் நடந்த ஒரு ஜுகல்பந்தி நிகழ்ச்சி குறித்து சொன்னார். ஜெயதீர்த்தும், அபிஷேகும் இணைந்து “மிரட்டிய” அற்புதம் என்றார். கேட்கக்கிடைக்கவில்லை.

சுமார் 10 வருடங்களாகவே அபிஷேகின் ரசிகன் நான். பேசும் எல்லாரிடமும் அவரைக்குறித்து சிலாகித்து நான் மிகவும் எதிர்பார்க்கும் ஒரு பாடகர். தற்காலத்தில் “கொள்ளாம்” எனத்தக்கவர் இவர் ஒருவரே என்றும் சொல்வதுண்டு.

ஜெயதீர்த் இப்போதைய புதிய இணைப்பு எனக்கு. அபாரம், அற்புதம் என்று வார்த்தைகளுக்குள் அடைக்க முடியாத திறமை.

ரோனு மஜும்தாருடன் இணைந்து ஜெயதீர்த் பாடிய ஒரு ஜுகல்பந்தி மிகவும் அற்புதமாக இருந்தது. சுட்டி கீழே.

 

ஜெயதீர்த் : http://en.wikipedia.org/wiki/Jayateerth_Mevundi

%d bloggers like this: