கொலவெறி

இந்த பாடலை நான் கேட்ட நிமிடத்தில் இருந்து நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டிருக்கிறேன். சிரிப்பை இன்னும் மேலே மேலே என்று கொண்டுபோய்க்கொண்டே இருக்கிறார்கள். என்சாய்..!!

ஒரிஜினல் கொலவெறி: http://www.youtube.com/watch?v=YR12Z8f1Dh8

சாஸ்த்ரீய கொலவெறி: http://soundcloud.com/mohank/kolaveri-subhapantuvarali

ஆல்-டைம் கொலவெறி – http://www.youtube.com/watch?v=FmPmdeXAjsA

 

 

 

 

 

Advertisements

ஸ்ருதி பேதமும் பிட்ச் ஷிஃப்டும்

இது குறித்து விளக்கமாக எழுதவேண்டும் என்றுதான் முதலில் நினைத்தேன். பின்னர் இதோடு நிறுத்திக் கொள்வோம் என்று முடிக்கிறேன். சமீபத்தில் ஷாஜி முதல்முறை நேரடியாக எழுதிய கட்டுரை ஒன்றை படிக்க நேர்ந்தது.  நீங்களும் படிக்கலாம் : http://www.uyirmmai.com/contentdetails.aspx?cid=4327

 சுருதிபேதம் – Pitch Shift என்று குறித்திருந்தார். ஆங்கிலத்தில் சரியாகத்தான் இருக்கிறது. (இதை ஸ்கேல் ஷிஃப்ட் என்றால் இன்னும் சரியாக இருக்குமோ?)தமிழில் சுருதி பேதம் என்பது பெரும்பாலும் க்ரஹ பேதத்தையே குறிக்கப்பயன்படுகிறது. க்ரஹபேதம் இன்னும் சிக்கலான விஷயம். ரஹ்மான் பயன்படுத்துவது போன்ற Pitch Shift நமது சங்கீதத்தில் பயன்படுத்தப்படுவதில்லை. அது மேற்கத்தைய இசை வழக்கம் மட்டுமே.
அதற்கு எதாவது புது தமிழ்ச்சொல்லை கண்டெடுத்துக்கொடுத்தால் நலம்.

சொல்வனம் – பாலேஷ் – சுகா

நான் சமீபத்தில் படித்த மிக நல்ல கட்டுரை. கட்டாயம் படிக்கவேண்டிய கட்டுரையும். சொல்வனத்திற்கு சபாஷ் சொல்லலாம். சுகா பேட்டி எடுத்திருப்பதால் இளையராஜா குறித்த விஷயங்கள் கொஞ்சம் ஓவர் டோஸ் தான். ஆனாலும், தகும்.

http://solvanam.com/?p=13585

 

இசை விமர்சனம்

இசை விமர்சனம் என்பது காதுகளுடைய எல்லோராலும் செய்யப்படுவது. அது இசைகுறித்து பேசவேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. அவ்வப்போது சில இசை தொடர்பான குறிப்புகள் வந்தாலே அது இசை விமர்சனம் என்ற தகுதியை அடைந்துவிடும். இதற்கு எந்த விதமான இசை அனுபவமும், இசை கேட்கும் பழக்கமும் அவசியமில்லை என்று சமூகம் உணர்ந்தே இருக்கிறது. பெரும்பாலான இசை விமர்சனங்கள் மிகப்பெரும்பாலும் மத்திய ஆசியக்காரர்களால் எழுதப்படுகிறது. இவர்கள் தான் கேட்டவற்றையும், கேட்காதவற்றையும் பற்றிக்கூட எழுதுவதற்கு உரிமம் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள். இசை விமர்சனங்களின் ஊற்றுமூலம் என்பது சென்னை மயிலாப்பூர், தி.நகர், மாம்பலம் பகுதியில் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. உலகப்ரசித்தி பெற்ற மாம்பலம் கொசுக்கள் இந்த ஊற்றுகளிலேயே உற்பத்தியாகின்றன என்ற கூற்று சற்றே மிகையாக இருக்கலாம். இந்த விமர்சனங்கள் பெரும்பாலும் சாய்வு நாற்காலியை சுவர்கமாக எண்ணும் சம வயதுக்காரர்களால் படிக்கப்படுகின்றன. இசை விமர்சனங்களில் காலப்போக்கில் பலவகைகள் ஏற்பட்டிருக்கின்றன. அவற்றை தெரிந்துகொள்வது நாம் அவைகளை படித்து உய்ய வழிகோலும்.

இசைவிமர்சனங்கள் பொதுவில் இரண்டு வகைப்படும். பேசப்படும் விமர்சனம், எழதப்படும் விமர்சனம் என்பவை அவை. பேசப்படும் விமர்சனத்தில் பேசுவதுடன் பாடியும், ஆடியும், முக பாவங்களிலும் இசை விமர்சிக்கப்படும் என்பது ஒரு சாதகமான விஷயம். உடனடி விமர்சனம் என்ற வகையை கச்சேரி நடக்கும்போதே சுடச்சுட பக்கத்திலிருப்பவருக்கு தெரிந்தவராயிருந்தாலும், தெரியாதவராய் இருந்தாலும் பரிமாரப்படும். “கொன்னுட்டான்”, “பின்னறான்” ,”வெளுக்கறான்” என்று கசாப்பு, நெசவு, வண்ணான் தொழில் சார்ந்த வார்த்தைகளும் இசைத்தொடர்பான வார்த்தைகளாகவே கருதப்படுகின்றன. “இவன் வாசிக்கறது தவுலா இல்ல ம்ருதங்கமா?” “வயலினுக்குள்ள பூனை பதுங்கியிருக்கா?” என்பதுபோன்ற நகைச்சுவைகளும் தெறிக்கும். இவ்வகை நகைச்சுவை விமர்சனங்கள் பெரும்பாலும் சபா கேண்டீன்களில் நிகழ்வதாகச் சொல்கிறார்கள். கச்சேரி முடிந்தவுடனும் வெற்றிலை போட்டுக்கொண்டு தெருவில் மூன்று பேர் துணைவர ஆகாயத்தை நோக்கி பேசிக்கொண்டே போவதும் உண்டு. இவ்வகை விமர்சனத்தினை எதிர்கொள்ளும்போது பக்கத்திலிருப்பவரின் தொடைக்கும், முதுகிற்கும் கவசங்கள் அணிந்திருக்கவேண்டும் என்பது அனுபவ அறிவு.

எழுதப்படும் விமர்சனங்கள் பெரும்பாலும் வாரந்திரிகளிலும், சிலசமயம் நாளிதழ்களிலும் காணக்கிடைக்கிறது. மிகச்சமீபகாலமாக இணையத்திலும் பெருவாரியாக எழுதப்படுகிறது. இவ்வகை விமர்சனங்கள் எழுத்தாளர்களாலும், எழுத்தாளரல்லாதோராலும் ஒரே மாதிரியாகவே எழுதப்படுகிறது. இசை தெரியாத எழுத்தாளர் எழுதுவது நல்ல விமர்சனமா அல்லது எழுதத்தெரியாத இசை அறிஞர் எழுதுவது சிறந்த விமர்சனமா என்ற விவாதம் அவ்வப்போது எழுவதுண்டு. குருட்டுக் குதிரையில் எந்தக் குதிரை நல்ல குதிரை என்று உடனடி விமர்சனக்காரர்கள் பதிலடி கொடுக்கிறார்கள்.

இந்த எழுத்து விமர்சனத்தில் முதலாவதாக வருவது தயிர்வடை விமர்சனம். முதலிடத்தை பிடிப்பதும் இதுவே. இது சபா கச்சேரிகளைக்குறித்ததாக இருந்தாலும், கேண்டீனில் தொடங்கி, கேண்டீனில் முடியும் வகையில் எழுதப்பட்டிருக்கும். ரசிகப்ரியாவும் ரவாதோசையும், ஆந்தோளிகாவும் அடை அவியலும் போன்ற கவர்ச்சிகரமான ஒப்புவமைகள் தென்படும். கவி காளமேகத்தையும் மிஞ்சும் வண்ணம் இரட்டுற மொழிதலில் திறமை காட்டுபவர்களாக, இவர்கள் எழுதுவது ஜுஜாவந்தி பற்றியா அல்லது பாசுந்தி குறித்தா என்று அறியா வண்ணம் ஒட்டி வருவது மிகவும் சிறந்த விமர்சனமாக கருதப்படுகிறது. இதில் முன்னோடியான சிலர், தயிவடையையும் தோடியையும் ஒப்பிட்டு எழுதியிருந்ததன் சிறப்பை ஒட்டி தயிர்வடை விமர்சனம் என பெயர்காரணம் கூறுவர். ஒருநாள், கரஹரப்ரியா ராகம் எத்தனை கிலோ காராபூந்திக்கு சமம் என்று நடந்த விவாதத்தில் பலத்த கருத்து வேறுபாடு ஏற்பட்டு சட்டுவக்கரண்டியால் சிலரது மண்டை உடைக்கப்பட்டுள்ளது வரலாறு.

தயிர்சாத விமர்சனம் என்பதும் தயிர்வடை விமர்சனத்தை ஒட்டியே வருவது. இது பருப்புசாத விமர்சனம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வகை விமர்சனங்கள் தங்கள் வடிவத்திலும் கருத்திலும் தயிர்வடையை ஒத்திருந்தாலும் மொழியினால் வேறுபாட்டை அடைவது. சுமார் பத்து முப்பது வருஷங்களுக்கு முன்னால் தஞ்சை, கும்மோணம் பகுதிகளில் பேசிக்கொண்டிருந்த, இப்போதும் அயோத்யா மண்டபம் அருகில் அடிக்கடி கேட்கக்கிடைக்கும் மொழியுச்சம் அது. சமஸ்க்ருதமா, தமிழா அல்லது பரிபாஷையா என்று புரியாததனால் மொழியியல் வல்லுனர்கள் கூட குழப்பிப்போயிருக்கிறார்கள். இருந்தாலும் இது இன்னமும் ஆனந்த விகடன், குமுதம் போன்ற இதழ்களால் புரவப்படுகிறது. இரு மத்திய ஆசியக்காரர்கள் பேசிக்கொள்வது போல இருப்பது இதன் சிறப்பு. உடனடி விமர்சனத்தையே எழுத்தில் பார்ப்பதுபோல இருக்கும் இது. “என்னங்கானும், பிள்ளையாண்டான் என்னமா பாடறான் பார்த்தேளோனோ?”, “ஹெ ஹெ ஹெ, எல்லாம் காவிரித் தண்ணிய்யா”, “கண்ணாடிய கழற்றிட்டு பார்த்தா சாக்ஷாத் மஹாவிஷ்ணுவே வந்து எதிர்ல நின்ன மாதிரின்னா இருக்கு” என்பன போன்ற சொற்றொடர்கள் அடிக்கடி தென்படக்கூடும். காலம் மாறிவிட்டாலும், அணா, பைசா போய் ரூபாய் வந்து, அதுவும் போய் கிரடிட் கார்டு வந்த பின்னும் இவர்கள் ஆயிரம் வராகன், பதினாயிரம் வரகன் என்றே குறிப்பிடுவார்கள். ஒரு வராகனுக்கு எத்தனை ரூபாய் என்பது இன்னமும் தெளிவாகவில்லை. இவ்வகை விமர்சகர்கள் பெரும்பாலும் ஃபார்மல் பேண்டும், ஸ்போர்ட்ஸ் ஷூவும், லீ டீஷர்ட்டும் போட்டு மழமழ வென சவரம் செய்த முகத்துடன் காணப்படுவது வழக்கம். சற்றே இவர்கள் அருகில் போனால் நெய்விட்ட பருப்பு சாத வாசனையும் வருவதாக சிலர் சொல்கிறார்கள்.

செய்தி விமர்சனம் என்ற வகையைச்சார்ந்த விமர்சனங்கள் பெரும்பாலும் நிருபர்களாலும், செய்தி சேகரிப்பவர்களாலும் குறிப்புகள் எழுதப்பட்டு ஆசிரியரின் பெயரில் வெளிவருபவை. சமீபத்தைய உதாரணமாக தினமலரில் வந்த விமர்சனங்கள் இதன் சிறந்த எடுத்துக்காட்டு என்று சொல்கிறார்கள். இதில் ஒரு ஃபார்ம் கொடுத்துவிடுவார்கள், அதில் கோடிட்ட இடத்தை நிறப்பினால் அது ஒரு விமர்சனமாகிவிடும். கிட்டத்தட்ட 5 நிமிடங்களுக்கு ஒரு விமர்சனம் என்ற வேகத்தில் இது எழுதப்படுவதால் செய்தித்தாள் அச்சு இயந்திரமே மிரண்டுபோனதாகவும் சொல்கிறார்கள். இது மிகவும் முன்னேறிய வகை விமர்சன்மாகவும், உடனடி விமர்சனத்திற்கு போட்டியாகவும் இருப்பதாக சொல்லப்படுகிறது. உதாரணமாக, —- கச்சேரிக்கு போயிருந்தேன். ——— ராகத்தில் அமைந்த ———- பாடலை அவர் தொடங்கியவுடனேயே கச்சேரி களை கட்டிவிட்டது. ———- ராகத்தில் கச்சேரியை தொடங்கினால் களை கட்டாமல் இருக்குமா என்ன? இவர் இன்று பாடிய ——– ராகத்துக்கு ——- ” என்று எழுதலாம். அந்தந்த கோடிட்ட இடத்தை மட்டும் நிறப்பினால் செய்தி விமர்சனம் ரெடி.

வள்ளல் விமர்சனம், பெரும்பாலும் இன்னமும் தம்மை ஜமீன் வாரிசாகவே நினைத்துக்கொண்டிருக்கும் சில நிலவுடமைக்காரர்களால் எழுதப்படுவது. இன் மொழி பெரும்பாலும் தயிர்வடை விமர்சனத்தை ஒத்திருந்தாலும், எந்த பாடலுக்கு எதை கொடுத்தால் தகும் என்பதே இதன் முக்கிய சாராம்சமாக இருக்கும். அவர் பாடிய தோடிக்கு கோடி கொடுக்கலாம். இவர் பாடிய கல்யாணிக்கு மாம்பலத்தையே எழுதிவைக்கலாம். இந்த வரமுக்கு ஆயிரம் வராகன். இது பத்துகாசு கூட பெறாது என்று எல்லாவற்றையும் தரம்பிரித்து ஆராய்ந்து மதிப்பளிப்பார்கள். இவர்கள் செட்டியார்களிடமிருந்தும், சேட்டுகளிடம் இருந்தும் ஞானம் பெற்று இந்தக்கலையை மேலும் நுண்மைப்படுத்தியிருக்கிறார்கள் என்று சொல்கின்றனர்.

வரலாற்று/பக்தி விமர்சனம் என்பது இசையைத்தவிர அதில் குறிப்பிடப்பட்ட பாடலில் தொடக்கம் எடுத்துக்கொண்டு அவ்வூரின் வரலாறு கோவில் என்று தலயாத்திரை போல எழுதுவதாகும். இன்று கச்சேரியில் மெயின் சாவேரியில் “கர்மமே பலவந்த மாயே தல்லி” என்ற பாடல். நாகப்பட்டினம் நீலாயதாக்ஷி அம்மனைக்குறித்தது. நாகப்பட்டினம் தமிழகத்தின் கடற்கரையோர சிறு நகரம், அட்ச ரேகை தீர்க ரேகை போன்ற புள்ளி விவரங்களையும், அங்கிருக்கும் கோவிலில் எத்தனை தூண்கள் என்பதிலிருந்து கோவில் பூசாரியின் செல்ஃபோன் நம்பர் வரை தொகுத்து எழுதப்படும். இதில் இசை ஒரு காரணமாகவே இருந்தாலும் காரணியாவதில்லை. பெரும்பாலும் சக்தி, பக்தி போன்ற இதழ்களில் இத்தகைய இசைக்கட்டுரைகள் காணப்படும். இவைகளில் அங்கங்கே இங்கே கண்ணீர் விடவும், இங்கே ஆஹா என்று சொல்லவும் போன்ற குறிப்புகளும் அடைப்புக்குள் வாசகர் நலம் கருதி கொடுக்கப்பட்டிருக்கும். ருத்ரப்பட்டினம் ப்ரதர்ஸ் பாட்டு என்று வந்தால் அதிலிருந்து லீட் எடுத்துக்கொண்டு ருத்ரப்பட்டினம் ஊரின் வரலாற்றை அலசுவது மற்றொரு பரிமானத்தை அளிக்கும்.

ஞான விமர்சனம் என்பதில் எப்போதுமே ஒருவித பாசாங்கற்ற தன்மை தெரியும். இவ்வகை விமர்சன்ங்களில், “ரிஷபத்தை இன்னும் ரெண்டு ப்ரமானச்சுத்து இறக்கி பிடிச்சுருக்கனும்”, “சதுர்தண்டிப்ரகாசிகால 43ஆம் பக்கத்துல சொல்லிருக்கான், த்ரிகாலம் பண்ணும்போது சதுஸ்ரதி ரிஷபம் நம்ம காதுக்கு அந்தர காந்தாரமாத்தான் கேக்கும்ன்னு”, “ப்ரத்யாகத கமகத்தை தாட்டு கமத்தோடு சேர்த்து பிடித்தால் தோடி விளங்குமான்னேன்”  என்பதுபோன்ற சொற்றொடர்கள் அநாயாசமாக பயன்படுத்தப்படும். இதில் எழுதுபவரும் சரி, படிப்பவரும் சரி அதில் என்ன சொல்லியிருக்கிறது என்று அனாவசியமாக குழம்புவதில்லை. விமர்சனத்தின் நோக்கம் விமர்சனம் மட்டுமே என்று மேலும் மேலும் தொழில்நுட்ப ரகசியங்களை அடுக்கிக்கொண்டே இருப்பார்கள். இதற்காகவென்றே வீட்டில் நூறு இருநூறு புத்தகங்களை பழைய புத்தகக்கடைகளிலிருந்து வாங்கிப்போட்டிருப்பார்கள் என்றும் சொல்கிறார்கள். இவர்களை போஷிப்பதற்கென்றே சங்கீத மகாசபை வருடா வருடம் மிகப்பெரிய பொருட்செலவு செய்துவருகிறது என்றும் சொல்கிறார்கள். விலங்குப் பண்ணையில் வரும் ஸ்க்வீலரோடு இவர்களை ஒப்பிட்டு கவிஞர் காத்துவாயன் சாத்துவாங்கியதாகவும் தெரிகிறது.

வாழ்க்கை விமர்சனம் என்பது இசையை விட்டுவிட்டு அந்த இசைக் கலைஞனை குறித்து பக்கம் பக்கமாக பேசுவது. பற்பல சித்தாந்தங்களையும், கோட்பாடுகளையும் அலசி ஆராய்ந்து, இசைதான் கலைஞன் கலைஞன் தான் இசை என்ற அத்வைத ஞானத்தை அடைந்தவர்கள் எழுதும் விமர்சனங்கள் இவை. இதற்கு தூய அத்வைத மார்கத்தின் ஞான தரிசனமும் கட்டாயம் தேவை என்று சொல்கிறார்கள். இவற்றை எழுதுவதற்கு கஞ்சா, குடிபோதை, பெண்கள் போன்றவை குறித்த சரியான புரிதல் தேவையாகிறது. காட்டுக்கத்தலாக இருந்தாலும் அதிலிருந்து இசையையும், இசைக்கலைஞனது வாழ்வையும் பிரித்து எடுக்கக்கூடிய விசேஷ அன்னபக்ஷிகள் இவர்கள். இவர்கள்  இலக்கியத்திற்கும், இசைக்கும் நடுவில் ஒரு ஸ்டூல் போட்டு அமர்ந்திருப்பவர்களாவார்கள். இவர்களது கட்டுரைகள் சிற்றிதழ்களிலும், தனி புத்தகங்களாகவும் வெளிவரும். கடும் விமர்சனங்களுக்கும் இவர்கள் சற்றும் சளைத்தவர்களல்லர். சிலசமயங்களில் தடாலடியாக ஞான விமர்சனத்திலும் இவர்கள் இறங்கக்கூடும். ஆனாலும் மற்றவகை விமர்சனங்களை இவர்கள் ஒருபோதும் விமர்சனமாக கொள்வதில்லை. இவர்கள் கோஸ்ட் ரைட்டர்ஸ் போல கோஸ்ட் விவாதக்காரர்களையும் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

விமர்சன விமர்சனம் என்ற வகை மிகச்சமீபமாக பிரபலமாகி வருகிறது. தயிர்வடை, ஞான, செய்தி விமர்சகர்கள் இதை முன்னின்று நடத்துகிறார்கள். விமர்சகராக ஆசையுள்ளவர்களும், விமர்சனம் எழுத முடியாதவர்களும், விமர்சனம் என்பதே புரிதலின்மையின் உளரல்தானே என்ற உயர் தத்துவ தளத்தில் நிற்பவர்களும் சேர்ந்து முன்னெடுக்கும் வகையாக இது இருக்கிறது. இது சர்ச்சைகளாலும், சச்சரவுகளாலுமே பிரபலத்தை அடைந்தது என்று வரலாறு தெரிவிக்கிறது. இதை எழுதுவதற்கு தனி ஞானம் தேவையில்லை. எதிர்தரப்பு சொல்வது அனைத்தையும் மொத்தமாக மறுத்துவிட்டு, பின்னர் அதற்கான காரணங்களையும் கண்டுபிடித்து அதை மெருகேற்றி எழுதிவிட்டாலே போதுமானதாகிறது. தற்காலத்தில் இவ்விமர்சன முறையை சிறப்பாக கையாண்ட அனைத்து தரப்புமே கிட்டத்தட்ட சமநிலையை அடைந்து சமாதியாகிவிட்டார்கள் என்றும், மீண்டும் அடுத்த இசை விழாவிலோ, அல்லது புத்தகவெளியீட்டு விழாவிலோ இந்த விமர்சனமுறை மீண்டும் புத்துயிர் பெறலாம் என்றும் செய்திக்குறிப்புகள் கூறுகின்றன. இதற்கு தூய அத்வைத மார்கத்தில் கடும் எதிர்ப்பும், கோட்பாட்டு-நவீனத்துவ-பின்நவீனத்துவ ரீதியிலான தர்க்கங்களும் தயாராக இருப்பதாக கறுப்பு ஆடுகள் தெரிவிக்கின்றன. இவ்வகை விமர்சனங்கள் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும் இதை யாராலும் அழிக்கமுடியாது, இதை தாண்டித்தான் விமர்சனங்களின் தொடக்கப்புள்ளி இருக்கிறது என்று தீவிரமாக நம்புகிறோம் என்று தூ.அ.மா வின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

காலத்தின் கலைஞன்

இந்தியாவில் தனிமனித ஆளுமை வரலாறு என்பது ஒரு மிகை புனைவு மட்டுமாகவே இருந்துவருகிறது. தனிமனித ஆளுமை வரலாறூகள் பெரும்பாலும், நமக்குக்கிடைக்கும் தகவல்களை வைத்து கற்பனையில் அவற்றை விரித்து எழுதப்படுவதாகவே உள்ளது. இவற்றில், சுயபெருமிதங்களும், ப்ரச்சார நோக்கமும், சாதீய அணுகுமுறையில் திரிபுகளையும் முன்வைத்து, எந்தவித சான்றுகளும் இல்லாமல் எழுதப் படுபவையே மிகவும் அதிகமானவை. இவற்றில் தெளிவான தகவல் சித்திரங்களையோ, தளம் சார்ந்த அடிப்படை அனுபவமோ காணக்கிடைப்பதில்லை. மிகவும் அதிகபட்ச சான்றுகளாக நமக்குக் கிடைப்பவை, அவரைச் சார்ந்தவர்கள் எழுதிவைத்திருக்கும், அற்புதங்கள் நிறைந்த ஒரு அதிமானுட சித்திரத்தை அளிக்கும் ஒரு தொல்பிம்ப ஆராதனை குறிப்புகள் மட்டுமே.

ஒரு ஆளுமை வாழ்ந்த காலத்து பின்புலம் அறியாமல் அவரது வாழ்கையை புரிந்துகொள்ள இயலாது. ஒரு சமூகத்தில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மனிதர்களை தனி மனிதர்களாக மட்டுமே புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் வாழ்ந்த சூழலும், அவர்கள் வாழ்ந்த சமூகமும், அச்சமூகத்தை அவர் எதிர்கொண்ட விதமும் சார்ந்த அவரைக்குறித்த புரிதலே நமக்கு ஒரு உண்மையான சித்திரத்தை அளிக்கும். பல ஆளுமைகளின் சரித்திரம் அவர் வாழ்ந்த காலத்திற்கு வெகுநாள் கழித்தே எழுதப்படுகிறது அல்லது உருவாக்கப்படுகிறது. அது உள்நோக்கங்களுடன், விளைவுகளை உத்தேசித்து எழுதப்படுவது மட்டுமே. அப்போது அவற்றில் அதிமானுடத்தன்மைகளும், அமானுஷ்யங்களும், உயர்வு நவிர்ச்சிக் கதைகளும் சேர்க்கப்பட்டு, காலப்போக்கில் அதிகாரப்பூர்வமான வரலாராக ஒரு தரப்பால் முன்வைக்கப்படுகிறது. இத்தகைய பல சரித்திரங்கள் நமக்கு வாசிக்கக்கிடைக்கின்றன. ஒற்றைப்படையான புரிதலுக்கு இவை வழிவகுக்கிறது.

நமது சமூகத்தில் பெரும் ஆளுமைகள் குறித்த சித்திரம் என்பது தொன்மம் சார்ந்த ஒன்றாகவும், தத்துவப் பார்வை சார்ந்த ஒன்றாகவும் மட்டுமே நிலைநிறுத்தப்படுகிறது. இவை இரண்டிலும் ஒட்டு மொத்த மானுடம் குறித்த ஒரு பிம்பமே மேலெழுந்து வருகிறது. அனால் ஆளுமை வரலாறு என்று குறிப்பிடும்போது திட்டவட்டமாக அவ்வாளுமையை நிறுவவேண்டிய கட்டாயம் இருப்பதால், குழுவுணர்வுள்ள இந்தியாவில் இது சாத்தியமாகாமல் போனது என்று சொல்லலாம். கலாசார பெருமிதத்திற்கும், சமூக நெறிப் படுத்துதல்களுக்கும், தத்துவ-தொன்மம் சார்ந்த ஒரு சரித்திரம் அவசியமாகிறது. ஆனால், இவை நேரடியான அம்மனிதனைத் தவிர்த்து அவனது படைப்புக்களையும், அவன் ஒட்டுமொத்த வரலாற்றினை ஒட்டி ஒழுகிய அல்லது எதிர்த்து நின்ற பகுதிகளையும் மட்டுமே எடுத்து உருவாக்கப்படுகிறது. எனவே, தனி ஆளுமைகள் குறித்த இந்திய பார்வை என்பது பயனுள்ளதாக இருந்தாலும், வரலாற்றுச் சான்று அடிப்படையில் குறைபட்டதாகவே இருக்கிறது.

வரலாறு என்பது தனி நிகழ்வல்ல, அது ஒரு சமூகத்தினால் அதன் அனைத்து தரப்புகளாலும் ஒட்டுமொத்தமாக முன்னெடுக்கப்படுவது. ஒரு ஆளுமை சமூகத்தினின்று எழுந்து வருபவனேயன்றி, தனி தளத்தில் உருவாகி இயங்குபவனல்ல. எனவே அவனைக்குறித்த சரியான பார்வைக்கு பல பரிமாணங்களிலும் அணுகி, அதில் ஒரு புள்ளியிலிருந்து நாம் விரித்தெடுத்துக்கொள்வதே நம்முடைய-அவரது வரலாறு. அத்தகைய என்னுடைய தனிப்பட்ட விரிவு ஒன்றை இங்கே பதிவு செய்கிறேன்.
தென்னிந்தியா 1700 களில் பல்வேறு சிற்றரசுகளாலும், ப்ரெஞ்சு, ஆங்கிலக் காலனிகளாலும் துண்டாடப்பட்டு, அரசியல் குழப்பங்களும், சூழ்ச்சிகளும், துரோகங்களும் நிரம்பி வழிந்த காலகட்டமாகும். இந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள் அனைவருமே இந்த அரசியல் சமூக சூழல்களில் அகப்பட்டு அதிலிருந்தும் தமக்கான வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்களே. ஹைதர் அலி, திப்பு சுல்தான், கிழக்கிந்திய கம்பெனி, ப்ரெஞ்சு காலனிகள், கட்டப்பொம்மன், மருது, செவத்தையா போன்றவர்கள் அதிகாரம் செலுத்திவந்த காலம். கலகங்களும் கலவரங்களும், பெருங்கொள்ளைகளும் நிகழ்த்தி படைகள் நடத்த நிதி சேர்த்த காலம் இது. தென்னிந்தியா மாபெரும் அரசியல், சமூக புரட்சிக்குள்ளான காலகட்டம் இது.

கிழக்கிந்திய கம்பெனி, தஞ்சை மன்னன் துளஜாஜியை கைதுசெய்து, ஹைதர், திப்பு ஆகியோரை எதிர்க்க பூனாவை ஆண்ட மராத்தியர்களின் உதவி வேண்டி, அவரையே மீண்டும் மன்னனாக்கி, அவரை கப்பம் கட்டவைத்தனர். ஹைதர், திப்பு ஆகியோர் ஹிந்து மன்னனின் ராஜ்ஜியத்தை வெற்றி கொண்டது மராத்தியரை இவர்களுக்கு எதிராக தூண்டிவிட்டது. காஞ்சியையும் உள்ளடக்கி, க்ருஷ்ணா நதிவரை பரந்து கிடந்த ஹைதர்,திப்புவின் அதிகார எல்லை மேலும் விரிவடையவும், ஆங்கிலேயருக்குதவிய மாராத்தியர்கள் மீதுள்ள பகை காரணமாகவும் ஹைதர் அலி கான் பஹதுர் என்று பட்டம் சூட்டிக்கொண்ட இந்த ஹைதர் நாயக், தஞ்சாவூரின் மீது 1781ல் படையெடுத்தான். கம்பெனி படை கலோனல் ப்ரைத்வைட் முன்னிலையில் இவரை தடுக்க முயன்று தோல்வியுற்றார். தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னன் துளஜாஜியும் ஹைதரின் ஆணைக்கு கட்டுப்படுவதாக அறிவித்தபோது, ஹைதர் தஞ்சையையும் அதைச்சுற்றியுள்ளத்தனை ஊர்களிலும் மாபெரும் கொள்ளையை நிகழ்த்தினான். 1780களில் நடந்த கொள்ளைகளினால் தஞ்சை பகுதியின் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்பட்டது. அடுத்த இருபது வருடங்கள் மிகக் கடுமையான பஞ்சத்தில் தஞ்சை இருந்துவந்தது. இந்த கால கட்டத்தை ஹைதர் காலம் என்று இன்றும் தஞ்சை மாவட்ட பேச்சு வழக்கில் சகஜமாக காணமுடியும்.

இந்த காலகட்டத்தில் ஹைதராபாத் நிஜாமின் ஆட்சியும், விஜயநகரப் பேரரசின் பெரு வீழ்ச்சியும், தக்கான பீடபூமியில் நிகழ்ந்த பல்வேறு அரசியல் குளறுபடிகளின் காரணமாகவும், அதன் காரணமாக பரவலாக நிகழ்ந்த தொடர் கொள்ளைகள் காரணமாகவும், அதன் விளைவான பஞ்சத்தின் காரணமாகவும் மக்கள் பல்வேறு இடங்களுக்கு புலம்பெயர்தல் என்பது மிகவும் சாதாரணமான நிகழ்வானது. தமக்கு ஆதரவளிக்கக்கூடிய, தொல்லை நிகழாமல் பாதுகாக்கக்கூடிய, மத நம்பிக்கைகளை வெட்டியெறியச்சொல்லாத, பிழைப்பதற்கு வழியுள்ள இடங்களுக்கு மக்கள் இடம் பெயர்ந்தனர். இது சில நூற்றாண்டுகளாகவே மராட்டியம் தொடங்கி தென்னிந்தியா முழுவதும் நிகழ்ந்த ஒரு தொடர் நிகழ்வாகும். இப்படி இடம்பெயர்ந்து வந்தவர்களில் பல்வேறு சாதியினரும் அடக்கம்.  பிராமணர்கள் பெரும்பாலும், நதிக்கரை ஓரமாகவே தமது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தனர். க்ருஷ்ணா, கோதாவரி, காவேரி, பாலாறு, மற்றும் பல்வேறு கிளை நதிகளின் கரைகளில் அவர்கள் பல குழுக்களாக நத்தம் நிலங்களில் குடியமர்த்தப்பட்டனர். அவ்வாறு குடியமர்த்தப்பட்டவர்களில் பல்வேறு தமிழ், தெலுகு, கன்னட, மராத்தி, மலையாள மொழி பேசுபவர்களும் இருந்தனர்.

தெலுகை தாய்மொழியாகக் கொண்ட பிராமணர்கள், ஸ்மார்த்த பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்கள். அதாவது, ஸ்ம்ருதிகளையும், ஆதிசங்கரர் வகுத்த வழிகளையும் பின்பற்றுபவர்கள். கோதாவரி நதிக்கரையில் வாழ்ந்த ஆபஸ்தம்பரின் சூத்திரத்தையும், ரிக் அல்லது க்ருஷ்ண-யஜுர் வேதத்தையும் பின்பற்றுபவர்கள். ச்ருங்கேரி மடத்தை ஒட்டியிருப்பவர்கள். இவர்கள் சிவன், விஷ்ணு இருவரையும் வழிபடுபவர். இவர்களை வைதீகிகள், நியோகிகள் என இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். வைதீகிகள் வேத காரியங்களாற்றுபவர்களாகவும், கற்றலும் கற்பித்தலும் நியமமாக கொண்டவர்களுமாவார்கள். நியோகிகள் அரசாங்க காரியஸ்தர்களாகவும், நிர்வாக முறைகள் கற்று பயன்படுத்துபவர்களாகவும் பணிபுரிபவர்கள் ஆவார்கள். வைதீகி பிரிவில் வெலநாடு, தெலகான்யுலு, முலகநாடு, கர்ணகம்மலு, வேகிநாடு என பல உட்பிரிவுகள் உண்டு. இவர்கள் தங்கள் குடும்பப்பெயரும், கோத்திரமும் கொண்டு அடையாளப்படுத்திக் கொள்வார்கள். இவர்கள் தங்கள் இருப்பிடங்களை காவேரி நதிக்கரையை ஒட்டி அமைத்துக்கொண்டு தங்கினார்கள். இவர்கள் அரசாங்கப்பணிகளிலோ, அரசியல் காரணிகளோ இருந்தவர்கள் இல்லை, சனாதன தர்மத்தில் ஒழுகி வாழும் மக்களிடம் ஒட்டி வாழ்ந்தவர்களே.  கதாகாலட்சேபங்களும், பஜனைகளும் நடத்தி, பக்தி மார்கத்தைப் பரப்புவதிலும் இவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

காஞ்சி மடத்தின் வரலாற்றை பார்க்கும்போது பல கருத்துவேறுபாடுகள் வெளிப்படுகின்றன. ஆதிசங்கரர் நான்கு ஆசார்ய பீடங்களை ஏற்படுத்தி பின்னர் காஞ்சியில் வந்து தங்கி இம்மடத்தை ஏற்படுத்தினார் என்று சொன்னாலும் இது ஒரு கிளைப் பீடமாகவே பார்க்கப்படுகிறது. இம்மடம் இஸ்லாமிய படையெடுப்புக்களால் சிறிதுகாலம் கும்பகோணத்தில் இருந்து இயங்கியதாகவும் சொல்கிறார்கள். இம்மடத்தின் 59வது ஆச்சாரியராக வந்த பகவன்நாம போதேந்திர ஸரஸ்வதி (கிபி.1638- 1692) என்பவர், ராம நாம பாராயனம் என்ற முறையை பரப்பி பக்தி இயக்கத்தை முன்னெடுத்தார். இவருடன் ஶ்ரீதர அய்யாவாள் என்பவரும் தொடர்ந்து பல ஊர்களுக்குச் சென்று பக்தி இயக்கத்தை பரப்பிவந்தனர். இவர்களுக்குப் பின் வந்த மருதாநல்லூர் வெங்கடரமண தேசிகர் (கிபி 1777-1817) நாடு முழுவதும் பயனம் செய்து பஜனை பக்தி இயக்கத்தை முன்னெடுத்தார். பல இடங்களில் தனித்தனியாக கிடைத்த பாடல்களையும், பின்பற்றப்படும் வழிமுறைகளையும் ஆராய்ந்து இந்தியா முழுவதும் பரந்துவிரிந்து கிடந்த பக்தி இயக்கத்தின் அத்தனை மகான்களின் பாடல்களையும் கோர்த்து, பஜனை வழிமுறைக்குத் திட்டவட்டமான ஒரு வடிவம் கொடுத்தார்.

இந்த சம்பிரதாயத்தில் பல மொழிகளின் பாடல்கள் இடம்பெற்றிருக்கிறது என்பது நமக்குத்தெரிந்ததே. குறிப்பாக இது, தமிழ், தெலுகு, கன்னட, மராத்தி, குஜராத்தி,  மற்றும் அவ்தி, ப்ரிஜ்பாஷா, சம்ஸ்க்ருதம் போன்ற மொழிகளில் அமைந்த பாடல்களை சேர்த்திருக்கின்றார். இந்த பஜனை முறைமையை ஏற்படுத்திய மருதாநல்லூர் வெங்கடரமணர் அப்போது தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னருக்கு ஆன்மீக வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறார். மேலும் மன்னரது உதவியோடே போதேந்திரரது அதிஷ்டானமும் உருவாக்கப்பட்டது. அரசாங்கத்தின் அனுகூலமும் இந்த முறைமையை முன்னெடுக்க அவருக்கு இருந்திருக்கிறது என்றே முடிவு செய்யப்படவேண்டியுள்ளது.இவர் உருவாக்கி அளித்த தக்‌ஷின சம்ப்ரதாய பஜனை முறைமையையே இன்று வரை பிராமனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். மிகச்சமீபத்தில் வாழ்ந்த ஹரிதாஸ் கிரி போன்றவர்கள் இதை மீட்டுருவாக்கம் செய்து அளித்தவர்களாவார்கள். இன்றும் பிரபலாக இருக்கும் க்ருஷ்ணப்ப்ரேமி, உடையாளூர் கல்யாணராமன், விட்டல்தாஸ் மஹராஜ், கணபதி துகாராம் மஹராஜ் போன்றவர்கள் இவ்வடிவத்தையே கையாண்டு வருகிறார்கள்.

இதே காலகட்டத்தில், அருணாசல கவி (1711 – 1779), தஞ்சை மாவட்டத்து தில்லையாடியில் பிறந்து ராமநாடகப் பாடல்களைப் புனைந்தார், மாரிமுத்தாப்பிள்ளையும் (1717-1787)  இதே காலகட்டத்திலேயே வாழ்ந்து பாடல்கள் எழுதினார். பாபவிநாச முதலியாரும் (1650-1725) இந்த காலகட்டத்தில் வாழ்ந்து தமிழில் பல பாடல்கள் இயற்றி, கீர்த்தனை வடிவத்தை தமிழில் முன்னெடுத்தனர். இவர்களுடன் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முத்துத்தாண்டவரையும் இணைத்து தமிழ் நால்வர் என்று சொல்லும் வழக்கம் உண்டு. தர்மபுரம் மடம் அமைப்புகள் அருணாசல கவிக்கு தமிழ் கற்கவும், இவரது பாடல்களை பரப்பவும் ஓரளவு உதவிசெய்தது. இதுபோலவே பல ஆதீனங்களும் தங்களால் இயன்ற அளவு, தமிழ் வளர்ச்சிக்கும், பக்தி மார்க்கத்தை வளர்ப்பதற்கும், சேவை செய்தன. இவைகள் பல சமூக மக்களுக்கு ஒரு தொடர்புப்புள்ளியாக இருந்துவந்தன. அருணாசல கவி தஞ்சை படைகளுக்கு, ஆற்காடு நவாபின் படையெடுப்பின்போது வீரமூட்டும் வகையில் பாடி அவர்களை தெம்பூட்டினார் என்று ஒரு செவிவழிச் செய்தியும் உண்டு.

தென்னிந்திய சமூகம் போர்களாலும், தொடர்கொள்ளைகளாலும், பஞ்சங்களாலும், அரசியல் சூழ்ச்சிகளாலும், துரோகங்களாலும், வஞ்சகங்களாலும் அலைகிழிக்கப்பட்டு, மக்கள் பஞ்சம் காரணமாகவும், பொருள்தேடியும், வாழ வழிதேடியும் பரவலாக புலம்பெயர்ந்துகொண்டிருந்த காலத்தில், புதிய அரசுகளும், கும்பினிகளும், ப்ரெஞ்சு காலனிகளும், டச்சு காலனிகளும் காலூன்ற முயற்சிகள் செய்துகொண்டிருந்த காலத்தில் – நமது தென்னிந்திய செவ்வியல் இசையின் மிக முக்கிய ஆக்கங்கள் உருவாக்கப்பட்டன. பெரும் அழிவுகள், இக்கட்டுகள் நேரும்போது ஒரு சமூகம் கலையை உயர்த்திப்பிடிக்கிறது, அதன் ஆன்மாவின் குரலை எதிரொலிக்கிறது என்று சொல்லலாம்.

1767ஆம் வருடம் மே 4ஆம் தேதி தெலுகு மொழியை தாய்மொழியாகக் கொண்ட, வைதீகி பிரிவு-முலகநாடு உட்பிரிவைச்சார்ந்த, புலம்பெயர்ந்த காகர்ல ராமப்ரஹ்மத்திற்கும், தஞ்சை அரசவையில், கவிஞராகவும் பாடலாசிரியராகவும் இருந்த கிரிராஜ கவியின் மகளான சீதம்மா என்பவருக்கும் மூன்றாவது மகனாக காகர்ல த்யாகப்ரஹ்மம் பிறந்தார்.

குறிப்பு:  காகர்ல த்யாகராஜரைக்குறித்துத்தான் இந்த கட்டுரை. இவர் குறித்த வரலாற்று குறிப்புகள் எதுவும் திட்டவட்டமாக பதியப்படவில்லை. அவரது சீடர்களான வாலாஜாப்பேட்டை வெங்கடரமணர் எழுதிய குறிப்புக்களும், சமீபத்தில் டி. எஸ். சுந்தரேச சர்மா பக்தி நோக்கில் சம்ஸ்காரம், பக்தி, வாழ்கை நெறி என்ற குறிக்கொளை முன்னிறுத்திய குறிப்புக்கள் போன்றவையே கிடைக்கின்றன. அவரது பாடலைக்கொண்டு அவரது வாழ்க்கையை நிர்மாணிக்க முயன்ற சில கதைகளும், சில “அதிகாரப்பூர்வமான” வரலாறுகளும் கிடைக்கிறது.

(தொடரும்)

சங்கீத சீசன் அல்லது நீ உருப்பட மாட்டே!!

பட்டுப்புடவை சரசரக்க மாமிகள் வைரக்கல் தோடும், எட்டுக்கல் பேசரியும் போட்டுக்கொண்டு பரபரப்பாகவும், மயில்கண் வேஷ்டியும், விசிறி மடிப்பு அங்கவஸ்திரமும், நெற்றியில் விபூதியும், கோல்ட் ஃப்ரேம் கண்ணாடியும், கடைவாயில் வழியும் தம்பூலமுமாக மாமாக்கள் மாமிகளின் பின்னாலும், சில மேல் வர்க மாமிகள் கஞ்சி போட்டு விரைப்பாக்கப்பட்ட டிசைனர் காட்டன் புடவைகள், கோல்ட் வாட்ச் கட்டிக்கொண்டும், அவர்களை அடுத்து அடக்க ஒடுக்கமாக, அவர்களின் மகனின் குழந்தையை பார்க்க அமெரிக்கா போனபோது வாங்கிய சாயம் போன ஜீன்ஸும், டைட்டான டீ ஷர்ட்டும் அனிந்து மேல் தட்டு மாமாக்களும், குறுந்தாடி வைத்த, கடவுளைத்தேடுகிறார்களோ என்று நினைக்கக்கூடிய வகையில் ஆகாயத்தை மட்டுமே பார்க்கும், புகை ஊதி கறுத்த உதடுகளுடைய, உயர்கல்வி படித்த, லேசான எகத்தாளம் கூடிய கோனல்வாய் சிரிப்பையே எப்போதும் அளிக்கும் நவநாகரிக இளைஞர்களும், கிட்டத்தட்ட பெண்பார்க்கும் நிகழ்ச்சிக்கு வருவதுபோல அள்ளித்தெளித்த மேக்கப்பும், விசிறிய செண்ட்டுமாக யுவதிகளும், ஓரமாக சில பாவம் கதர் தட்டுவேட்டி கிழங்களும், எடிட்டரின் தொல்லை தாங்காமல் அவருக்காக குறிப்பெடுக்க வந்த ரிப்போர்ட்டர்களும், அம்மாமிகளும், மாமாக்களும் போக நிகழ்ச்சிகளை ஸ்பான்ஸர் செய்யும் இசைக்கும் அவருக்கும் ஸ்நானப்ராப்தி கூட இல்லை என்று எந்தக்கோவிலிலும் கற்பூரம் அடித்து சத்தியம் செய்ய சாத்தியம் உள்ள பட்டு சட்டை ப்ரதிநிதிகளும், அறிவுஜீவிக்களை தாண்டவமாடும் முகத்தோடு, எல்லாவற்றிற்குமே “ஐ நோ” சொல்லும் பாவத்தில் சபா செகரட்ரிகளும், சீசனுக்காக மட்டுமே க்ரெடிட் கார்டும், டாலருமாக இந்தியா வரும் என்.ஆர்.ஐகளும்,அவர்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்ட தற்காலிக சபாவின் அமைப்பாளர்களும், விருதுகளுக்கு பெயர் தேடிக்கொடுக்கும் க்ரியேடிவ் குழுவும், பெரும்பாலும் புரியாத மொழியில் பாடும் வித்வான்களும், ஸ்வராலங்காரத்தை விட தேஹாலங்காரத்தில் கவனமுடைய மேடையை ப்ராஹ்மன ஃபேஷன் ஷோ மேடையாக மாற்றும் விதூஷிகளும், தமிழ்ல பாபனாஷம் ஷிவன் பாட்டு ஒன்னு பாடப்போகிறேன் என்று கூவும் குயில்களும், எப்போதுமே மலச்சிக்கல் வந்ததுபோல முகத்தை வைத்துக்கொண்டு, எப்போது என்னை விரட்டிவிடுவார்களோ என்ற கவலையிலேயே நடுக்கத்தோடு நின்றுகொண்டிருக்கும் பார்ப்பனராக தன்னை காட்டிக்கொள்ள முடியாதவரும், உண்மையிலேயே சங்கீதம் தெரிந்த மிகச்சிலரும், இதை எப்படி ரிக்கார்ட் செய்து காசாக்கலாம் என்று திரியும் வியாபாரிகளும், சங்கீதத்தை விட மிக முக்கியமான விஷயங்கள் நிறைந்த சபா கேண்டீன்களும், நிறம்பி வழியும் சென்னை சங்கீத சீசன் குறித்து நானும் எதாவது எழுதித்தான் ஆகவேண்டும் என்பது என் விதி. ஆண்கள் பெண்கள் தவிர இதில் சொல்லாமல் விட்ட இசை விமர்சகர்கள் என்ற ஒரு குழுவும் உண்டு. இசை விமர்சனங்கள் பற்றியும், இசை அனுபவங்கள் பற்றியும் விரிவாக எழுதவேண்டும் என்ற ஆவல் சில நாட்களாக இருந்துவருகிறது, அதை நடைமுறைப்படுத்தியும் பார்த்துவிடவேண்டும் என்ற ஆவலில் தொடங்குகிறேன்.

நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகெடமி விருது

நாஞ்சிலாருக்கு இந்த விருது கிடைத்திருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.  சூடிய பூ சூடற்க என்ற தொகுப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. சரி.. இனிமேலாவது இதை வாங்கிப்படிக்கலாமல்லவா?

புத்தகம் வாங்க : http://tinyurl.com/27z8nev (உடுமலை)

கோவையில் ஆசானது தலைமையில் அவரது இல்லத்துக்கு சென்று வாழ்த்து கூறினோம். மிகப்பெரிய இசை நூலகம் வைத்திருக்கிறார். கமர்ஷியல் சிடிக்களும், கேசட்களும். ஆனாலும், இசையின் மீது அலாதியான ஆர்வம் இல்லாவிட்டால் இது சாத்தியமே இல்லை. இசை கேட்கக்கூடிய இலக்கியவாதியா என்று ஆச்சரியப்பட்டுப்போனேன்.

அவரது சொந்த நூலகத்திலிருந்து சிலபல புத்தகங்களை திருடலாமா என்று யோசித்தேன். ஆசானின் இருப்பு என்னை தடுத்தாட்கொண்டது என்றுதான் சொல்லவேண்டும்.  நாஞ்சில் இதுவரை நான் சந்தித்ததில் மிக மிக நேர்மையான மனிதர் அடுத்தமுறை வரும்போது சில புத்தகங்கள் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

ஜெயமோகன், எம்.எஸ், வேதசகாயகுமார், ஈரோடு க்ருஷ்ணன், கோவை அருண், கோவை த்யாகு, கடலூர் சீனு, கோவை சுரேஷ், மற்றும் பலரும் வந்திருந்தனர். தொடர்ந்து தொலைபேசி அழைப்புக்கள் வந்துகொண்டேயிருந்தது.  இவர் இந்த விருதை நிராகரிப்பதற்கான அத்தனை முகாந்திரங்களும் இருந்தபோதும், ரிஸ்க் எடுத்து இவருக்கு இவ்விருதை பரிந்துரைத்த குழுவினருக்கு நன்றி. 🙂

%d bloggers like this: